உரோம் மாநகருக்கு திருத்தந்தையின் கிறிஸ்மஸ் பரிசு
உரோம் மாநகரின் தெருக்களில் வாழ்கின்ற மக்களுக்கென்று, கோவிட்-19 பெருந்தொற்றைப் பரிசோதிக்கும் நான்காயிரம் மருத்துவ பரிசோதனை பஞ்சுறைகளை (swab), தனது கிறிஸ்மஸ் பரிசாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.
இந்த பஞ்சுறைகளை, கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, சுலோவேனிய நாடு திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இவற்றை, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்களின் ஒத்துழைப்புடன், உரோம் மாநகராட்சியின் அனுமதியோடு, Medicina Solidale (IMES) மற்றும், IFO San Gallicano ஆகிய நிறுவனங்கள், உரோம் மாநகரில் தெருவில் வாழ்கின்ற மக்களுக்கென்று பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
IMES என்ற அரசு-சாரா அமைப்பு, சிறந்த மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியுடன், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக, உரோம் மற்றும் அம்மாநகரைச் சுற்றி வாழும் வறியோர் மற்றும், புறக்கணிக்கப்பட்டோரின் நலவாழ்வு மேம்பட பணியாற்றி வருகின்றது.
இந்த அமைப்பினால் உதவிபெறும் நோயாளிகளுள் எழுபது விழுக்காட்டினர், புலம்பெயர்ந்தோர் மற்றும், உரோம் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.