மே 27, 2020- நம் வாழ்வு: மே 31 ஆம் தேதி தூய ஆவியாரின் வருகைப்பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியே அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்குவார் என்று திருப்பீடச் செய்தித்துறை அறிவித்துள்ளது.
வருகிற ஞாயிறு, காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் வருகைப்பெருவிழா திருப்பலியை, புனித பேதுரு பெருங்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள ஒரு பீடத்தில், மக்களின் பங்கேற்பின்றி, நிறைவேற்றுவார் என்றும் இத்திருப்பலியைத் தொடர்ந்து, திருத்தந்தை, வளாகத்தில் கூடியிருப்போருக்கு, வழக்கமாகத் தோன்றும் சன்னல் வழியே, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆணையையும், காவல்துறையின் வழிமுறைகளையும் பின்பற்றி, மக்கள் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், மக்கள் பின்பற்றவேண்டிய சமுக விலகல் வலியுறுத்தப்படும் என்றும் செய்தித்துறையின் அறிவிப்பு கூறுகிறது.
கடந்த சில வாரங்களாக பாப்பிறை இல்லத்தின் நூலகத்திலிருந்து புதன் மறைக்கல்வி உரைகளையும், அல்லேலூயா வாழ்த்தொலி உரைகளையும் வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதல் முறையாக, பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியே பெந்தக்கோஸ்து திருநாளின் நண்பகல் உரையை வழங்குவார்.
மே 18 ஆம் தேதி, வழிபாடுகளில் கலந்துகொள்ள இத்தாலிய மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, மே 24, கடந்த ஞாயிறு, விண்ணேற்றப் பெருவிழாவன்று, திருத்தந்தை வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரை, நூலகத்திலிருந்து நேரடி ஒளிபரப்பானதைக் கேட்க சில நூறு பேர் வளாகத்தில் கூடியிருந்தனர் என்பதால், இந்த உரைக்குப்பின், திருத்தந்தை, மேல் மாடி சன்னலுக்கு சென்று மக்களை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.