Namvazhvu
வாருங்கள் வளனாரிடம்
Wednesday, 08 Sep 2021 07:12 am

Namvazhvu

வாருங்கள் வளனாரிடம்

அருள்தந்தை. மா. ஜெயராஜ் CR

ரொசரியன் சபைதலைமையகம், பெங்களுரூ

மீட்பரின் பொறுப்பாளர், உழைப்பாளர்களின் பாதுகாவலர், மகிழ்வான மரணத்தின் இனிய காவலர், திருக்குடும்பதத்தின் பாதுகாவலர், கன்னியர்களின் பாதுகாவலர், கல்வியின் பாதுகாவலர், கடின உழைப்பாளி, நீதிமான், நேர்மையாளர் என அடைமொழிகளை அடுக்கிக் கொணடே போகும் போது அடையாளம் கண்டுபிடித்திருப்பீர்கள். யாரப்பா அவர் என யோசிக்கும் முன்பே நம் மனக்கண்களில் வந்து போகும் நபராய், காலங்கள் கடந்தும் கொண்டாடப்படும் கன்னிமரியின் நல்ல துணைவரும், இயேசுவின் வளர்ப்பு தந்தையுமான திருஅவையின் பாதுகாவலர் புனித வளனார் நிச்சயம் உங்கள் உள்ளத்தில் வலம் வந்திருப்பார் என நம்புகிறேன்.

வளனார் என்றால் வளரும் கதிரோன் என வாழ்த்துக்கு சொந்தக்காரரான புனித யோசேப்பு பற்றிய விவிலிய சிந்தனைகளை, வளனாரிடம் என்ற சிந்தனையில் உங்களோடு உறவாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் வளனாரிடம் வாருங்கள் என்ற சிந்தனையை கருப்பொருளாக எடுப்பதற்கு முதல் காரணம் “யோசேப்பிடம் செல்லுங்கள்” (தொநூ 41:55) என்ற இறைவார்த்தையாகும். நாம் வாசிக்கின்ற 72 புத்தகங்கள் அடங்கிய திருவிவிலியத்தில் ஏறக்குறைய 169 முறை யோசேப்பு என்னும் பெயர் இடம் பெறுகிறது.

1. தொடக்கநூலில் நாம் வாசிக்கின்ற குலமுதுவரான யாக்கோபின் மகன் யோசேப்பு வருகிறார்.

இவரது பெயர் 120க்கும் அதிக முறைகளில் இடம்பெறுகிறது.

2. ஆசாபின் புதல்வாரன யோசேப்பு (1 குறிப் 25:2)

3. யூதித்தின் மூதாதையர் பட்டியலில் வரக்கூடிய ஓசியேலின் மகன் யோசேப்பு (யூதித்து 8:1)

4. படைத்தலைவரான செக்கரியாவின் மகன் யோசேப்பு (1 மக் 5:56)

5. கன்னிமரியாளின் கணவரான புனித யோசேப்பு (மத் 1:18,19,24,25, 2:13,19,21, 13:55)

6. மரியாவின் மகனும் யாக்கோபின் சகோதரருமான யோசேப்பு ( மத் 27:57)

7. அரிமத்தியா ஊரை சேர்ந்த யோசேப்பு, (மத் 27: 57,59)

8. யுஸ்து மற்றும் பர்சபா என்னும் பெயருடைய யோசேப்பு (தி.பணி 1:23),

9. சைப்பிரசு தீவை சார்ந்த யோசேப்பு (ஊக்குவிக்கும் பண்பு கொண்டுவர் தி.பணி 4:36)

என எனக்கு தெரிந்து ஒன்பது பேர் யோசேப்பு என்ற பெயரில் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் மையமாக அதாவது ஐந்தாவதாக இடம்பெறக்கூடிய நாசரேத்தூரில் வாழ்ந்த தச்சரான புனிதயோசேப்பை மட்டுமே அன்னையாம் திருஅவை வளனார் என செல்லமாக அழைக்கின்றது.

1870 ஆம் ஆண்டு திருத்தந்தை 9ஆம் பயஸ் அவர்கள் மீட்பின் வரலாற்றில் அன்னை மரியின் துணைவராய், ஆண்டவர் இயேசுவின் தந்தையாய் மிக முக்கிய பங்காற்றிய தச்சரான தூய யோசேப்பை உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக அறிவித்தார். எவ்வாறு பழைய ஏற்பாட்டில் அதிக முறை

வரக்கூடிய யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்தின் கருவூலங்களை பாதுகாக்கும் பொறுப்பு மிக்க நேர்மையாளராக இருந்தாரோ அதைப்போல திருஅவையின் வரலாற்றில் புதிய ஏற்பாட்டு யாக்கோபின் மகன் யோசேப்பு திருச்சபையின் கருவூல காப்பாளராக அன்னை மரியாள், ஆண்டவர் இயேசு என்னும் விலைமதிக்க முடியா திருஅவையின் நிலையானச் செல்வங்களை பராமரிக்கும், பாதுகாக்கும் பணியாளராக தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

1870 ஆம் ஆண்டு உலகளாவிய திருஅவையின் பாதுகாவலராக புனித வளனார் அறிவிக்கப்பட்டதன் 150 ஆம் ஆண்டின் நினைவாய் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் வாழக்கூடிய உலகம் என்னும் பொதுக்குடும்பத்தை புனித வளனாரின் பாதங்களில் அர்ப்பணிபப்தன் அடையாளமாக இவ்வாண்டை திருத்தந்தை பிரான்சிஸ் (8 டிசம்பர் 2020 - 8 டிசம்பர் 2021) தூய வளனாரின் ஆண்டு என அறிவித்துள்ளார். இக்கட்டுக்கள் நிறைந்துள்ள இக்கால கட்டத்தை வளனார் ஆண்டாய் அறிவிக்கின்ற வேளையில் வளனாரின் தந்தைக்குரிய தகைமைப்பொருந்திய இதயத்தை ஏழு கோணங்களில் பார்க்கிறார்.

1. அன்புக்குரிய தந்தை

2. கனிவுநிறை, தந்தைதக்குரிய தகைமைப்

பொருந்திய இதயத்தை ஏழு கோணங்களில்

3. கீழ்ப்படிதலுள்ள தந்தை

4. ஏற்றுக் கொள்கின்ற தந்தை

5. படைப்புத்திறன் துணிவுநிறை தந்தை

6. உழைக்கின்ற தந்தை

7. நிழல் நில் தந்தை

உம்மிடத்தில் தாம் கேட்டதை ஒருபோதும் அடையாமல் போனதில்லை என, வளனாரை குறித்து புனித அவிலா தெரசம்மாள் நம்பிக்கை அறிக்கையை வெளியிடுவது போன்று பல புனிதர்கள், திருஅவை தந்தையரின் வாழ்வு மற்றும் போதனைகளில் புனித வளனாரின் மறைந்து கிடந்து மிளிரும் வாழ்வு

வளனாரிடம் வாருங்கள் என்று நம்மை அழைப்பதாக அமைந்துள்ளது.

1. அன்பு நிறை தந்தை:

அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும், அனைததையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும் (1கொரி 13:7) பழைய ஏறபாடு தம் சகோதரர்களின் அன்புக்காக ஏங்குபவராகவும், தக்க சூழல் கிடைத்த போது தமது அளவில்லாத அன்பை மன்னிப்பின் வழியாக வெளிப்படுத்துவபவராகவும் இருந்தார் என்பதை தொடுக்க நூலில் வாசிக்கின்றோம். அதுபோல கன்னியான மரியாளின் அன்புக்காக ஏங்கித்தவித்த நல்ல துணைவரான புனித வளனார், அன்னை மரியின் கன்னிமையின் நல்ல காவலராக இருந்ததோடு, மரியன்னை கருவுற்ற நிலையில் இறையன்னையை அன்போடு பாதுகாக்கும் நல்ல காவலனாகவும், பாலன் இயேசுவை பெற்றெடுத்த நிலையில் விண்ணக வேந்தனை பராமரிக்கும் பொறுப்பை உவந்தேற்ற பொறுப்புள்ள தந்தையாகவும் தன்னை அர்பப்ணிக்கிறார். அன்பிற்காய் நம்மை அர்ப்பணிக்க முன்வரும்போது அர்பணம் ஒரு போதும் சுமையாகாது. தாய் வயிற்றில் கருவாய் இருக்கும் குழந்தையின் சுமைப்போல அர்ப்பணத்தின் சுமையும் சுகமானதே என அன்பு நிறைத்தந்தையாய் வளனார் தம்மை வெளிப்படுத்துகிறார்

2. கனிவுநிறை தந்தை

 நான் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவன் (மத1; 1:29) என இறைமகன் இயேசு சொல்வதை கவனித்தால் அவர் தம் தந்தையின் சாயலை தாங்கி நிற்பதை நம்மால் உணரமுடியும். ஓர் ஆண்மகனுக்குரிய நான் என்ற உணர்வுக்கு சிறிதும் இடம் கொடாமல் வாழ்ந்தவர் வளனார். வளனாரின் வாழ்வு முழுக்க முழுக்க கனிவை கண்களில் தாங்கி, பரிவை தாங்கி இருப்பதை அவரின் வாழ்க்கைப்பயணத்தின் ஒவ்வொரு சூழலிலும் உணர முடியும். நிறைமாத கர்ப்பிணியான அன்னை மரியின் பிரசவத்திற்காக எருசேலம் வீதிகளில் தங்க விடுதி கேட்டு வீதியில் அலைந்த சூழலை மனக்கண்முன் கொண்டு வந்தாலே வளனாரின் கனிவை நம்மால் அனுபவிக்க முடியும். கண்களில் கனிவு இருந்ததால் செயல்களில் பரிவும், பணிவும் இருக்கும் தந்தை தம் பிள்ளைகள் மீது பரிவு காட்டுவது போல கடவுளால் தனக்கு கொடுமையான தரப்பட்டு அன்புமகன்         இயேசுவை கரங்களில் தாங்கி தோளில் தூக்கி கொண்டு உயிரைக்காக்க எருசலேமுக்கு ஓடிப்போய், நெஞ்சில்சுமந்து, கரம்பிடித்து நடைப்பயிற்று வித்து, இயேசுவின் பக்கமாய் குனிந்து உணவூட்டி வளர்த்த யோசேப்பு என்னும் வளனார் காலங்கள் போற்றும் கனிவுநிறை தந்தையாக கொண்டாடப்படுகிறார்.

3. கீழப்படிதலுள்ள தந்தை

தனது சொந்த குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகளை பணிவுடனும், மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவனசெய்பவராக இருகக் வேண்டும் (1திமொத் 3:4) ஆகட்டும் என்ற அன்னை மரியைப்போல இறைவனின் திட்டத்திற்கு முழுவதுமாய் கீழ்படியக்கூடிய நல்ல மனிதராக வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தவர் வளனார். பழைய ஏற்பாட்டு வரலாற்றில்        கடவுளின் வெளிப்பாட்டை, பல இறைவாக்கினர்கள் கனவுகள் மற்றும் காட்சிகள் வழியாக பெற்றனர். அந்த வகையில் வளனார் விவிலியத்தில் இறைவாக்கினராக சுட்டிக்காட்டப் படவில்லை என்றாலும் கூட கனவில் கடவுளின் தூதர் உரைப்பதற்கு அப்படியே அடிபணிபவராக இருப்பதை நம்மால் உணர முடியும்.

1. உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் (மத் 1:20)

2. நீர் எழுந்து குழந்தையையும், அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் செல்லும்.

3. ஏரோது காலமானதும் எகிப்தில் இருந்து சொந்த நாட்டிற்கு செல்ல கனவில் அறிவுறுத்தப்படுகிறார். (மத் 2:19)

4. ஏரோதின் மகன் அர்க்கெலா ஆட்சி செய்கிறார் என கேள்விப்பட்டு, எருசலேமிற்குள் போக அஞ்சியதால் கனவில் எச்சரிக்கப்பட்டு நாசரேத்துக்கு சென்று அங்கு குடியேறுகிறார் (மத் 2:2) என நான்கு முறை வளனாரின் வாழ்க்கை பயணம் பற்றிய குறிப்பை பற்றி நாம் பார்க்கும் போது குறுகிய அளவே புனித வளனார் திருவிவிலியத்தில் இடம் பெற்றாலும், கனவுகளுக்கு செவிசாய்த்து ,கடவுளின் குரலுக்கு கீழ்படிபவராக வாழ்ந்திருப்பதை நம்மால் உணர முடிகின்றது. கனவிலும் கூட கடுவுளின் வாக்குக்காக கீழ்படிதலோடு காத்திருந்த புதுமை மனிதரான வளனார் ஆவார்.

4.ஏற்றுக்கொள்கின்ற தந்தை தாவீதின் மகனாகிய யோசேப்பே, உம் மனைவி மரியாவை நீர் ஏற்றுக்கொள்ள அஞச்வேண்டாம், அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான் (மத் 1:20) என்ற வாக்கை கடவுளின் தூதர் யோசேப்புக்கு அறிவித்தவுடன் மறுப்பேதுமின்றி முழுமனதோடு மனைவி மரியாவை ஏற்றுக்கொள்கிறார். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமிடம், என் மகனை எனக்கு பலியிடு என தந்தை கடவுள் கேட்ட போது எப்படி தனது நம்பிக்கையை ஆபிரகாம் வெளிப்படுத்தினாரோ அந்த நிலையிலிருந்து சிறிதும் மாறுபடாமல் தமது நம்பிக்யைகையை புனித வளனார் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.

புனித வளனாரின் ஏற்றுக்கொள்ளல் என்பது போனால் போகிறது என்ற நிலையிலோ அல்லது

அனுதாபத்தின் அடிப்படையிலோ அமைவதாக எடுத்துக்கொள்ளல் முடியாது. மாறாக இவரது ஏற்றுக்கொள்ளல் முழுமையான அர்ப்பணிப்பின் அடையாளமாக அமைவதை நம்மால் சற்று ஆழ்ந்து யோசித்தால் நன்கு உணர முடியும். கொடுப்பது என முடிவெடுத்து விட்டால், இதயத்தில் இருந்து கொடுங்கள். அர்ப்பணிபப்து என முடிவெடுத்துவிட்டால், ஆழ்மனதிலிருந்து அர்ப்பணியுங்கள் என்பதற்கேற்ப தன்னை முழுவதும் மரியன்னைக்கும், பிறக்க இருக்கின்ற குழந்தைக்கும் அர்ப்பணிப்பதன் அடையாளமாக அன்னை மரியாளை ஏற்றுக் கொள்கிறார்.

5.படைப்புத்திற துணிவு நிறை தந்தை

 தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும், சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள். (கொரி 14:20) பக்குவம் என்பது யாதெனில் காயப்படுத்துகின்ற சூழல்கள் பல வந்திடினும் கண் கலங்கிடாது, இதுவும் கடந்து போகும் என துணிந்து எழுவதே.. பன்னிரு வயதில் பரமன் இயேசு ஆலயத்தில் வைத்து காணாமல் போகிறார். அங்கு, இங்கென தேடி, களைத்து மூன்றாம் நாள் ஆலயத்தில் அறிஞர்கள் புடைச்சூழ அருமை மகனை காண்கின்றனர். மரியா யோசேப்பு என்னும் பெற்றோர். மகனை கண்டுபிடித்துவிட்டோம் என்னும் மகிழ்வும், என்னே என் மகனுக்கு ஞானம் என்னும் வியப்பும் ஒருசேர முகத்தில், என்னை ஏன் தேடினீர்கள்? என் தந்தையின் அலுவல்களில் நான் ஈடுபடவேண்டும் என உங்களுக்கு தெரியாதா என இறைமகன் வினவியபோது அன்னை மரியாளுக்கு மட்டுமல்ல, புனித வளனாருக்கும் நெஞ்சத்தில் வாள் ஊடுருவியது போல வலித்திருக்கும். இந்த வினாவை நாம், நம் தந்தையரிடம் கேட்டிருந்தால் என்ன நடுந்திருக்கும்? சற்று நினைத்துபாருங்கள், அவைதனில் மகன் அவமானப்படுத்திவிட்டான் என கலங்கியிருப்பார், பிள்ளை வளர்க்கும் முறையா இதுவென நம் தாயை கடிந்திருப்பர். ஆனால் ஏதும் மறுமொழி கூறா புனித வளனாரோ, நடப்பதை எல்லாம் உள்ளத்தில் இதுவும் இறைவனின் திருவுளமோ என படைப்புத்திற துணிவுநிறை மனதுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல தந்தையாக, தகைமைப்பண்பு பொருந்திய தலைவனாக இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

6. உழைக்கின்ற தந்தை

தந்தை: ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும். ஏனெனில் தன்னடக்கம்,விவேகம், நீதி, துணிவு, ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. (சால ஞா 7:8) ஆதாமின் பாவத்தினால் மண்ணில் மனிதருக்கு உடல் உழைப்பு வந்தது என்று சொன்னாலும் கூட, கடவுள் உழைக்கமறுத்திருந்தால் நாம் உயிர்வாழ இத்தகைய எழில் மிகு உலகு அமைந்திருக்காது. மண்ணில் வியர்வை சிந்த உழைக்கின்ற ஒவ்வொருவரும் கடவுளின் உலகை புதுப்பிக்கும் பணிகளில் பங்கேற்கின்றோம். அந்த வகையில் தச்சு தொழிலை தம் வாழ்வுக்கு ஆதாரமாய் ஏற்று , எளிய வாழ்வால் திருக்குடும்பத்தை உண்பித்த புனித வளனார் உழைக்கின்ற தந்தையாக உழைப்பாளர்களின் பாதுகாவலராக கொண்டாடப் பொருத்தமானதே!

சுறுசுறுப்பும், முயற்சியும் உங்கள் தோழர்களாய் இருந்தால் வெற்றியும், நிறைவும் உங்கள் காலடியில் இருக்கும் என்பதற்கேற்ப, சுறுசுறுப்பையும், முயற்சியையும் ஒருங்கே வெளிப்படுத்த கூடிய கடின உழைப்பை தன் தோழமையாக ஏற்று உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது (2தெச3:10) என்ற இறைவார்த்தைக்கு சான்று பகர்கின்றார் புனித வளனார். மண்ணில் உடல் உழைக்க படைக்கப்பட்டுள்ளது. என்னம், உணர்வு நம்மிடம் இருக்கும் பட்சத்தில் மனம் ஒரு போதும் சோம்பலை

நாடாது என்பதற்கு சான்றாக உள்ள புனித வளனாரின் வாழ்வு நமக்கு மிகச்சிறந்த சான்றாகும்.

7. நிழல் நில் தந்தை

கடவுள் மனிதர்களை அறியாமைக்கென்று படைத்தார், தம் சொந்த சாயலில் அவர்களை உருவாக்கினார். (சால ஞா 2:23) நிழல் நில் தந்தை என்ற கருப்பொருளில் சிந்திக்கின்ற வேளையில் புனித வளனாரை குறித்து திருதந்தை பிரான்சிஸ் குறிப்பிடும் போது, புனித வளனார் இறைமகன் இயேசுவின் நிழலாக இருந்தார் எனகுறிப்பிடுகின்றார். நாம் மண்ணை சார்ந்தவரின் சாயலை கொண்டிருப்பது போல, விண்ணை சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம் என (1கொரி15:49) சுட்டிக்காட்டுவது போல, விண்ணக தந்தையின் மண்ணக சாயலை புனித வளனார் தாங்கியிருந்ததாக குறிப்பிடுகிறார்.

பாலனாய் பிறந்த இயேசுவை ஏரோதின் வாளுக்கு தப்புவிக்க துணைநின்ற வளனார், இயேசுவை

கண்மணியென காத்தார், கடவுளின் மகனாய் வளர்த்தார், கல்விலும், ஞானத்திலும் கடவுளுக்கும்

மனிதருக்கும் உகந்தோராய் அவர் வளரும் வண்ணம் கவனமாய் கண்காணித்தார். இவ்வாறு தாய் தன்

பிள்ளையை தேற்றுவது போலவும், தந்தை தன் பிள்ளையை தரணி மெஞ்ச வளர்ப்பது போலவும்

வளனார் தம் அருமை மகனை மனிதருள் மாணிக்கமாய், கடவுளின் மகனாய் உலகத்திற்கு உவப்புடன் தந்தருளினார்.

நிறைவாக:

தந்தையர்கள் பிறப்பதில்லை, மாறாக உருவாக்கப்படுகின்றனர், குழந்தைகளை பெற்றெடுப்பதால்

அல்ல, மாறாக கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்த சமுதாய குடிகளாக பிள்ளைகளை உருவாக்குவதால் என்ற திருத்தந்தையின் கூற்றுக்கிணங்க நல்லதொரு தந்தையாக வாழ்வில் நடைமுறைகளை நமக்கு வாழ்வில் கற்று தந்து நம்மையும், கடவுளின் புதுப்பிக்கும் பணிகளில் உடன்பங்காளிகளாக பயணிக்க பாசமுடன் அழைக்கின்றார் புனித வளனார். வந்துபாருஙகள் என்று அழைக்கும் வளனாரிடம் வாருங்கள். வாழ்வியல் நடைமுறைகளை கற்றுக்கொள்ளுங்கள் வாழக்கை என்னும் பூந்தோட்டத்தை வளனாரிடம் விளங்கிய இறையியல் பண்புகளால் அலங்கரியுங்கள்.