மறையுரை:
பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு
(யோசு 24:1-2,15-18, எபே 5:21-32, யோவா 6:60-69)
வாழ்வு தரும் வார்த்தைகள்
ஆற்றல்மிக்க வார்த்தைகள்
மனிதசொற்களுக்கும் ஆற்றல் அதிகம். வார்த்தைகள், வாக்கியங்கள், பத்திகள், நூல்கள், நூல் நிலையங்கள் தன்னகத்தே உயிர்கொண்டவை. அவை மனித உள்ளங்களைத் துளைத்துச் சென்று வியத்தகு மாற்றங்களை உருவாக்கும் செயலூக்கம் படைத்தவை. மனிதர்களை வாழ்விக்கும் அல்லது உளவியல் முறையில் சாகடிக்கும் தன்மை அவைகளுக்குண்டு. கனிவான சொற்கள் மனித உள்ளங்களை வளர்க்;கின்றன, வார்க்கின்றன, மலரச்செய்கின்றன, வெற்றி விலாசங்களை எழுதுகின்றன. சான்றோர்களின் வார்த்தைகளால் சமுதாயங்கள் சீர்பெற்று செம்மையுறுகின்றன. நல்ல மனிதர்களின் வார்த்தைகள் நிலையில்லா காலத்திற்கும் வழிகாட்டும் ஒளிவிளக்குகள். ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குப் பிடித்த சில வார்த்தைகளை, வாக்கியங்களை அடிக்கடி முணுமுணுத்து கொண்டே உள்ளனர். சில சமயங்களின் அதுவே அவர்களது வாழ்வின் உந்துசக்தியாக செயலாற்றுகின்றது. இயேசுவின் வார்த்தைகள் மனித வாழ்வுகளையும் வரலாற்றையுமே அடிப்படையாக மாற்றும் ஆற்றல் கொண்டவை. அவை மூன்றாண்டுகளுக்குள் பாலஸ்தீனத்தின் தலைவிதியையே மாற்றி அமைத்தன. அவை வாழ்வில் அர்த்தம் இழந்த இதயங்களில் இலட்சிய சுடர் ஏற்றிவைத்த இறை மொழிகள். இன்றும் வாழ்வு தரும் வார்த்தைச் சுரங்கங்கள் அவை. அவற்றில் ஆவியின் அனல் நிறைந்திருந்தது என்று இன்றைய நற்செய்தி உரைக்கின்றது.
ஆண்டவரைச் சுவைத்தல்
ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைக்க திருப்பாடல் அழைக்கின்றது (திரு 30:8). அவரது அன்பைச் சுவைத்த அனைவரும் கடவுள் மனிதர்களாக மாறி வாழ்ந்துள்ளனர். வாழ்வில் (முக்கியமாக போராட்டங்களில், நசுக்கப்பட்ட, கைவிடப்பட்ட தருணங்களில்) அவரை அனுபவித்து உணர்ந்தவர்களால் அவரைவிட்டு விலகி வாழ இயலாது. வாழ்வின் இறுதி எல்லையை அடைந்துவிட்டு மீண்டும் வாழ்வு பெற்றவர்களுக்குத் தெரியும் - கடவுள் அவர்களின் உயிரைக் காத்து வைத்தது பற்றி. எல்லோரும் கைவிட்ட தருணங்களில் நமக்குச் சாமக்காவல் காத்திருந்த கடவுளை ஒரு நொடிப்பொழுதும் மறக்க முடியாது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த கடவுளை அவ்வப்போது மறந்தது சரியல்ல என்று இறைவாக்கினர்கள் இஸ்ரயேல் மக்கள் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். அழைத்தவுடன் செவிமடுக்கும், அல்லது கேட்கும் முன்னரே விண்ணப்பங்களை நிறைவேற்றும் கடவுளைக் கனவிலும் கைவிட முடியாது. அடிமைத்தனத்திலும் போராட்ட நாள்களிலும் கடவுளைத் தேடிய இஸ்ரயேல் மக்கள் கனான் நாட்டில் அவர்களது வாழ்வு சிறப்புப் பெற்றவுடன் கடவுளை மறந்து தம் கால்போன போக்கில் நடந்தனர். பல கடவுள் வழிபாடு பாவத்தின் பங்காளிகளாக உருவாக்கிவிடும். கவர்ச்சிகரமாக இருக்கும் பல கால ஓட்டத்தில் காலை வாரிவிடுவது உறுதி. பிற கடவுள்களைத் தேடிச் சென்றபோதெல்லாம் இஸ்ரயேல் மக்கள தம் ஒழுக்க வாழ்வில் தள்ளாடினர் என்பது உண்மை. யோசுவா தாம் பட்டு அனுபவித்ததை இன்றைய முதல் வாசகத்தில் வெளிப்படுத்துகின்றார். மக்களும் அவருடன் ஒத்துச் செல்கின்றனர். பாவ வாழ்வில் சங்கமித்துப்போன பலர் கடவுளின் கரம்பட்டவுடன் தமது வாழ்வை முழுமையாக மாற்றிக்கொண்ட வரலாறு நமக்குத் தெரியும். அவர்கள் நற்செய்தியின் தூதர்களான அதிசயமும் பலமுறை நிகழ்ந்துள்ளது. இன்னும் தம் வல்லமை நிறைந்த வார்த்தைகள் மூலம் அவர் செயல்படுகின்றார் என்பதே உண்மை. தேவைப்படும்போது கடவுளைத் தேடுவதும் மற்ற நேரங்களில் அவரைச் செல்லாக் காசாக நினைப்பதும் தவறு.
விலகிச் செல்லும் பலர்
இயேசுவின் வாழ்வு கொடுப்பவர் தாமே மற்றும் நற்கருணைப் போதனை பலருக்குக் கசந்தது. ஆவியில் வேரூன்றிய அவரது போதனைகளை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை.நத்தானியேல் (யோவா 1:50தொ) நிக்கோதேமு (யோவா 3:12) போன்றோர் முழுமையான சீடத்துவத்தில் தயக்கம் காட்டினர். இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் பல சீடர்கள், இயேசு தினமும் அப்பத்தைப் பகிர்ந்து தந்து உடலுக்கு உணவு தர வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் நோயாளிகளைக் உடனடியாகக் குணப்படுத்த வேண்டும், இயேசு அவர்கள் மத்தியில் எழும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டே செல்ல வேண்டும், ஏதோன் தோட்ட வாழ்வு போல் எக்குறையும் இன்றி அவர்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால் அப்பத்தோடு துவங்கினாலும் ஆவியினால் தூண்டப்படும் ஆன்மிக மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லும், கடவுளிடம் கரை சேர்க்கும் சவால் நிறைந்த வாழ்வே சீடத்துவம் என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். எனவே, அவர்கள் அர்ப்பணம் நிறைந்த முழுமையான பின்பற்றுதலுக்குத் தயங்கினர்.
சீடர்கள் இயேசு-உடன் நடக்க வேண்டும். இயேசுவின் உணர்வுகள், நோக்கங்கள், வாழ்வுப் போராட்டங்கள், தியாகமே உருவான தற்கையளிப்பு போன்ற அனைத்தும் அவர்களானதாக மாற வேண்டும். மேலும் ஒரே கிண்ணத்தில் பங்கெடுப்பது தியாக வாழ்வுக்கான அழைப்புக் குரலாகும். ஒரே அப்பத்தில் பங்கெடுக்கும் அனைவரும் மற்றவர்களின் வாழ்வு இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் சகோதர சகோதரிகள். பிறருக்காகக் கொஞ்சமாவது அர்ப்பணிக்காத வாழ்வில் எந்தப் பொருளும் இல்லை. அனைத்துக் கிறிஸ்தவர்களும் உரிமைக் குடிமக்கள். ஆவியில் பிறக்காதவர்களுக்கு விண்ணக விருட்சங்கள் அகப்படாது. புறக்கண்களுக்குத் தெரியாத கடவுள் அப்பத்திலும் அன்புச் செயல்களிலும் மறைந்திருக்கலாம். கடவுளின் மேசையிலிருந்து பசியாற்றிக் கொண்டவர்கள், மற்றவர்களின் பசியாற்ற வேண்டும். அவரது உடலை உண்பவர்கள் கிறிஸ்மயமுள்ளவர்களாக மாற்றம் பெறுகின்றனர். கடவுளை விட்டு விலகிச் செல்வதால் இழப்பு கடவுளுக்கல்ல. கடவுளன்பு அல்லது கடவுள் பயமற்ற வாழ்வில் எல்லாவகையான களைகளும் வளர வாய்ப்புண்டு.
சீடர்கள் - சுதந்திரக் குடிமக்கள்
விலகிச் செல்லும் யாரையும் இயேசு தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் தங்களின் விருப்பப்படி செல்ல அனுமதிக்கின்றார். அழைப்பை யார் மேலும் திணிக்கவில்லை. அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தம் கொள்கைகளை மாற்றிக் கொள்வதாக இயேசு கூறவில்லை. கடவுளின் இயக்கம் மனித விருப்ப வெறுப்புகளுக்கு அடிமையல்ல. நற்செய்தியின் நன்னயங்கள் காசுக்கும் காலத்தின் கோலங்களுக்கும் விலைபோகக் கூடாது. இயேசுவுக்கும் இது போராட்டமான சமயமாக அமைந்திருக்கும். பலர் விலகிச்செல்லும் வேளையில் தம் இயக்கம் என்னவாகும் என்று அவரது இதயம் கனத்திருக்கலாம். ஆனால் கடவுளுக்குத் தமது இயக்கத்தைக் காப்பாற்றும் வழிமுறை தெரியும். சீடத்துவத்தின் அடிப்படை சரத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்வோர், தவறான ஒன்றை வருங்காலத்தில் தமதாக்க விரும்புவோர் அவரின் உண்மை சீடர்களாக இருக்க இயலாது. உண்மை அறிவிப்பில் எந்த சமரசமும் கூடாது. பலரின் சுயநலத் தேவைகளை நிறைவேற்ற முற்பட்டால் கொள்கையுள்ள வாழ்வு சாத்தியம் ஆகாது.
இயேசு விண்ணகத்திலிருந்து வந்தவர் என்று ஏற்றுக்கொள்ளவே அவர்கள் தயங்கினர். உடலுக்கு உணவிட்டபோது விரும்பியவர்கள் ஆன்ம உணவின் அடிப்படை உண்மைகளை ஏற்கத் தயாராக இல்லை. யோவான் நற்செய்தியின் இரண்டாம் பகுதியில் இருக்கும் விண்ணக உண்மைகளை அவர்கள் கேட்க முற்பட்டால் அவர்களால் நம்ப முடியாது. ஆவியினால் பிறப்பெடுப்பது முக்கியம் (யோவா 3:6-8). உலக காரியங்களில் ஊன்றிக் கிடப்போருக்கு விண்ணுலக வெளிச்சங்கள் தெளிவாகத் தெரியாது. முழுமையான அர்ப்பணத்திற்குத் தயாராக இல்லாதவர்கள் கல்வாரிக்கு அழைத்துச் செல்லும் பாதையில் நிலைத்திருக்க முடியாது.
வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கும் வார்த்தைகள்
இயேசு தாம் பேசிய வார்த்தைகளின் சிறப்பம்சத்தை அறிக்கையிடுகின்றார். சிலர் பொருளின்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவற்றில் ஐந்து சதவீதம் கூட உண்மையின்றி இருக்கலாம். இயேசு உயிருக்கு உரமூட்டும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே சென்றார். சிலர் பேசும் வார்த்தைகள் 100 சதவீதம் மதிப்பீடுகளைத் தாங்கிச் சென்றன. அவர் பேசிய வார்த்தைகளை அவரது தந்தையின் ஆவி ஆசீர்வதித்துக்கொண்டே சென்றதால், அவை அனைத்தும் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பவில்லை. பாவ வாழ்வுக்கே பழகிப்போன சக்கேயுவைத் திருத்த முடியுமா? பரிசேய சட்டங்களுக்குப் பழகி திருஅவையை அழிக்கத் துடித்த பவுலை நற்செய்தியின் நாயகனாக மாற்ற முடியுமா? மடிந்த போன உடலுக்கு மாற்றுயிர் கொடுக்க முடியுமா? கடலையும் புயலையும் அடக்க முடியுமா? கடவுளின் வார்த்தையினால் எல்லாம் கூடும் என்பதே நற்செய்தி காட்டும் உண்மையாகும். அதே கடவுளின் வார்த்தையால் இன்றளவும் உலகம் வாழ்வு பெறுகின்றது வரலாறாகும்.
பேதுருவின் சாட்சியம்
பேதுரு பன்னிருவரின் பிரதிநிதியாக, தாம் மூன்று ஆண்டுகள் இயேசுவோடு வாழ்ந்த பின்னர் எதை தம் வாழ்வில் அனுபவித்தாரோ அதையே இன்றைய நற்செய்தியில் சாட்சியமாக்குகின்றார். பேதுருவின் சாட்சியத்தின் மூன்று முக்கிய கருத்துகள் உள்ளன. 1. விரும்பிச் செல்வதற்கு இயேசுவை வேறு எவரும் இல்லை. அதை அவர்கள் உண்மையாக பார்த்துள்ளனர், கேட்டுள்ளனர், தமது சொந்த வாழ்வில் அனுபவித்துள்ளனர் (எசா 46:9, திப 4:12). எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்களுக்கு வாழ்வு கொடுப்பதையே தமது நோக்கமாகக் கொண்டுள்ள, இயேசு கடவுளிடம் செல்லும் உண்மை வழியைக் கற்பித்தார். அவரின் வார்த்தைகளையும் செயல்களையும் அருகிலிருந்து கண்டவர்கள் கடவுளே மனித உருவில் நடமாடுவதை உணர்ந்தனர். அவரது ஆழமான ஆன்மிகம் சகமனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பதை தம் இலக்காகக் கொண்டிருந்தது. மக்களுக்காக, மக்களுடன் வாழும் கடவுள் அவரைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். 2. நம்புவேருக்கு நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் அவரிடம் இருந்தன. தேடிவந்தவர்கள் வாழ்வு பெற்றுச் சென்றனர். அவரைத் தேடி வந்தவர்களைவிட அவர் தேடிச் சென்று வாழ்வு கொடுத்தவர்களே அதிகம். அவர் கூறிய சில வார்த்தைகள் ஆல விதையாக பலர் உள்ளத்தில் விழுந்து பெரும் மரங்களாக வளர்ந்தன. உயிர் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் நிலையான பெயரைச் சம்பாதித்தார். வருங்கால வாழ்வுக்கான வழிமுறையையும் கற்றுக் கொண்டனர் (யோவா 11:25). 3. இயேசு கடவுளுக்கு அர்ப்பணமாவர் என்ற அவர்களின் தொடக்க கால நம்பிக்கை முழுமை பெற்றது. அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் அவர்களுக்கு அதைக் கற்றுத் தந்தன. கடவுளின் புனிதமே அவருக்குள் குடியிருந்து செயல்பட்டதை அவர்கள் கண்டுணர்ந்தனர். கடவுளால் அனுப்பப்பட்ட அவர் (யோவா 10:36) உலகிற்காக தமது வாழ்வைத் தியாகமாக்குவார் (யோவா 17:19) என்ற உண்மை அதன் நிறைவை நோக்கி நடைபோட்டது.
உண்மையான நம்பிக்கை
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் புதுமையைக் கண்டு ரசித்தவர்கள், அப்பங்களை வயிறார உண்டவர்கள், அவரை அர்ப்பனத்தோடு பின்தொடர்வதில் தள்ளாட்டம் கண்டனர். உண்மையான கிறிஸ்தவ நம்பிக்கை என்பது நன்மைத்தனம் நிறைந்த வாழ்கை முறை. எனவே அது ஒரு சவால். அது முழுமையான வாழ்வு அர்ப்பணிப்பாகும். அது பொழுதுபோக்குச் செயலல்ல. உண்பதும் குடிப்பதும் கடவுளரசு அல்ல. அது வாழ்வு நோக்கங்களைக் கடவுளுக்காக மாற்றுவதாகும். இயேசு நிறைவேற்றிய அனைத்தும் அவரது நம்பிக்கையின் வெளிப்பாடுகள். கடவுள் முன் தவறான எதிர்பார்ப்புகளை வைத்துத் துவக்கும் வாழ்வு கடவுள் வாழும் கோவிலுக்கு நம்மை அழைத்துச் செல்வதில்லை. தவறான பாதைகள் தவறான இலக்குகளின் முட்டி மோதி நிற்க்கும். கிறிஸ்து இயக்கம் அனைவருக்கும் (முடவர் குருடர், தொழுநோயாளர் உட்பட…) உரியது, ஆனால் அது அனைவரின் அனைத்துத் தேவைகளையும் (அது ஐந்து நட்சத்திர விடுதி அல்ல) நிறைவேற்றாது. அது பலருக்கும் அன்பையும் இரக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கை முறை, வாழ்வுப் பயணம். கிறிஸ்தவ வாழ்வைத் தூரத்தில் இருந்து ரசிக்கலாம். ஆனால் அதில் முழுமையாக ஈடுபட்டு கிறிஸ்துமயமாகி, செல்லும் இடமெல்லாம் அதன் மதிப்பீடுகளை விதைக்கும் நற்செய்தியாளர்களாவோம். இயேசுவை அறைகுறையாகப் பின்பற்ற முடியாது.