இந்திய அரசியலமைப்பு சட்டம்
சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய பலகையை அகற்றக் கோரி புகார்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 18 Aug, 2022
நமது இந்திய தாய் திருநாட்டினுடைய 75 ஆவது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாடி முடித்திருக்கிறோம். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும், அதை பறைசாற்றவும், பரப்பவும் ஒருவருக்கு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு யாரும் தீங்கோ அல்லது இடையூரோ விளைவிப்பதற்கு உரிமையில்லை. ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துநாடார்பட்டி என்ற கிராமத்தில் ஊரின் நுழைவாயிலிலே, சாலையின் ஓரத்திலே, “பிற மதத்தினர் ஊருக்குள் மதப்பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை - இவண் ஊர் பொதுமக்கள்” என்ற பலகையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அச்சுறுத்தும் செய்தியாகவே இருக்கிறது. இது குறித்து உலக தமிழ் கிறிஸ்தவ சமயலனம் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங், “இவற்றையெல்லாம் காண்கிற பொழுது உண்மையாகவே நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற மனநிலை ஏற்படுகிறது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, அனைத்து மக்களும் சகோதர சகோதரிகளாக வாழ்வதற்கு தமிழ்நாடு ஒரு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. ஆனால் இப்பொழுது நடக்கிற சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களின் பாதுகாப்பை, உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என்று கிறிஸ்தவ மறைபோதகர் ஜெபசிங், தமிழ்நாட்டின் சிறுபான்மை ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார்.
Comment