No icon

பிறந்த ஊரான விரகாலூரில் ஸ்டான் சுவாமிக்கு அஞ்சலி

அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு - மணி மண்டபத்திற்கு அடிக்கல் - நினைவேந்தல் பொதுக்கூட்டம்

அருள்தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் பழங்குடி மக்களின் உரிமைக்காய் தன் வாழ்வை அர்ப்பணித்து, தன் உயிரை தியாகம் செய்துள்ளார் என்பது, வரலாறு பேசும் உண்மை. அவர் நம்மை விட்டு பிரிந்து ஓராண்டு காலம் நிறைவு பெறும் இந்நிலையில், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, அவரது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், விரகாலூரில் ஜூலை 5 அன்று, மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மற்றும் விரகாலூர் மண்ணின் மைந்தர்கள் முயற்சியிலும், முன்னெடுப்பிலும் சிறப்பாக நடைபெற்றது.

அன்று காலை 7.30 மணிக்கு அருள்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுத் திருப்பலி சென்னை மறைமாநில இயேசு சபை தலைவர் அருள்பணி. செபமாலை ராஜா சே.. தலைமையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் பங்கேற்ற கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. ஸ்டான் சுவாமி கண்ட உரிமைக்கான, சமூக நீதிக்கான, அரசு பாசிச பயங்கரவாதம் மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கனவு நம் வழியாக செயலாக்கம் பெற வேண்டும் என்றும், ஸ்டான் சுவாமி தனக்குள் எழுப்பிய கேள்வியானஏன் இப்படி இருக்கக்கூடாது?’ என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டும் என்றும் அருள்பணி. சந்தனம் சே.. மறையுரையில் சிந்திக்க அழைத்தார்.

திருப்பலி நிறைவில் ஸ்டான் சுவாமியின் நினைவுப் பொருட்களாக, விரகாலூர் ஆலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அவர் கடைசியாக பயன்படுத்திய திருச்சிலுவை மற்றும் துண்டுக்கு வணக்கம் செலுத்தப்பட்து.

ஆலயத்திற்கு வெளியே ஸ்டான் சுவாமி நினைவுத்தூண் சதுக்கம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த, செபத்துடன் திறந்து வைக்கப்பட்து.

I am not a silent spectator என்ற ஸ்டான் சுவாமியின் ஆங்கிலப் புத்தகம், பேராசிரியர் தேவசகாயம் அவர்களின் தமிழ் மொழி பெயர்ப்பில், ‘நான் மௌன சாட்சி அல்லன் என்ற புத்தகம் திண்டுக்கல் வைகறை பதிப்பகத்தால் அச்சிடப்பட்டு, அருள்பணி. செபமாலை ராஜா சே.. வெளியிட, விரகாலூர் பங்குத்தந்தை ஹென்றி புஷ்பராஜ், ஸ்டான் சுவாமியின் அண்ணன் திரு. இருதயராஜ், சகோதரி மற்றும் அருள்சகோதரி கிளேர் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டனர். வைகறைப் பதிப்பக இயக்குனர் ஸ்டீபன் மார்டின். சே.. மற்றும் பேரா. தேவசகாயம் நூலை அறிமுகம் செய்தனர். திருச்சி வளனார் கல்லூரி செயலர் கே. அமல், தமிழக ஆயர் பேரவையின் பணிக்குழு செயலர்கள், குழந்தை நாதன், மார்டின், கிரிஸ்டன் போனிபாஸ், புள்ளம்பாடி வட்டார அதிபர், பேதுரு மேல்நிலைப்பள்ளி இராபர்ட் செல்வன் உடனிருந்து, சிறப்பித்தனர்.

நினைவேந்தல் பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு விரகாலூர் ஆலய வளாகத்தில் நடந்தது. பாசிச சக்திகளுக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து கட்சியின் சார்பிலும், சிவில் சமூகத்தின் சார்பிலும் மாநில அளவிலான தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். பாசிச அடக்குமுறைக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் குவியம் ஸ்டான் சுவாமி என்றும், பொய் குற்றச்சாட்டுகளால் பீமாகொரேகான் வழக்கிலும் மற்ற பிற வழக்கிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள சிந்தனையாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், கிறித்தவர்கள் அரசியல்படுத்தப்பட வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்றும், ஸ்டான் சுவாமியின் நீதிமன்ற காவல் சித்ரவதை மற்றும் கொலைக்கு நீதி வேண்டும் என்றும், வலியுறுத்தி பேசினர்.

தொடக்கவுரையில் திரு. ஹென்றிடிபேன், ஸ்டான் சுவாமி விவகாரத்தில் தி.மு.. வின் நிலைப்பாடு கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமல்லாமல்; அனைத்து மனித உரிமை போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக இருந்ததாகக்கூறி, தமிழக முதல்வர் ஸ்டான் சுவாமியின் திருச்சாம்பலுக்கு அஞ்சலி செலுத்தியதற்கு, மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவித்து, ஸ்டான் சுவாமிக்கு தமிழக அரசின் சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், கருப்புச்சட்டமான ஊபா சட்டத்தை திரும்பப்பெற, தி.மு.. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். அதன் பின்பு, தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கே.என். நேரு தனது சிறப்புரையில், தி.மு.. ஆட்சியில் இரண்டு கோரிக்கைகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசித்து செய்வதாக உறுதியளித்தார். மணி மண்டபத்திற்கான நினைவுக்கல்லை செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை குரு பாக்கியரெஜிஸ் அவர்கள் மந்திரிக்க, அமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அதை காட்சிப்படுத்தினார்.

திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் தலைவர் வி.பி.குணசேகரன், சுயாட்சி இந்தியத் தேசிய தலைவர் கிறிட்டினாசாமி, சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சி.பி. மாநிலக்குழு உறுப்பினர் இந்திரஜித், எஸ்.டி.பி. மாநிலச் செயலாளர் அபுபக்கர் சித்திக், தமிழ் புலிகள் பொதுச் செயலாளர் பேரறிவாளன், தமிழ் தேச மக்கள் முன்னணி வழக்கறிஞர் கென்னடி, தமிழ்நாடு வழக்கறிஞர் தோழமை சந்தனம், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் எம். . பிரிட்டோ, மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஆசீர், உலகத் தமிழர் பாசறை வழக்கறிஞர் எழிலரசு இளங்கீரன் கருத்துரை வழங்கி, சிறப்பித்தனர். சமம் குடிமக்கள் இயக்க வழக்கறிஞர் சி.சே. இராஜன் சிறப்பாக கூட்ட நிகழ்வை நெறியாளுகை செய்தார். குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி நிறைவு செபம் சொல்லி, ஆசி வழங்கினார்.

திண்டுக்கல் சக்தி கலைக் குழுவின் பறையிசையும், .... கோவன் குழுவினரின் குரலிசையும் பொதுக்கூட்ட வளாகத்தை அர்த்தமுள்ள வகையில் அதிரச்செய்தது.

இயேசுவின் விடுதலை இறையியலும், இஞ்ஞாசியாரின் ஆன்மீகமும், காரல் மார்க்சின் அரசியல் அறிவும், பெரியாரின் பகுத்தறிவும், அம்பேத்கரின் சமூகநீதியும் சங்கமம் ஸ்டான் சுவாமி. நம் காலத்தில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீச்சுடர்.

Comment