No icon

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டம்

இளைஞர்களுக்கான திருவிவிலியம் வெளியீடு

தாய்லாந்தின் பாங்காக்கில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பானது (FABC) தனித்துவம் வாய்ந்த இளைஞர்களுக்கான திருவிவிலிய பதிப்பை இக்கூட்டத்தில் வெளியிட்டுள்ளது. 'Identity: Identified, Navigating the Challenges of Life' என்ற சிறப்புப் பதிப்பை, மியாவோவின் ஆயர் ஜார்ஜ் பள்ளிப்பறம்பில், மறைபரப்பு ஆணையங்களின் தலைவர் மற்றும் மலேசியாவின் கூச்சிங் பேராயர் சைமன் போ ஆகியோர் FABC கூட்டத்தில் வெளியிட்டனர்.

இளைஞர்களுக்கான திருவிவிலியம் என்பது ஒரு புதுமையான யோசனையின் படைப்பு என்று குறிப்பிட்ட ஆயர் பள்ளிபரம்பில், “இந்த திருவிவிலியத்தை இன்னும் தனித்துவமாக்குவது என்னவென்றால், 30க்கும் மேற்பட்ட QR குறியீடுகள் இதில் உள்ளன. அவற்றை ஸ்கேன் செய்வதன் மூலம், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருமே வாழ்க்கையில் உள்ள சவால்களைப் பற்றி பேசும் வீடியோ கிளிப்புகள் மற்றும் தங்களுக்கு பிடித்த திருவிவிலியப் பகுதிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நியூசிலாந்தின் வெலிங்டனைச் சேர்ந்த கார்டினல் ஜான் டியூ, ஆசியா-பசிபிக் திருவிவிலிய ஈணையத்தின் ஆலோசகர் ஜான் பெர்கின் மற்றும் FABC  இன் மறைபரப்பு அலுவலகம் மேலும் மலேசியாவின் குச்சிங்கின் பேராயர் சைமன் பீட்டர் போ ஹூன் செங், பிலிப்பைன்ஸில் உள்ள டெய்டேயின் திருத்தந்தையின் தூதர் ப்ரோடெரிக் சோன்குவாகோ பாபில்லோ மற்றும் புருனேயின் மறைந்த கர்தினால் கார்னிலிஸ் சிம் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பினால் இளைஞர்களுக்கான இத்திருவிவிலியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான இத்திருவிவிலியம் அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் பதிப்பில் கிடைக்கும். திருத்தந்தை பிரான்சிஸ் அறிமுக செய்தியை இத்திருவிவிலியத்தில் வழங்கி இதன் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார். FABC தனது பொது மாநாட்டை அக்டோபர் 12 ஆம் தேதி பாங்காக்கில் உள்ள பான் பு வான் மேய்ப்பு மையத்தில் நற்கருணை கொண்டாட்டத்துடன் தொடங்கியது. 29 ஆசிய நாடுகளிலிருந்து 200 பிரதிநிதிகள் அக்டோபர் 30 ஆம் தேதி வரை கூடி, "ஆசியாவின் மக்களாக ஒன்றாகப் பயணம் செய்தல்" என்ற தலைப்பில் மாநாட்டின் 50 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடினர்.

Comment