No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புனித யோசேப்பு, அர்த்தமுள்ள மனித உறவுகளுக்கு முன்மாதிரிகை

அன்பு இதயங்களே, புனித யோசேப்பு, உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதின் (டிச.08,1870) 150 ஆம் ஆண்டின் நிறைவாக திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் புனித யோசேப்பு ஆண்டு (டிச.2020 - டிச.08,2021), வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 17 ஆம் தேதி, புதன் மறைக்கல்வியுரையில் புனித யோசேப்பு பற்றிய புதிய பகுதி ஒன்றைத் துவக்கினார். அதைத் தொடர்ந்து திருத்தந்தை, நவம்பர் 24 ஆம் தேதி புதன் காலையில், மீட்பு வரலாற்றில் புனித யோசேப்பின் பங்கு என்ற தலைப்பில், தன் மறைக்கல்வியுரையை வழங்கினார். கிறிஸ்மஸ் காலம் அண்மித்து வருவதால், உரோம் நகருக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகளில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இப்புதன் காலையில், முதலில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு அமர்ந்திருந்த மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசீர் வழங்கிய பின்னர், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மறைக்கல்வியுரை வழங்க திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார். அந்நிகழ்வில், முதலில் மத்தேயு நற்செய்தியின் முதல் பிரிவிலிருந்து, இயேசுவின் தலைமுறை அட்டவணை, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து* என்னும் இயேசு. (மத். 1,12-16.)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கடந்தவார நம் புதன் மறைக்கல்வியுரையில் புனித யோசேப்பு குறித்த புதிய பகுதி ஒன்றைத் துவக்கினோம். அதன் தொடர்ச்சியாக, மீட்பு வரலாற்றில், புனித யோசேப்பின் பங்கு குறித்து இன்று சிந்திப்போம். நற்செய்திகளில் இயேசுயோசேப்பின் மகனாகவும் (லூக்.3:23;4:22;யோவா.1:45;6:42), “தச்சருடைய மகனாகவும் (மத்.13:55; மாற்.6:3) சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசுவின் குழந்தைப் பருவத்தை விவரிக்கும் நற்செய்தியாளர்கள் மத்தேயுவும் லூக்காவும், அதில் யோசேப்பின் பங்கிற்கு இடமளித்துள்ளனர். இவ்விரு நற்செய்திகளில் வழங்கப்பட்டுள்ள இயேசுவின் மூதாதையர் அட்டவணைகளில், இயேசு யோசேப்பின் மகனாக குறிக்கப்படுகிறார். அதேநேரம், யோசேப்பு, இயேசுவின் உயிரியல் தந்தை இல்லை என்பதும் உறுதிசெய்யப்படுகிறது. இருந்தபோதிலும், யோசேப்பு, இயேசுவிடம், உண்மையான தந்தைமைப் பண்பைச் செயல்படுத்துகிறார். யோசேப்பு, சமுதாயத்தில், விளிம்புநிலையில் உள்ளவராகத் தெரிகின்றபோதிலும், இவர், மீட்பு வரலாறு, கடவுளின் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேறுவது ஆகியவற்றின் மையமாக உண்மையிலேயே இருக்கிறார். எனவே நாமும், நற்செய்தியின் மீட்பளிக்கும் செய்தியைப் பரப்புவதற்கு, நம் பங்கு எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும், அப்பணியை ஆற்ற நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களும், கடவுளின் மீட்புத் திட்டத்தில் ஒரு சிறப்புப் பங்கைக் கொண்டிருக்கின்றனர் என்பதையும், இது நினைவுபடுத்துகின்றது. நற்செய்தியாளர் லூக்கா, புனித யோசேப்புவை, இயேசு மற்றும் மரியாவின் பாதுகாவலராகச் சித்தரிக்கிறார். அதுபோலவே, வரலாற்றில் கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவை தொடர்ந்து இருப்பதற்கு, புனித யோசேப்பு, உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராகத் தன் பங்கை ஆற்றிவருகின்றார். மேலும், நமக்கு முன்னும், நமக்குப் பின்னும் தொடரும் மனிதப் பிணைப்புகளின் முக்கியத்துவத்தை, பலநேரங்களில் காயப்பட்டுள்ள நம் உலகிற்கு, புனித யோசேப்பின் மூதாதையர் அட்டவணை நினைவுபடுத்துகின்றது. இந்த மனிதப் பிணைப்புக்களை உறுதிப்படுத்தவும், உடன்பிறப்பு உணர்வோடு ஆற்றுகின்ற பிறரன்புப் பணிகள் வழியாக, நலிவுற்ற நம் சகோதரர், சகோதரிகளைப் பாதுகாக்கவும் வழிவகைகளைத் தேடும்போது, புனித யோசேப்பு நமக்காக, இறைவனிடம் பரிந்துபேசுகிறார் என்பதில் நம்பிக்கை வைப்போம் மற்றும் கடவுளின் மீட்புத் திட்டத்தில் அப்புனிதரது தாழ்மையான மற்றும் உண்மையான பங்கைப் பின்பற்றுவோம்.

இவ்வாறு, மீட்பு வரலாற்றில் புனித யோசேப்பின் பங்குபற்றி எடுத்துரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிமையில் வாடுவோர், புனித யோசேப்பு அவர்களை ஒரு நண்பராக, ஆதரவளிப்பவராக, உடனிருப்பவராக நோக்கலாம் என்று கூறி, புனித யோசேப்பிடம் செபித்து, தன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார்.

இந்நிகழ்வில், தங்களின் அருள்பணித்துவ வாழ்வில் அறுபது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள, இங்கிலாந்து மற்றும், கேல்ஸ் பகுதி அருள்பணியாளர்களைச் சந்தித்து திருத்தந்தை ஊக்கப்படுத்தினார்.

புனித யோசேப்புவிடம் இறைவேண்டல்

புனித யோசேப்பே

மரியாவோடும் இயேசுவோடும் பிணைப்பைப் பாதுகாத்தவரே,

எம் வாழ்வில் உறவுகளில் அக்கறைகாட்ட உதவும்.

தனிமையிலிருந்து பிறக்கும்

கைவிடப்பட்ட நிலையை எவரும் அடையாதிருக்கட்டும்.

எமக்குமுன் வாழ்ந்தவர்களின் தவறுகளை ஏற்று,

இறைபராமரிப்பு காட்டும் பாதை வழியாக,

அவர்களோடும், எம் சொந்த வரலாற்றோடும்,

நாங்கள் அனைவரும் ஒப்புரவாகுவோமாக.

கடுந்துன்பத்தில் இருப்பவர்களுக்கு, உங்களை நண்பனாகக் காட்டியருளும்.

இன்னல்நிறைந்த காலங்களில் மரியாவுக்கும், இயேசுவுக்கும் ஆதரவளித்தது போன்று

எங்களது பயணத்தில் ஆதரவாயிரும். ஆமென்.

பின்னர், இம்மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட வயது முதிர்ந்தோர், நோயாளிகள், புதுமணத் தம்பதியர், இளையோர் உள்ளிட்ட, அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்களின் மீதும், கிறிஸ்துவின் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்புமாறு செபித்து, திருத்தந்தை பிரான்சிஸ் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment