No icon

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை - கம்யூனியோ ஞாயிறு

நவம்பர் 27, 2022 - திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அனைத்துப் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், வேதியர்கள் மற்றும் பொதுநிலையினருக்கு...

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

1. நமது விசுவாசத்தை மீட்டுருவாக்கம் செய்து, நமது நம்பிக்கையைப் புதுப்பித்து, நமது அன்பை ஆழப்படுத்திடும் காலமான திருவருகைக் காலத்தின் நுழைவாயிலில் நாம் இருக்கிறோம். இம்மானுடத்துடன் கடவுள் பகிர்ந்துகொண்ட அன்பை வெளிப்படுத்தும் மனுவுருவாக்கத்தின் உன்னத மறைபொருளை இக்காலத்தில் நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோம். கடவுள் தம் ஒரே பேறான மகனை கொடுத்ததில் அவர்தம் அன்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த காலத்தைப் போலவே, திருவருகைக் காலத்தின் இம்முதல் ஞாயிறான இன்று, இந்தியத் திரு அவையானது கம்யூனியோ ஞாயிறைக் கொண்டாடுகிறது.

2. கிராமப்புறங்களிலும் மறைப்பணித்தளங்களிலும் மேய்ப்புப் பணியை மேற்கொள்ளும் நமது அனைத்து மறைமாவட்டங்களுக்கும் துறவறச் சபைகளுக்கும் துணைபுரிந்திடவும், ஆதரவளிக்கவும், தாங்கிப்பிடித்து ஊக்கமளிக்கவும் கம்யூனியோ என்ற இந்த முன்னெடுத்தலை, இந்திய கத்தோலிக்க ஆயர்களின் கூட்டமைப்பு (CCBI), 2018 ஆம் ஆண்டு முன்னெடுத்தது. “செபத்தில் இதயங்கள்! மறைத்தூதுப் பணியில் மனங்கள்! தோழமையில் கரங்கள்!” என்பதுதான் கம்யூனியோவின் தொலைநோக்காகும். கம்யூனியோ, இந்தியாவில் உள்ள திரு அவைக்கு இறைநம்பிக்கை உருவாக்கம் மற்றும் பறைசாற்றுதலைப் பற்றார்வத்துடன் மேற்கொள்ள தூண்டுதல் தர முற்படுகிறது. இதனால், தன்னிறைவிலும் தற்சார்பிலும் ஆற்றலளித்து, நமது மறைத்தூதுப் பணிக்கான இத்தொண்டில் படைப்பாற்றல்மிக்க ஒருங்கிணைப்பிற்காக நமது பங்களிப்பைத் தந்திடுவோம்.

3. கம்யூனியோ இந்தியாவின் நோக்கங்கள் பின்வருமாறு:

(i) தேவையில் இருக்கும் நமது சகோதர சகோதரிகளுடன் தோழமையை வெளிப்படுத்தும் பொருட்டு, நம்பிக்கையாளர்களிடையே பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரத்தை உருவாக்குவது.

(ii)நம்பிக்கையாளர்கள் மறைத்தூதுப் பணிக்காகவும் மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் செபிப்பதையும் உதவுவதையும் ஊக்கப்படுத்தவும் அர்ப்பண வாழ்விற்கான இறையழைத்தலை வளர்த்தெடுப்பது.

(iii) மறைத்தூதுப் பணித்தளங்களில் தன்னார்வலர்களாகத் தொண்டாற்றிட பொதுநிலையினரைத் தூண்டியெழுப்புவது.

(iv) நம் இறைமக்களை மறைத்தூதுப் பணியார்வமிக்க சீடர்களாக்குவதற்கான உருவாக்கத்தை வளர்த்தெடுப்பதுகம்யூனியோ என்பது நம்மிடமிருந்து, நம்மால், நமக்காக உள்ளது.

4. கம்யூனியோ ஞாயிறான இன்று, ஒருவர் மற்றவருக்காகச் செபிக்கவும், மறைத்தூதுப் பணிக்காகவும் மறைத்தூதுப் பணியிலும் ஒருவர் மற்றவரை ஆதரிக்கவும் கரங்களை நாம் இணைப்போம். “நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.” என்று   இறைவார்த்தை (எபி13:16) கூறுகிறது. கம்யூனியோ மூலம் நற்செய்தி அறிவிக்கும் திட்டங்களுக்கும், மறைக்கல்வி நுணுக்கங்கள், பொதுநிலையினர் உருவாக்கம், பயிற்சி  மற்றும்  கருத்தரங்குகள், சிற்றாலயங்கள் மற்றும் பங்குத்தந்தை இல்லங்கள் கட்டமைத்தல், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் முன்னெடுப்புகள் ஆகியவற்றிற்காக நமது வளங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் தொடங்கியிருக்கிறோம்.

5. இன்று, இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்ல; ஒவ்வொருநாளும் கம்யூனியோ தினத்தைக் கொண்டாட உங்களை அழைக்கிறோம். கம்யூனியோவுடன் நீங்கள் ஒத்துழைக்க ஐந்து வழிகள் உள்ளன:

(i) ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நன்கொடை அளித்திடுங்கள்.

(ii) உங்கள் இறுதி விருப்ப ஆவணத்தில் (உயிலில்) குறிப்பதன் மூலம் இதற்கான மரபுரிமையை விட்டுச் செல்லுங்கள்.

(iii) ஒரு குருமாணவர் அல்லது துறவறப் பயிற்சி மாணவரின் உருவாக்கத்திற்கு கொடையாளராகுங்கள்.

(iv) ஒரு மறைத்தூதுப் பணிக்கு உதவிடுங்கள்.

(v) உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் கொடுத்து தன்னார்வத் தொண்டாற்றுங்கள்.

புனிதர்கள், திருநாள்கள் மற்றும் திருத்தந்தையின் செபக்கருத்துகள் பற்றிய அடிக்கடி காணொளி காட்சிகள் வழியாக கம்யூனியோ உங்கள் கரங்களையும் இதயங்களையும் வந்தடைகிறது. எங்கள் இணையதளம் (www.communio.in), வழியாக நமது மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நமது ஆயர்களை நீங்கள் அணுகலாம்.

6. திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள், நமது நற்பேறு பலன்களை கடவுள் புதுப்பிப்பதைப் பற்றி எடுத்துரைத்து, நம்மை விழித்திருக்கவும், தயாராக இருக்கவும் அறிவுறுத்துகின்றன. நாமும் நாம் என்னவாக இருக்கிறோம், என்ன கொண்டிருக்கிறோம் என்பதை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் பொருட்டு, நம்மையே நாம் திறக்க ஓர் அழைப்பாக, கிறிஸ்து பிறப்பு விழாவில், கடவுள் தனது மகனை இம்மானுடத்திற்கு கொடையாக கொடுத்தது என்பது அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டியக்கத் திரு அவைக்காக, உலக ஆயர்கள் மாமன்றம் 2021-2023க்கான கொண்டாட்டத்திற்கு நடுவே  நாம்  இருக்கிறோம். கூட்டியக்கம் என்பது ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் மறைத்தூதுப்பணி ஆகியவற்றில் வாழ்ந்து காட்டப்படுகிறது. ஒன்றிப்பில் நாம் நமது பிணைப்பை உணர்கிறோம்; பங்கேற்பில் ஒவ்வொருவருடைய கொடையை நாம் கொண்டாடுகிறோம்; மறைத்தூதுப் பணியில் பிறரை, குறிப்பாக, விளிம்புநிலையில் உள்ளவர்களை நாம் சென்றடைகிறோம். நமது திருத்தந்தை அடிக்கோடிட்டு காட்டுவதுபோலநாம் அனைவரும் இணைந்து பயணிக்கும் தோழர்கள்என்பதை இந்த கம்யூனியோ-ஞாயிறு நினைவுப்படுத்துவதாக.

7. இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CCBI) உங்களின் பெருந்தன்மைக்காகவும் தாராள கொடையுள்ளத்திற்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் இத்தருணத்தில், கம்யூனியோ - ஞாயிறை உங்கள் பங்கில், நிறுவனங்களில், துறவறச் சமூகத்தில், குடும்பத்தில் பின்வரும் வழிகளில் கொண்டாட அழைக்கிறது.

(i) கம்யூனியோ - ஞாயிறு  குறித்த விளம்பர பதாகை அல்லது அதன் இலச்சினை உங்கள் பங்கு அறிவிப்புப் பலகையிலும், பங்கின் செய்தி அறிக்கை வெளியீட்டிலும் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ளவும்; ‘கம்யூனியோஎன்று அனைவரும் பார்க்கவும் கேட்கவும் சமூக வலைத்தளப்பக்கங்களிலும் உங்கள் சுயவிவர முகப்புப் பக்கங்களிலும் வைக்கலாம்.

(ii) மறைத்தூதுப் பணி மற்றும் மறைத்தூதுப் பணியாளர்களுக்காக செபிக்க அர்த்தமிக்க திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திடலாம்.

(iii) உங்கள் வளங்கள், நேரம் மற்றும் ஆற்றல் மூலம் கம்யூனியோவிற்கு பங்களிப்பதாக உறுதிமொழி எடுக்கலாம். இன்றே, இங்கே, இப்பொழுதே தொடங்குங்கள்!

மறைத்தூதுப்பணிகளின் அரசியான புனித கன்னி மரியாவும், அகில உலகத் திரு அவையின் பாதுகாவலராம் புனித யோசேப்பும், நமக்காகப் பரிந்து பேசுவார்களாக.

(CCBI  பொதுச் செயலகம், நவம்பர் 1, 2022, அனைத்துப் புனிதர்களின் பெருவிழா அன்று வெளியிடப்பட்டது)

+ மேமிகு கர்தினால் பிலிப் நேரி ஃபெரோ

தலைவர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டப் பேராயர்

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

துணைத் தலைவர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

+ மேதகு பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூட்டோ

டெல்லி உயர் மறைமாவட்டம்

பின் குறிப்பு:

கம்யூனியோ-ஞாயிறு அன்று (நவம்பர் 27, 2022) இலத்தீன் திருவழிபாட்டு முறையைப் பின்பற்றும் 132 மறைமாவட்டங்களின் அனைத்துப் பங்குகளிலும் துறவற இல்லங்கள் மற்றும் நிறுவனங்களிலும் இந்தச் சுற்றறிக்கையை வாசித்து அதன் உள்ளடக்கங்களை விளக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

Comment