Namvazhvu
சாஞா 2:12, 17-20, யாக் 3:16-4:3, மாற் 9:30-37 பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
Friday, 24 Sep 2021 12:06 pm
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசு சொன்ன பலகருத்துக்கள் அவரின் சீடர்களுக்கு விளங்கவில்லை. அது அவர் சொன்ன உவமைகளாக இருக்கட்டும் அல்லது அவரின் பாடுகள் - இறப்பு பற்றியதாக இருக்கட்டும்.  அவை அவர்களுக்கு விளங்கவில்லை. காரணம் இயேசுவோடு இருந்தால் துன்பம் இராது அவர் அரசராக மாறுவார் நாம் மந்திரிகளாக சுகபோகமாக வாழலாம் என்று நினைத்தார்கள். எனவேதான் ஆண்டவர் இயேசு முதன் முறையாக தன் சாவைப்பற்றி அறிவித்தபோது முதன்மைச் சீடர் பேதுரு இது இப்படி நடக்கக்கூடாது என்று சொல்லி இயேசுவை கடிந்து கொள்கிறார். மீண்டும் இரண்டாம் முறையாக ஆண்டவர் இயேசு தன் சாவைப்பற்றி அறிவிக்கும் போது சீடர்கள்அதை சற்றும் பொருட்படுத்தாமல் நம் குருநாதர் இயேசுவிற்கு பிறகு நம்மில் பெரியவர்  யார்? அவரின் இறப்பிற்கு பிறகு யார் அவரின்  இடத்தை நிரப்புவது? என்ற விவாதத்தில் மூழ்கி போனார்கள்.அவர்களின் எண்ணங்களை அறிந்த இயேசு தான் வந்திருப்பதின் நோக்கம் பணிபுரிவதற்கே அன்றி, பணி ஏற்பதற்கு அல்ல. எனவே அனைவருக்கும் தொண்டராய் இருங்கள் என்று அறிவுறுத்துகிறார். தாழ்ச்சி என்பது புண்ணியங்களுள் ஒன்று. இதை கடைபிடித்தோர் புனிதர்களாக மாறினார்கள். நாமும் தாழ்ச்சியுள்ளவர்களாக புனிதர்களாக மாற இறைவன் தரும் அழைப்பை ஏற்று இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவர் ஞானமுள்ள நீதிமான்களை அதிகமாக அன்பு செய்கிறார். நீதிமான்களும், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்றனர். ஏனெனில் ஆண்டவர் நீதியும் இரக்கமுமாக இருக்கிறார். இறைப்பற்றில்லாதோர்  நீதியையும், நீதிமான்களையும் வெறுக்கின்றனர். நீதிமான்களை தாக்க பதுங்கி இருக்கின்றனர். இருப்பினும் இறுதியில் இறைப் பற்றில்லாதோருக்கு இழிவான இறப்பே கிடைக்கும் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மனிதரின் ஞானம் பேய்த்தன்மை வாய்ந்தது. குழப்பத்தை உண்டாக்குவது. பொறாமையும், கட்சி மனப்பான்மையும் உருவாக்கி கொடுஞ்செயல்கள் செய்ய தூண்டுவது. பொருட்களின் மீது பேராசையை உருவாக்கி, அதற்காக மனித உயிரை கொல்லும் அளவிற்கு மனதை மந்தப்படுத்துவது. ஆனால், இறைஞானம் பணிவையும், நன்னடத்தையும், நாவடக்கத்தையும் கொண்டு வரும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் அன்பு தந்தையே உம் திருஅவையை வழிநடத்தும் உம் அருள்பணியாளர்கள், உம் திருமகன் இயேசுவைப் போல தொண்டர்களாகவும், பணியாளர்களாகவும் இருந்து தாழ்ச்சி என்னும் புண்ணியத்தின்படி வாழ்ந்து எங்களுக்கு இறைஞானத்தை பெற்று தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் வானகத்தந்தையே, நாட்டை  ஆளும்  தலைவர்கள் மனித ஞானத்தின்படி மக்களை பிரித்து குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி ஆட்சி செய்யாமல், இறை ஞானத்தின்படி பணிவோடு, தாழ்ச்சியோடு, நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் விண்ணகத் தந்தையே குடும்ப உறவில் வாழும் நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கவும் தாழ்ச்சி எனும் புண்ணியத்தை கடைபிடித்து ஒருவரை ஒருவர் உயர்த்தி  பிடிக்கவும்  இறைஞானத்தின்படி வாழ்ந்து நற்செயல்கள் புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எங்கள் பரமதந்தையே எம் பங்கில் உள்ள இளைஞர், இளம் பெண்கள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழவும், தங்களின் திறமைகளை அழிவுக்காக அன்று, ஆக்கத்திற்காக பயன்படுத்தவும் திருஅவையின் உண்மையான நம்பிக்கையாளர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் இறைதந்தையே திருமணவயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்போரையும், திருமணம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்போரையும் ஆசீர்வதித்து இவர்களின் உள்ளத்து தேவைகளை நிறைவு செய்து மனவேதனைகளை ஆற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.