No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

புதன் மறைக்கல்வியுரை : கனவின் மனிதர் புனித யோசேப்பு

கடந்த பல வாரங்களாக புதன் மறைக்கல்வி உரைகளில் புனித யோசேப்பு குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதன் தொடர்ச்சியாக, ’புனித யோசேப்பு கனவின் மனிதர்என்ற தலைப்பில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலில், மத்தேயு நற்செய்தி இரண்டாம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார் (மத் 2,19-23).

பல்வேறு மொழிகளில் இப்பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தை பிரான்சிஸ் தன் சிந்தனைப் பகிர்வுகளைத் தொடர்ந்தார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில் இன்று, இறைவன் தன் விருப்பத்தை எவ்வாறு நான்கு கனவுகள் வழியாக புனித யோசேப்புக்கு வெளிப்படுத்தினார் என்பது குறித்து காண்போம். கடவுளின் குரலுக்கு உடனடியாக பதிலுரைத்த யோசேப்பின் மனநிலை, நம்முடைய தினசரி வாழ்வில் இறைவனின் குரலுக்கு செவிமடுக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது. புனித யோசேப்பின் முதல் கனவு, அவர் அன்னை மரியா கருவுற்றிருப்பது குறித்து அறிய வந்தவுடன் வருகிறது. அது குறித்த மன உளைச்சலில் இருந்த அவர், அக்கனவிற்குப்பின் அன்னமரியாவை தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறார். அவர் கண்ட இரண்டாவது கனவிலோ, ஏரோதின் கோபத்திலிருந்து தப்பிக்க, திருக்குடும்பத்தை அழைத்துக்கொண்டு எகிப்துக்கு தப்பியோடப் பணிக்கப்படுகிறார். எகிப்தில் இருக்கும்போதோ, மூன்றாவது கனவு வழியாக, தன் சொந்த இடத்திற்கு அஞ்சாமல் திரும்பலாம் என்பதை தெரிந்துகொள்கிறார். புனித யோசேப்பு, திருக்குடும்பத்துடன் சொந்த இடம் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த வழியில், நான்காவது கனவு வழியாக, அவர் நாசரேத்தூரில் குடியமரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார். இறைவனின் குரலுக்கு தன் உள்மனதைத் திறந்தவராக புனித யோசேப்பு செயல்பட்டது, நமக்கெல்லாம் ஒரு சிறந்த பாடத்தைக் கற்பிப்பதாக உள்ளது.   நம் வாழ்வில் நிச்சயமற்றச் சூழல்கள் நம்மை நெருக்கும்போது அதற்கு பதிலளிக்கும் ஞானத்தைக் கண்டுகொள்ளவும், அச்சுறுத்தும் நிலைகளை எதிர்கொள்ளும்போது மனவலிமையைப் பெறவும், நம்முடைய அச்சங்களை இறைவனின் தந்தைக்குரிய பராமரிப்பில் ஒப்படைப்பதற்குரிய நம்பிக்கையைப் பெறவும், இறைவன் உதவுவார்  என்பதை புனித யோசேப்பின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்றுத் தருகிறது. செபிப்பதில் சிரமங்களை அனுபவிக்கும் மக்களுக்கு, புனித யோசேப்பு, தன் பரிந்துரை வழியாக உதவுவாராக. கடவுளுக்கு மிக நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும் நம் உள்மனதை நாம் பண்படுத்தவும், இறைவிருப்பத்திற்கு நாம் சாந்தமுடன் பதிலுரைக்கவும், நம் சகோதர சகோதரர்களின் தேவைகள் குறித்து திறந்த மனதுடன் செயல்படுபவர்களாகவும் விளங்கிட, புனித யோசேப்பின் பரிந்துரை உதவுவதாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டின் அமைதிக்கான செபத்தில் அனைவரும் தன்னுடன் இணையுமாறு அழைப்புவிடுத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

 

Comment