Namvazhvu
கர்தினால் சார்லஸ் மாங் போ இளைஞருக்கு அச்சுறுத்தலை வழங்கும் சமூகத்தொடர்புச் சாதனங்கள்
Wednesday, 27 May 2020 05:54 am
Namvazhvu

Namvazhvu

இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்கள், பகைமை, உரிமைமீறல் போக்கு, மற்றும், எதிர்மறை எண்ணங்கள் என்ற கலவையை இளையோருக்கு ஊட்டுவதன்வழியாக, பெரும் அச்சுறுத்தல்களை வழங்கி வருகின்றன என்ற கவலையை ஆசிய ஆயர் பேரவை கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் சார்லஸ் மாங் போ வெளியிட்டுள்ளார்.

தவறான எண்ணங்களையும் போக்குகளையும் ஊக்குவிப்பதன்வழியாக, இளைய சமுதாயத்திற்கு கேடு விளைவித்துவரும் சமுகத்தொடர்பு சாதனங்கள் குறித்து, உலக சமூகத்தொடர்பு நாளுக்குரிய செய்தியில் கூறிய, மியான்மாரின் யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், இத்தகைய போக்குகளால் வருங்காலத் தலைமுறையின் நன்னெறி வாழ்வு பெருமளவில் பாதிக்கப்படும் என்ற கவலையையும் தெரிவித்துள்ளார்.

சமூகத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் பொய்ச் செய்திகளால், மனித உறவுகளும், சமுதாய இணைக்க வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், சில சமூகத்தொடர்பாளர்களால் வழங்கப்படும் தீய செய்திகள் வருங்காலத் தலைமுறையை பெருமளவில் தொடர்ந்து பாதித்து வருகின்றன என்று கூறினார்.

குழந்தைகளுக்கு பகைமை உணர்வுகளையும், தீய எண்ணங்களையும் ஊட்டிவரும் இந்த சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு, எவ்வித தடுப்பு மருந்தும் இல்லாதது கவலையாக உள்ளது எனவும், கர்தினால் போ கூறினார்.

முகநூல் பக்கம் வழியாக அல்ல, மாறாக, முகத்துக்கு முகம் பார்த்துச் சொல்லப்படும் கதைகளால், மக்களிடையே உறவுகள் வளரவேண்டும் என்று திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பத்தை, கர்தினால் போ அவர்கள் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.