No icon

கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டேக்லே

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 34ஆவது நிறையமர்வு கூட்டம்

நமது சூழலில் இயேசுவின் கதையை எடுத்துரைத்தல் : ஒன்றிணைந்து பயணித்தல், என்னும் தலைப்பில்  இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் 34வது நிறையமர்வுக் கூட்டமானது பெங்களூருவில் நடைபெற்றது.             

சனவரி 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 30 ஆம் தேதி திங்கள் கிழமை வரை பெங்களுரூவில் உள்ள புனித ஜான் தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை நற்செய்தி அறிவிப்புப்பணித்துறையின் தலைவர் கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டேக்லே அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடக்க உரையை கர்தினால் அன்டோனியோ டேக்லே அவர்கள் நிகழ்த்த, அவரைத் தொடர்ந்துCCBI  தலைவரான கர்தினால்  பிலிப் நேரி ஃபெரோ அவர்கள் தலைமை உரையுடன் தொடங்கப்பட்ட முதல் நாள் இக்கூட்டமானது  இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத்தூதர் பேராயர் லியோபோல்டோ கிரெல்லி அவர்களின் இறுதி ஆசீருடனும் நிறைவுற்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி, CCBI  துணைத்தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் வாசிக்கப்பட, CCBI  பொதுச்செயலாளரான டெல்லி பேராயர் அனில் ஜோசப் தாமஸ் கூடோ அவர்கள் ஆண்டு அறிக்கையை இக்கூட்டத்தில் சமர்ப்பித்தார்

பம்பாய் பேராயரான கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியாஸ் மற்றும் ஹைதராபாத் பேராயரான  கர்தினால் அந்தோணி பூலா, பெங்களுர் பேராயர் பீட்டர் மச்சாடோ மற்றும்  CCBI  துணைச்செயலரான அருள்பணி ஸ்டீபன் அலதரா ஆகியோர் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

நிறையமர்வுக் கூட்ட நிகழ்வுகள்

முதல்நாள் அமர்வில் கர்தினால் லூயிஸ் அன்டோனியோ டேக்லே அவர்கள், நமது சூழலில் இயேசுவின் கதையை ஒன்றிணைந்த பயணத்தின் வழியாக சொல்வது  என்ற கருப்பொருளில் தொடக்க உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, தலத்திருஅவையின் வாழ்க்கை, தலைமைத்துவத்திற்கான அதன் தாக்கங்கள், பிற கிறிஸ்தவர்கள் மற்றும்  பிற மதங்களுடன் ஒன்றிணைந்த பயண உறவு, தலத் திருஅவைகளிடையேயான உறவுகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு, குடும்பம், பொது நிலையினர், பெண்கள், வழிபாட்டு முறை, புலம்பெயர்ந்தோர் என பலவற்றைப் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடினர்.

Comment