No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இறைவார்த்தைகளின் துணைகொண்டு சோதனைகளை வெல்ல முடியும்

பிரிவினைகளை ஊக்குவிக்கும் சாத்தானின் சோதனைகளை பாலைவனத்தில் இயேசு வெற்றிகண்டதை பின்பற்றி, நாமும் இத்தவக்காலத்தில் நம் ஆன்மீக சோதனைகளை வெற்றிகொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ், பிப்ரவரி 26 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார்.

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் விசுவாசப் பயணத்தில் எப்போதும் உதவத் தயாராக இருக்கும் இறைவனில் நம் முழு நம்பிக்கையை வைத்து நடைபோடுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

சாத்தானால் இயேசு சோதிக்கப்பட்டதைப் பற்றி எடுத்துரைக்கும் நற்செய்தி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நற்செய்தி பகுதி, நாமும் இயேசுவும் ஆன்மீக வாழ்வில் எதிர்கொள்ளும் போராட்டங்களையும், இறைவார்த்தைகளின் துணைகொண்டு சோதனைகளை வெல்ல முடியும் என்பதையும் விவரிப்பதாக உள்ளது என்றார். இறைத் தந்தையுடனும் தூய ஆவியாருடனும் அன்பில் இணைந்திருக்கும் இயேசுவை இறைத்தந்தைக்கு எதிராக பிரிக்க சாத்தான் முயல்கிறது என்ற திருத்தந்தை, இயேசுவை சோதிக்க சாத்தான் பயன்படுத்திய மூன்று தீய வழிகள் குறித்தும் விளக்கமளித்தார்.

உலகாயுதப் பொருள்களில் தன்னையிழத்தல், இறைவிசுவாசத்தில் நம்பிக்கையிழந்து சோதித்துப் பார்த்தல், உலக அதிகாரத்தின்மீது பற்று வைத்தல் என தீயோன் இயேசுவிடம் பயன்படுத்திய சோதனை குறித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனையே நம்மீதும் தீயோன் பயன்படுத்தி நம்மை தந்தையாம் இறைவனிடமிருந்தும் நம் சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் பிரிக்க முயல்கிறான் என  விளக்கினார்.

இயேசுவைப் பின்பற்றும் நாம் அவரைப்போல், தீயோனுடன் வாக்குவாதத்திலோ, சமரசப் பேச்சிலோ ஈடுபடாமல், இறைவார்த்தையின் துணை கொண்டு தீயோனை வெற்றிகொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் ஞாயிறு மூவேளை செப உரையில் முன்வைத்தார்.           

Comment