இறை இயேசுவில் அன்புநிறை ஆயர்களே, அருள்பணியாளர்களே, துறவியரே, பொதுநிலையினரே,
உங்கள் அனைவருக்கும் தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் வாழ்த்துகள்!
திரு அவை , தன்னுடையமணவாளரும் மீட்பருமான கிறிஸ்துவோடு பிரிக்க முடியாத ஒன்றிப்பில் மகிழ்ந்து, விண்ணுலக எருசலேமை நோக்கிய ஒரு திருப்பயணியாக, ஆண்டவருடைய வார்த்தைகளை நம்பிய புனித கன்னி மரியாவிடத்தில் தன்னையே ஒப்புக்கொடுத்து வரலாற்றின் பாதைகளில் நடந்துவந்துகொண்டிருக்கிறது.
“பெண்களுள் நீர் ஆசி பெற்றவர்’’ என அன்னை மரியாவைப் போற்றிப் புகழ்வது பற்றியும் அவருடைய தாய்மையுடன் கூடிய அவரது பரிந்துரையைப் பற்றியும் நற்செய்தி வழியாக நாம் அறிகிறோம்.
வரலாற்று ஏடுகளில் கிறிஸ்தவ பக்தியைத் தூண்டுவதற்காக,கன்னி மரியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களும் அன்னை மரியாவை நோக்கிய பரிந்துரைகளும் ஏராளம். இயேசுவோடு நாம் இணைந்து உறவாடச் சரியான வழியாக இவை அமைகின்றன. எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் நடுக்கமும் கலந்த இன்றைய சூழலில்> முழு நம்பிக்கையோடும் அன்போடும் அன்னையின் துணையை நாடுவது அவருடைய பிள்ளைகளின் உணர்வாக இருக்கிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020 ஜூன் 20 அன்று, திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் வழியாக, புனித மரியன்னையின் மன்றாட்டுமாலையில்> “இரக்கத்தின் அன்னையே’’ (Mater misericordiae), ,“எதிர்நோக்கின் அன்னையே’’ (Mater Spei), “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே’’ (Solacium migrantium) ஆகிய வேண்டல்களைச் சேர்த்துக்கொள்ளும்படி சுற்றறிக்கை விடுத்துள்ளார்கள்.
இரக்கத்தின் அன்னையே என்பது திரு அவையின் அன்னை-க்குப் பிறகும், எதிர்நோக்கின் அன்னையே என்பது இறையருளின் அன்னை-க்குப் பிறகும்> புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே என்பது பாவிகளுக்கு அடைக்கலமே-க்குப் பிறகும் சேர்க்கப்பட வேண்டும் என மேற்கண்ட பேராயம் பணித்துள்ளது.
எனவே, மேலே குறிப்பிட்ட மூன்று வேண்டல்களையும் குறிப்பிட்ட வரிசையின்படி புனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் இணைத்துச் செபிக்குமாறு தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு வழியாக ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிறிஸ்துவின் அன்பில்,
மேதகு பேராயர் அந்தோணி ஆனந்தராயர்
தலைவர்,
தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு
24.06.2020
மரியன்னை மன்றாட்டுமாலை
ஆண்டவரே> இரக்கமாயிரும் (2)
கிறிஸ்துவே> இரக்கமாயிரும் (2)
ஆண்டவரே> இரக்கமாயிரும் (2)
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக்
கனிவுடன் கேட்டருளும்.
விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
தூய ஆவியாராகிய இறைவா,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
தூய்மைமிகு மூவொரு இறைவா,
எங்கள்மேல் இரக்கமாயிரும்
புனித மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித அன்னையே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
கன்னியருள் புனித கன்னியே
கிறிஸ்துவின் அன்னையே
திரு அவையின் அன்னையே
இரக்கத்தின் அன்னையே
இறையருளின் அன்னையே
எதிர்நோக்கின் அன்னையே
தூய்மைமிகு அன்னையே
கன்னிமை குன்றா அன்னையே
மாசு இல்லாத அன்னையே
பாவக் கறையில்லா அன்னையே
அன்புக்குரிய அன்னையே
வியப்புக்குரிய அன்னையே
நல்ல ஆலோசனை அன்னையே
படைத்தவரின் அன்னையே
மீட்பரின் அன்னையே
பேரறிவுமிகு கன்னியே!
வணக்கத்திற்குரிய கன்னியே
போற்றுதற்குரிய கன்னியே
வல்லமையுள்ள கன்னியே
பரிவுள்ள கன்னியே
நம்பிக்கைக்குரிய கன்னியே
நீதியின் கண்ணாடியே
ஞானத்திற்கு உறைவிடமே
எங்கள் மகிழ்ச்சியின் காரணமே
ஞானம் நிறைந்த பாத்திரமே
மாட்சிக்குரிய பாத்திரமே
பக்தி நிறைந்த பாத்திரமே
மறைபொருளின் ரோசா மலரே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
பொன்மயமான கோவிலே
உடன்படிக்கையின் பேழையே
விண்ணகத்தின் வாயிலே
விடியற்கால விண்மீனே
நோயுற்றோரின் ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே
துயருறுவோருக்கு ஆறுதலே
கிறிஸ்தவர்களின் துணையே
வானதூதர்களின் அரசியே
முதுபெரும் தந்தையரின் அரசியே
இறைவாக்கினர்களின் அரசியே
திருத்தூதர்களின் அரசியே
மறைச்சாட்சிகளின் அரசியே
இறையடியார்களின் அரசியே
கன்னியர்களின் அரசியே
அனைத்துப் புனிதர்களின் அரசியே
அமல உற்பவியான அரசியே
விண்ணேற்பு அடைந்த அரசியே
திருச்செபமாலையின் அரசியே
குடும்பங்களின் அரசியே
அமைதியின் அரசியே
இந்திய நாட்டின் அரசியே
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே (3)
1. எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்
2. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
3. எங்கள் மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் புனித அன்னையே! இதோ உம் அடைக்கலம் நாடி வந்தோம். எங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும். மாட்சிக்குரிய கன்னியே! விண்ணுலகப் பேறுபெற்ற அரசியே! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.
முதல் : கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி
எல் : இறைவனின் புனித அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மன்றாடுவோமாக
இறைவா! முழு மனத்துடன் உம் திருத்தாள் பணிந்திருக்கும் இக்குடும்பத்தைக் கண்ணோக்கியருளும். எப்பொழுதும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் பகைவர் அனைவரின் தாக்குதலிலிருந்து எங்களை மீட்டருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.