No icon

மக்கள் இயக்கங்கள் இன்று -  ஓர் இறையியல் மீள்பார்வை

(தமிழ் இறையியல் மன்றம் நடத்திய கருத்தமர்வு)

26-27.10.2022 புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில், திருச்சி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில், “மக்கள் இயக்கங்கள் இன்று - ஓர் இறையியல் மீள்பார்வை” என்ற கருப்பொருளில் தமிழக அளவில் நடைபெற்ற கருத்தமர்வில் ஏறக்குறைய 250 உறுப்பினர்களும், ஆதரவாளர்களும்  பங்கேற்றனர்.

காலை 10.00 மணிக்கு தொடக்க வழிபாடு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழ் இறையியல் மன்றத் தலைவர் அருள்பணி. அ. இராய் இலாசர் அமர்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மக்களின் நல்வாழ்வைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய, மக்களைச் சீர்படுத்த வேண்டிய இயக்கங்கள் பெரும்பாலும் இன்று மக்களைப் பிரித்தாளும் இயக்கங்களாகவே உருவெடுத்துள்ளன. எனவே, நாம் இறையியல் கண்ணோட்டத்தில் களப்பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து, புனித பவுல் குருத்துவக் கல்லூரித் தலைவர் அருள்பணி. அ. ஆண்ட்ரு டீ ரோஸ், மாற்றத்தால் உருவாகின்ற, மாற்றத்தை உருவாக்குகின்ற மக்கள் இயக்கங்கள் எவ்வாறு இறைவனால் இயக்கப்படுகின்ற திரு அவையோடு இணைந்து செயல்பட வேண்டுமென்றும், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் இயக்கங்களை எவ்வாறு இறை ஆற்றலோடு எதிர்க்கவேண்டும் என்பதைப் பற்றியும், தனது வாழ்த்துரையில் எடுத்துக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து, வாழ்த்துரைகள் வழங்க வந்த தென்னிந்தியத் திரு அவைகளின் பேராயர் சந்திரசேகரன், தமிழ் நற்செய்தி லூத்தர் திரு அவைகளின் பேராயர் டேனியல் ஜெயராஜ், இருவரும் நமது கிறித்தவச் சமூகம் தங்களுக்குள் உள்ள அவை மரபுகள், வித்தியாசங்களை ஒதுக்கிவிட்டு எல்லாத் திரு அவையினரும் இணைந்து செயல்பட்டாலன்றி, நமது எதிர்காலம் பெரிய கேள்வியாகிவிடும் என்று கூறி, ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தனர்.

அடுத்ததாக, அருள்பணி. அ. மரிய அருள்ராஜா சே.ச கருப்பொருளுக்கான விளக்கவுரை அளித்தார். மக்கள் வரலாறு தொடங்கிய அன்றே மக்கள் இயக்கங்கள் தொடங்கி விட்டதாகவும், இந்தியாவில் ஆயிரம் இயக்கங்கள் இருந்தும் புரட்சியை, மாற்றத்தை ஏற்படுத்த முடியாததற்கான  பின்வரும் 10 காரணிகளைக் கூறினார்: 1). தலைவிதி கர்மா கொள்கை 2). மரபின் மீது ஏற்பட்டுள்ள மட்டற்றபோதை 3). அக மணமுறை, ஆணின் அடக்குமுறை 4). மரபுவழி தூய்மை தீட்டு, நிரந்தர தூய்மை தீட்டு 5). தொழில்வகைகளில் படிநிலை ஏற்றத்தாழ்வு 6). மனித உரிமை மீறல் 7). வலிமையுள்ளோர் வைத்ததுதான் சட்டம் 8). உயிரின் கருவிலேயே உயர்வு தாழ்வு

9). அகிம்சை என்பது ஆளுமை வர்க்கத்தின் வழியாக வரும்போது அதுவே இம்சையாகி விடுகிறது 10). ஊழல் இயல்பாக்கப்பட்டுள்ளது, மிரட்டி அல்லது பரிசு கொடுத்து பணியவைப்பது. மக்களை அரவணைக்கும், ஆற்றல்படுத்தும், ஈகை நிறைந்த, பண்பாடு கொண்ட மக்கள் இயக்கங்கள் நம் கனவாக அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அடுத்ததாக, கருத்தரங்கின் இயங்குமுறை குறித்து தமிழ் இறையியல் மன்றச் செயலர் அருள்பணி. மை. வில்லியம் லூர்துராசு விளக்கியுரைத்து இரண்டுநாள் நடைபெற்ற கருத்தரங்கினை ஒருங்கிணைப்புச் செய்தார்.

முதல் அமர்வில், “மக்கள் இயக்கங்கள் ஒரு மறு வாசிப்பு” என்ற தலைப்பில் சென்னை தமிழ்த் தேசிய விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமிகு. தியாகு உரையாற்றினார். தனது 15 ஆவது வயதில் தொடங்கிய அரசியல் ஈடுபாடு, 60 ஆண்டுகாலப்பட்டறிவு, வாழ்வின் வெற்றி, தோல்விகள், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்ட வாழ்வு பற்றியும், தன்னைப் போன்று மக்கள் இயக்கங்களில் இணைந்து பணியாற்றி, இன்றும் போராடிக் கொண்டிருப்பவர்கள் பற்றியும் கூறினார். மக்கள் நலனுக்காகவே சிந்தித்து, செயல்பட்டு, உடல், பொருள், ஆவியைக் கொடுத்து மீண்டும் மீண்டும் போராடி கொண்டிருக்கும் மக்கள் இயக்கங்களில் எப்படி மக்களை திரட்டலாம்? என்பதற்கான ஆலோசனைகளை எடுத்துக் கூறினார். இந்த அமர்வை, சென்னை அருள்பணி. குழந்தைசாமி க.ச. அவர்கள் நெறியாளுகை செய்தார்.

இரண்டாம் அமர்வில் “பொது வெளியை இன்று சீர்குலைக்கும் சமய வகுப்பிய (வகுப்புவாத) இயக்கங்கள்” என்ற தலைப்பில் மதுரை அருள்பணி. பால் மைக் சே.ச. அவர்கள் சீர்குலைக்கும் வகுப்பிய இயக்கங்களைப் பட்டியலிட்டு உரையாற்றினார். நம்மைப் பிணைக்கும் சக்திகளாக, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருப்பது 1) இறையாண்மை, 2) சமத்துவ சமதர்மம், 3) சமயச் சார்பின்மை,

4) மக்களாட்சி குடியரசு. இந்த உத்திரவாதத்தினால் தான் நாம் இன்று ஒற்றுமையாக இருக்கிறோம். ஆகவே, சமத்துவம், சமயச் சார்பின்மையைக் காக்க ஒன்றுபட வேண்டும் என்றார். சிவகங்கை அருள்பணி. இம்மானுவேல் தாசன் அவர்கள் இந்த அமர்வை நெறியாளுகை செய்தார்.

மூன்றாம் அமர்வில் “மக்கள் இயக்கங்கள் இன்று சந்திக்கும் அறைகூவல்கள்” என்ற தலைப்பின்கீழ் சென்னை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார். “இயேசுவின் கனவுதான் தன் கனவு” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைப்பற்றியும், தேச வளங்கள், வளர்ச்சியை எல்லா மனிதருக்கும் சமமாக பங்கிடப்படுவதைக் கண்காணிப்பதே நம் வேலை என்றார். அரசியல்வாதிகளின் வேலை, சட்டமியற்றி அதிகாரிகளைக் கண்காணிப்பதே நம் வேலை அரசியல்வாதிகளைக் கண்காணிப்பதே. இன்று மக்களுக்கும் அரசியல்வாதி களுக்கும்  தொடர்பு இல்லாத காரணத்தினால்தான், மக்கள் நலனுக்கான மக்கள் இயக்கங்கள் தேவைப்படுகின்றன. பல்வேறு இயக்கங்களும் ஒவ்வொரு தேவையை முன்னிறுத்துகின்றன. தேவை ஏற்படும்போது அவ்வியக்கங்கள் ஒன்றுபடுகின்றன. இந்த அமர்வை திருச்சி திருமிகு. தனசீலி திவ்யநாதன் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

“மக்கள் இயக்கங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பங்கேற்பு: ஓர் இறையியல் தேடல்” என்ற தலைப்பில் சென்னை அருள்பணி. அலங்காரம் சே.ச. உரையாற்றினார். இயேசுவின் கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகளை அவர் எடுத்துக்கூறி இறையாட்சி வாழ்வில் தொடர் மாற்றங்கள் தேவை என்றும், இயேசு மக்களோடு கொண்ட உறவு பல சிறுசிறு மக்கள் இயக்கங்களாக உருமாறியதையும் சுட்டிக்காட்டினார். ஏழைக்காக உழைப்பவரோடு இணைந்து செயல்பட்டு இறையாட்சிக் குழுமங்களை உருவாக்க கீழ்காணும் 10 வழிகளை எடுத்துக் கூறினார்:

1. மக்கள் இயக்கங்களை இறைமதிப்பீடுகளின்படி கட்டியெழுப்புவது.

2. அரசியலமைப்புச் சட்டங்களை இறையாட்சியோடு இணைத்து மதிப்பீடு செய்வது.

3. பல்சமய உரையாடல் நடத்துவது

4. ஏனைய திரு அவையினரோடு இணைந்து பயணிப்பது.

5. எல்லா மக்கள் இயக்கக் கட்சிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது.

இந்த அமர்வினை மதுரை அருள்பணி. ஆனந்தம் அவர்கள் நெறியாளுகை செய்தார்.

“இறையாட்சி இயக்கமும், மக்கள் இயக்கங்களும் இறை நம்பிக்கையாளர்களின் வாழ்வு நெறியும் செயல்பாட்டுக்கான பரிந்துரைகளும்” என்ற தலைப்பின்கீழ் குழு ஆய்வு மேற்கொள்ளும் இயங்குமுறை குறித்து தூத்துக்குடி அருள்பணி. ச.தே. செல்வராசு அவர்கள் விளக்கமளித்தார். இன்றைய சமூகத்தை பொருளாதாரம், பண்பாடு என்ற பின்பலத்தில் உற்றுநோக்கிப் பார்க்கவேண்டும். இயேசு சென்ற இடமெல்லாம் சிறுசிறு குழுக்களை உருவாக்கி மாற்றத்திற்கான பார்வை, விழுமியம், செயல்பாடுகளை நமக்கு கொடுக்கிறார். நம் ஒவ்வொருவரையும் அதேபோல் செயல்படவும் அழைக்கிறார். பல குழுமங்களை உருவாக்கவும் அழைப்பு விடுக்கிறார். இயேசு தொடங்கிய சமபந்தி தோழமை, சமத்துவ உணவும் சமத்துவ உறவும் சேர்ந்ததே. இந்த சமபந்தி தோழமையின் உச்சக்கட்டமே இன்றைய திருப்பலிக் கொண்டாட்டங்கள் என்றார்.

வந்திருந்த அனைவரும் 6 குழுக்களாகப் பிரிந்து, குழு விவாதம் நடத்தி ஆலோசித்தனர். குழுக்களின் கலந்தாய்வு அறிக்கையினை கோட்டார் அருள்பணி. தே. அல்போன்சு ஒன்றிணைத்து இறுதியான பரிந்துரைகளையும் தீர்மானங்களையும் விளக்கமாக எடுத்துக்கூறினார். இறுதியாக, தமிழ் இறையியல் மன்றச் செயலர் அருள்பணி. மை. வில்லியம் லூர்துராசு அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் குறிப்பாக, புனித பவுல் குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி கூறிட இறுதிப் பாடலுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

Comment