Namvazhvu
தலையங்கம் காந்தி மீண்டும் கொல்லப்பட்டார்
Wednesday, 13 Mar 2019 12:17 pm
Namvazhvu

Namvazhvu

காந்தி மீண்டும் கொல்லப்பட்டார்

காந்தியை வரலாற்றிலிருந்து மறைத்து வைத்து, காந்தியத்தை இந்துத்துவத்தில் புதைத்து வைத்து, மதச்சார்பின்மையை பாரதிய தேசியத்தில் ஒளித்து வைத்து, ஜனநாயகத்தை எதிர்கட்சிகளே இல்லாத இந்தியாவில் அடக்கம் செய்து, இந்தியாவின் கட்டமைப்பையே பாரதிய ஜனதா கட்சி தகர்த்து வருகிறது என்பது கண்கூடு. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பீடம் ஏறிய நாள்முதலே அதன் திட்டங்களிலும் கொள்கைகளிலும் காந்தி மறைக்கப்பட்டார். தூய்மை பாரதம் என்று காந்தியின் ஒற்றைப் போதனையை முன்னிறுத்தி காந்தியம் கருவறுக்கப்பட்டது. காந்தியின் கண்ணாடியை முன்னிறுத்தி சுவட்ச் பாரத் என்று முழங்கினார்களே தவிர, காந்தியின் போதனைகளான, மதச்சார்பின்மை, அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மட்டுமல்ல. இந்தியாவெங்கும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நீக்கமற நிறைந்திருக்கும் தேசப்பிதாவின் அடையாளத்தைச் சிதைப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

சர்தார் வல்லபாய் பட்டேலை உயர்த்திப்பிடிப்பதும், வானுயர சிலையமைப் பதும், நேருவை இருட்டடிப்புச் செய்வதும் மட்டுமல்ல... அதோடு காந்தியையும் கூடத்தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது (பிப்ரவரி 26, 2003) எப்பொழுது பாராளுமன்றத்தில் காந்தியின் உருவப்படத்திற்கு நேர் எதிரே, விநாயக் தாமோதர் சவார்க்கர் படத்தை வைத்தார்களோ அப்பொழுதே அவர்கள் காந்தியத்தைக் குழிதோண்டி புதைக்கத் தொடங்கிவிட்டனர். சபர்மதி ஆஸ்ரமத்தைவிட அவர்கள் ஷாகா நடைபெறும் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தைத்தான் அதிகம் நேசிக்கிறார்கள். காந்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள ராஜ்காட்டைவிட சவார்க்கர் அடைபட்டு கிடந்த அந்தமான் சிறைச்சாலையைத்தான் புண்ணிய பூமியாகக் கருதுகிறார்கள்.

கோட்சேவை குலதெய்வமாகவே அவர்கள்  பூஜிக்கிறார்கள். காந்தியின் ராமராஜ்யம் இவர்களின் இந்துத்துவத்திலிருந்து முரண்பட்டது. ‘மக்களும் அரசும் நேர்மையாக இருக்கும் ஆட்சியே ராமராஜ்யம்என்று அவர் தந்த விளக்கமும் அகண்ட பாரதம் என்பதற்கு அவர் வரையறுத்த எல்லைக் கோடுகளும் இவர்களின் "இந்து - இந்தியா" என்பதற்குத் தடையாக இருந்தன. இந்துக்களையும் முஸ்லீம்களையும் இணைத்து காந்தி அமைத்தகிலாபத் இயக்கம்இவர்களின் ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு வேட்டுவைத்தது.

இந்தியாவை ஒரு மதசார்பற்ற குடியரசாக முன்வைத்த காந்தி, இந்து ராஷ்டிரத்தின் விரோதியாகவே கருதப்பட்டார். தீண்டாமைக்கும் சாதியத்திற்கும் எதிராகக் காந்தியின் செயல்பாடும் ஆலய நுழைவும் அவர்களின் கனவுகளை களைத்துப்போட்டது. தாழ்த்தப்பட்டோர் குளிக்க அனுமதியில்லாத குற்றாலத்தில் நானும் குளிக்கமாட்டேன் என்று திரும்பியவரல்லவா நம் காந்தி தாத்தா. இவர் அம்பேத்கர், பெரியார், ஜின்னா ஆகிய எதிர்தரப்பு ஆளுமைகளோடும் ஆர்எஸ்எஸ் என்ற எதிர்தரப்பு அமைப்போடும் தன் தரப்பு நியாயத்தைத் திறந்த புத்தகமாக எடுத்துரைத்தார். வலதுசாரிகளின் மேலாதிக்கமும் நிலைப்பாடும் தன்னைக் கொல்லும் என்று அறிந்திருந்த காந்தி அதைப்பற்றி கவலைப்படாமல் மகாத்மாவாக நவகாளியில் பணியாற்றினார். இந்த இந்தியா எல்லாருக்குமான இந்தியா என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தன் அகிம்சை தனக்கு நோபல்பரிசு பெற்றுத்தராது என்று அறிந்திருந்தும் தியாகச் செம்மலாகத் திறந்த மேனியுடன் சிறந்த தொண்டாற்றினார். தன் தடி கொண்டு இந்துத்துவத்தின் சித்தாந்தங்களை அடித்து நொறுக்கினார். எனவேதான் கோட்சேயின் குண்டுகளுக்குப் பலியானார். ஐந்தாவது முறையாக நடைபெற்ற கொலை முயற்சியில்தான் காந்தி கொல்லப்பட்டார் என்பது வரலாறு. எய்தியவரும் அம்பும் காலத்தின் கரும்புள்ளிகள். இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்கள்.

காந்தியின் 150வது பிறந்த நாளிலும் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 71 வது நினைவு தினத்திலும் கூட இந்திய வலதுசாரிகளின் வக்கிர மனப்பான்மை மாறாதிருப்பது ஜனநாயகத்தின் மீது நம் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மதச்சார்பின்மைமீது மனக்கவலையடையச் செய்கிறது. காந்தி மீண்டும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். ஜனவரி மாதம் 30 ஆம்

தேதியை கோட்சேயை குலதெய்வமாக கருதும் இந்து மகாசபை "சௌரிய திவாஸ்", அதாவது "வீர தினம்" என்று கொண்டாடுகிறது. காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேதான் அவர்களுக்கு மகாத்மா. மகாத்மா கோட்சே என்று அவரை அழைப்பதில்தான் பெருமிதம். காந்திக்கு ஈடாக இந்தியாவெங்கும் சிலை வைப்பதே அவர்களின் அவா. கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 தான் அவர்களுக்குத் தியாகத்திருநாள். அப்படித்தான் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் உள்ள இந்து மகாசபை அலுவலகத்தில் காந்தியின் உருவப்பொம்மையை அந்த அமைப்பின் தலைவர் களில் ஒருவரான  பூஜா சகுண் பாண்டே துப்பாக்கியால் சுட்டுச் சுட்டு, இரத்தம் சொட்டச் சொட்ட தன் வெறுப் புணர்வைக் கொண்டாடியுள்ளார். இவர்தான் கடந்த

சுதந்திரத் தினத்தின்போது மீரட்டில் இந்து நீதிமன்றத்தைத் தானே நிறுவி, தனக்குத்தானே நீதிபதி பட்டம் சூட்டிக் கொண்டவர். காந்தியைக் கோட்சே கொன்றிருக்கா விட்டால் அதை நானே செய்திருப்பேன் என்று கொக்கரித் தவர். காந்தியின் உருவப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டு அதை ஓர் அரசியல் செயல்பாடாக கொண்டாடிய அவர்தம் வக்கிரச் செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால் பூஜா சகுண் பாண்டே உட்பட 13 பேர் மீது உத்தரபிரதேச அலிகார் பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவுச் செய்து, ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர். மீதி நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.

 நாடு சுதந்திரம் பெற்று எழுபத்திரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், காந்தியின் மீதான வன்மமும் கோபமும் இவர்களிடமிருந்து மறையவில்லைதலைமுறை தலைமுறையாக காந்தியின் மீதான வெறுப்பில்தான் இந்துத்துவம் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. வல்லபாய் பட்டேலும் பாலகங்காதர திலகரும்தான் அவர்களுக்குச் சுதந்திரப் போராட்ட வீரர்கள். கோவால்கரும் சவார்க் கரும்தான் அவர்களின் தியாகச் செம்மல்கள். எனவேதான் காந்தியை இன்று மீண்டும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

இந்தியாவைக் காந்தியில்லாத இந்தியாவாகத்தான் அவர்கள் சித்தரிக்க முயல்கிறார்கள். காந்தியத்தின் மீது அவர்கள் இந்துத்துவத்தின் அளவீடுகளை நிர்ணயிக் கிறார்கள். மதசார்பின்மை மீதுதான் அவர்கள் அயோத்தி ராமர்கோவில்களைக் கட்டியெழுப்புகிறார்கள். காந்தியின் வெள்ளைமீதுதான் கோட்சேக்களின் காவியைப் பரப்புகிறார்கள்.

காந்தி மீண்டும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். கோட்டை அமிர்கள் உள்ளவரை இந்தியாவில் காந்தியம் ஒருபோதும் தோற்காது. அன்னை தெரசாக்கள் உள்ளவரை அகிம்சை ஒருபோதும் மறையாது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அவருடைய இறப்பு குறித்து நேரு பேசிய வார்த்தைகள் தான் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.

"இந்த நாட்டிலே ஒளிர்ந்த ஜோதி சாதாரணமானது அல்ல. அது பல்லாண்டுகளாக ஒளி கொடுத்து வந்த அந்த ஜோதி, இன்னும் பல்லாண்டுகள் ஒளி கொடுக்கும். ஏனென்றால், அது அழியாத சத்தியமாகும்". அரசியல் அனாதைகளின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு காந்தியம் ஒருபோதும் இரையாகாது.