No icon

திருத்தந்தை

நம்பிக்கையில் நிலைத்திருக்க செபமே மருந்து

நமது நம்பிக்கை உறுதியாய் இருப்பதற்கு எப்போதும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 16 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, ஞாயிறு நற்செய்தி வாசகமான “நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் உவமையை” (லூக்.18,1-8) மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, கடவுளன்பு, அயலவர் அன்பு ஆகிய இரு மிக முக்கியமான கூறுகளில் நாம் வாழ்வில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்” பற்றிய உவமையில், “மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” (டும 18:8) என இயேசு எழுப்பிய கேள்வியை, இன்று  நாமும் நம்மையே கேட்டுக்கொள்ளலாம் என்றுரைத்த திருத்தந்தை, பல போர்கள், வறுமை. சமத்துவமின்மை ஆகியவற்றையும், அதேநேரம், வியக்கத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மக்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பதையும் இயேசு காண்பார் எனக் கவலையோடு கூறவேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

ஆயினும், தங்கள் வாழ்வில் கடவுளை மையமாக வைத்துள்ள மக்களை ஆண்டவர் காணவேண்டும் என்பதே மிக முக்கியம் என்றுரைத்த திருத்தந்தை, நம் இதயங்களில் இருப்பவை என்ன? நம் முன்னுரிமைகள் எவற்றில் உள்ளன? போன்றவை குறித்து வாழ்வைப் பரிசோதித்து பார்ப்பது முக்கியம் என்று கூறியுள்ளார்.

எப்போதும் செபியுங்கள்

கடவுளை மறந்து இரண்டாம்தரக் காரியங்கள் மீது மிகுந்த கவலையோடு இருக்கையில் அவை நமக்குப் பெரும் சுமையாய் மாறுகின்றன என்பதை உணரவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, வெதுவெதுப்பான நம் நம்பிக்கையை மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்குவதற்கு இயேசு இன்று நமக்கு ஒரு பதில் தருகிறார், அதுவே இறைவேண்டல் என்று கூறினார்.

தவறாமல் செபிப்பது, நம் ஆன்மாக்களை நல்ல நிலையில் பாதுகாத்து வைக்கும் எனவும், வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்குச் சீரான தண்ணீர் தேவைப்படுவதுபோல, நம் ஆன்மாக்களுக்கு செபம் அவசியம் எனவும் உரைத்த திருத்தந்தை, அதேநேரம், செடிக்கு வெள்ளம் போன்று நீரை நிரப்பக்கூடாது, அவ்வாறு நீரை நிரப்பிவிட்டு, பின்னர் நீண்ட நாள்களுக்கு நீர் இல்லாமல் இருந்தால் அச்செடி வாடிவிடும் என்று கூறியுள்ளார்.

தவறாமல் செபிக்கவேண்டும் என்பதற்கு, சிலநேரங்களில் தவறாமல் மருந்து எடுப்பதை  எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, நம் உடல்நலத்திற்கு சரியான காலத்தில் மருந்து எடுப்பது நல்லது என்றும், தினமும் கடவுளுக்கென நேரம் ஒதுக்குவதன் வழியாக, கடவுள் நம் வாழ்வில் நுழையமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மனந்தளராமல் செபிக்கவேண்டும்

இதற்காக செபத்திற்கு நேரம் ஒதுக்கும் துறவு இல்லங்களில் நாம் வாழவேண்டிய அவசியம் கிடையாது என்றும், எளிய சுருக்கமான செபங்களை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருக்கலாம் என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

காலையில் கண்விழித்தவுடன், “ஆண்டவரே உமக்கு நன்றி, இந்நாளை உம்மிடம் அர்ப்பணிக்கின்றேன்” என்று சொல்லலாம். ஒரு வேலையைத் தொடங்குமுன்பு “தூய ஆவியே, வாரும்” என அடிக்கடி சொல்லலாம். ஒரு காரியத்திலிருந்து மற்றொன்றைத் தொடங்குவதற்குமுன் “இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன், உம்மை அன்புகூர்கிறேன்” எனக் கூறலாம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

செபம் வழியாக ஆண்டவரோடு தொடர்பு

இத்தகைய சிறிய செபங்களை, நாம் அன்புகூர்பவர்களுக்காகவும் சொல்லலாம், அதன்வழியாக நம் இதயங்கள் ஆண்டவரோடு தொடர்பில் இருக்கும் எனவும், ஆண்டவர் அளிக்கும் பதில்களை வாசிக்கவும் நினைவில் வைக்கவும் வேண்டும், அப்பதில்களை நற்செய்தியில் காணலாம் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனந்தளராமல் எப்போதும் செபிக்கும் கலையை அன்னை மரியா நமக்குக் கற்றுத்தருவாரக என்றுரைத்து  மூவேளை உரையை நிறைவுசெய்தார்.

Comment