Namvazhvu
முதல் கிறிஸ்தவ பெண் அமைச்சர் வீரப்பெண்மணி லூர்தம்மாள் சைமன்
Monday, 27 Sep 2021 05:46 am
Namvazhvu

Namvazhvu

செப்டம்பர் – 26

மீனவச் சமூகத்தின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றியவர்! மீனவர் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பப்புள்ளியாக திகழ்ந்தவர்! இன்று மீனவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களின் அஸ்திவாரம்! ‘மீனவ சமூகத்தின் வீரப்பெண்மணி!’ என மீனவ சமூகத்தில் மிகவும் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், திருமதி. லூர்தம்மாள் சைமன் அவர்கள் திகழ்கிறார்.

மீனவப் பிரதிநிதித்துவம் வேண்டும், கோட்டையில் மீனவனின் குரல் ஒலிக்க வேண்டும் என்றெல்லாம் மீனவ சமூகத்தில் பேச்சும், போராட்ட நகர்வுகளும் காணப்படும் இக்காலகட்டத்தில் முட்டி மோதி பார்த்தாலும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே போய் முடிகிறது! ஆனால், பல வருடங்களுக்கு முன்பே அதுவும், பெண் ஒருவர் கோட்டையில் அமைச்சர் பதவியை வகித்ததோடு, தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் அமைச்சர்; முதல் கிறிஸ்தவப் பெண் அமைச்சர் எனும் சிறப்புகளையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் முதல் ஊராட்சி உறுப்பினர் வரையில் லஞ்சம் ஊழல் செய்யாத யாரையும் நாம் காண்பது சிரமம்! அதேவேளை லஞ்சமே வாங்காத ஒரே அமைச்சர் யார் எனக்கேட்டால் அது லூர்தம்மாள் சைமன் எனச் சொல்லும் அளவுக்கு இவர் பெயர்பெற்றவர் என்பது நமக்கு பெருமை தருகிறது.

யார் இந்த லூர்தம்மாள் சைமன்?

1911 செப்டம்பர் 26 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி என்னும் மீனவ கிராமத்தில் மைக்கில் அலெக்சாண்டர், பார்பரம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் மரிய லூர்தம்மாள். இவரது சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். இலங்கைக்கு உப்பு மற்றும் கருவாடு ஏற்றுமதி செய்துவந்தார் தந்தை அலெக்சாண்டர்.

தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த லூர்தம்மா குளச்சல் கிராமத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மனுவேல் சைமன் என்பவரை திருமணம் செய்து, அவரோடு வெளிநாட்டில் சென்று அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். இவர்களுக்கு மொத்தம் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தைப் போக்க சைமனின் தம்பி மகள் ஃபிலோமினாவைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்தனர்.

முதல் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த போதே ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய சைமன், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் எஸ்.எம் பிரஸ் என்ற அச்சு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்தார். அது அச்சு நிறுவனமாக இருந்த போதிலும், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூடும் இடமாகிப்போனது. நேசமணி, சிதம்பரநாதன், ஏ.ஜே.ஜாண், நூர் முகம்மது என்று நட்பு வட்டம் பெருக, திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் உறுப்பினரானார் சைமன். அதன்மூலம் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பேரில் 1951இல் விளவங்கோடு தொகுதியிலும், 1954 ஆம் ஆண்டு கொல்லங்கோடு தொகுதியிலும் தேர்தல்களில் வென்று இருமுறை கேரளா சட்டமன்ற உறுப்பினரானார் சைமன். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கொச்சி திருவிதாங்கூர் மாநிலத்துடன் இருந்தது. 1956 இல் தான் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மீனவர்கள் கடற்கரையைத் தாண்டி வெளியே வராத காலத்திலேயே நாகர்கோவில் மாதர் சங்கத்துக்கு வந்து பெண் விடுதலை குறித்து லூர்தம்மாள் பேசியுள்ளார். உள்ளூர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயற்குழு உறுப்பினர், செவித்திறன் - மொழித்திறன் அற்றோர் சங்கத்தின் தலைவர் எனப் பல தளங்களிலும் சமூகப் பணியாற்றினார்.

லூர்தம்மாளின் அரசியல் நுழைவு மிக சுவாரஸ்யமானது. கணவர் சைமனின் நெருங்கிய தோழர் ஏ.ஜே.ஜாண் கேரள காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக ஆளுநர் பதவியில் இருந்தவர். 1957 ஆம் ஆண்டு, தமிழகத்தின் தேர்தல் அறிவிப்புகள் வந்தபோது இந்திராகாந்தி அவர்களின் வேண்டுகோளை ஏற்று தகுதியான பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்த பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் காமராஜர். அப்போது காமராஜருக்கு ஏ.ஜே.ஜாண் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் லூர்தம்மாள். அவரின் கூரிய அறிவுத்திறன் மற்றும் மொழிப்புலமை இரண்டும் காமராஜரை வெகுவாகக் கவரவே, குளச்சல் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் லூர்தம்மாள்.

ஏழு அமைச்சர்கள் கொண்ட அமைச்சர் குழுவின் பட்டியலை ஆளுநர் ஜாணிடம் அளித்தார் காமராஜர்.

காமராஜர் இரண்டாவது முறை முதல்வராகப் பொறுப் பேற்ற அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் லூர்தம்மாள் சைமன். ஜோதி வெங்கடாசலத்துக்குப் பிறகு தமிழகத்தின் பெண் அமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சராக 1957 ஏப்ரல் 13 அன்று பதவியேற்றுக் கொண்டார் லூர்தம்மாள். அந்தப் பதவியில் 1962 மார்ச் 1 வரை அவர் நீடித்தார்.

தன் பதவி காலத்தில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் ஏராளம்

ஏராளம்! உள்ளாட்சித்துறை சாதனைகள்:

லூர்தம்மாள் செய்த உள்ளாட்சி பணிகளில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுபவை சென்னை மாநகராட்சியை நிர்வகிக்க ஏதுவாக வட மற்றும் தென்சென்னைப் பிரிவுகளாகப் பிரித்ததும், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்துக்காக வெள்ளை அறிக்கை சமர்ப்பித்ததும்தான்.

மாவட்டங்களில் போடப்படும் திட்டங்கள் கிராமங்கள்வரை போய்ச்சேரவில்லையென அவர் உணர்ந்தார். இதையெல்லாம் சரிசெய்ய உள்ளாட்சி கட்டமைப்பை மாற்றியமைத்தார். உள்ளாட்சி நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

1958 இல் லூர்தம்மாளின் முயற்சியால் “தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்” உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிகாரம் படைத்த மாவட்ட ஆட்சிக் குழு முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு கிராமம், ஒன்றியம் என்ற அளவில் பஞ்சாயத்துக்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பெண்களை நியமன உறுப்பினர்களாக நியமித்துக்கொள்ள வழிவகை செய்தது. தமிழகத்தின் குக்கிராமங்கள்வரை சாலை அமைப்பதில் அவர் முனைப்பு காட்டினார். அடிப்படைத் தேவைகளைத் தாண்டி விவசாயம், கால்நடை, ஊரகத் தொழில்கள், கல்வி, பிற பணிகளையும் மேற்கொள் ளக்கூடிய அமைப்பாகக் கிராம பஞ்சாயத்துக்களையும் ஒன்றியங்களையும் மாற்றியமைத்துத் தமிழகக் கிராமப்புற வளர்ச்சிக்கு வித்திட்டார். பஞ்சாயத்துக்கள் வழியே கோழிப் பண்ணை, மீன் வளர்ப்புப் பண்ணை, கால்நடை மருத்துவமனைகள் போன்றவற்றைத் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார்.

சென்னை மாநகராட்சி மன்றம் கொடுக்கும் விளம்பரங்கள் இந்தி, தெலுங்கு மொழிகளில்கூட இருக்கலாம் என்னும் நிலை இருந்தது. அந்த நிலையைச் சென்னை மாநகராட்சி திருத்த மசோதா 55 இன் மூலம் நீக்கிய லூர்தம்மாள், விளம்பரங்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ மட்டுமே இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

அப்போதைய கோட்டாறு அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்தது, மீனவ கிராமங்களில் பஞ்சாயத்து நூலகங்கள் அமைத்தது என அவர் அமைச்சராக இருந்த காலத்தில் குமரி மாவட்டத்துக்கும் ஏராளமான பயனுள்ள திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். இந்தியக் குடிநீர் வாரியத்தின் தலைவியாகவும் இருந்தார்.

காமராஜர் கொண்டுவந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை ‘கேர்’ என்ற அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தக் காரணமானார். இதன் மூலம் 14 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்தனர். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் கால முடிவில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்து அமைப்பது என்ற குறிக்கோளை முன்வைத்தார் லூர்தம்மாள்.

பிளாக்குகளின் கீழ் பஞ்சாயத்துகளைக் கொண்டுவருவது, இந்தக் கமிட்டிகளுக்குத் தேவையான நிதி, தொழில்நுட்ப வசதிகள் போன்றவற்றைச் செய்து தர வழிவகுத்தது லூர்தம் மாளின் வெள்ளை அறிக்கை. 1958 ஆம் ஆண்டு, மதராஸ் பஞ்சாயத்து சட்டம் லூர்தம்மாளின் பெருமுயற்சியால் கொண்டுவரப்பட்டது.

மீன்வளத்துறை சாதனைகள்:

மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளிக்கெண்டை மீனை லூர்தம்மாள் 1959 இல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தார். புற்களை விரும்பிச் சாப்பிடும் புல் கெண்டையை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தார். கெண்டைரக மீன் வளர்ப்பைத் தமிழகம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் பரவலாக்கினார்.

திருவல்லிக்கேணி பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை கருத்துக்கு மறுப்பு தெரிவித்த லூர்தம்மாள், ‘வட சென்னைப் பகுதியே அதிகம் வளர்ச்சியைக் காணவேண்டிய பகுதி. தென் சென்னை ஏற்கனவே விரிவடைந்துவிட்டது’ என்று சொல்லி இராயபுரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைய முழு முயற்சி எடுத்தார்.

மீனவர் நலனுக்கென 1957ஆம் ஆண்டு, இந்திய - நார்வே நாடுகளின் கூட்டு முயற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி ஆய்வகம், குருசடை, தூத்துக்குடி, எண்ணூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கடல்வாழ் உயிரின மையங்கள் போன்றவை இவரது சீரிய முயற்சியால் அமைக்கப்பட்டன. சென்னை, பவானிசாகர், மணிமுத்தாறு, கன்னியாகுமரிப் பகுதிகளில் நன்னீர் உயிரின ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டன. வெகு வேகமாகச் செல்லக் கூடிய ‘பாப்ல’ வகைப் படகுகளைத் தமிழக மீனவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் லூர்தம்மாள். தனி மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் 24 மணி நேரமும் அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றினார். ரெயின்போ ட்ரவுட் என்ற நன்னீர் மீன் வகையை உதகைப் பகுதியின் ஏரிகளில் அறிமுகம் செய்தார். இந்த மீன் முட்டைகள் காஷ்மீரிலிருந்து தருவிக்கப்பட்டவை!

இவை தவிர, வறட்சிக் காலத்தில் உவர்நீர் குட்டைகளில் வளர்க்கக்கூடிய ஜிலேபி வகை கெண்டை மீன்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து தமிழகத்தில் அறிமுகம் செய்தார். வறட்சிக் காலத்தில் மீனவர்கள், விவசாயிகள் குட்டைகள் அமைத்து வளர்க்க இந்த வகை மீன்கள் கைகொடுத்தன. இந்த மீன் வகையை ‘லூர்தம்மாள் மீன்’ என்றே இன்றும் சொல்வோருண்டு! மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் இவரது காலத்தில்தான் வலுப்பெற்றன.

விசைப்படகுகளை தமிழகம் முழுக்க அறிமுகம் செய்தார். குறிப்பாக குளச்சலில் முதலில் விசைப்படகினை அறிமுகம் செய்து வைத்தார் . தூத்துக்குடி, நாகை , மற்றும் சென்னையில் விசைப்படகு ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உருவாக்கினார். குமரி மாவட்டம் சைமன் காலனியில் பிஷர்மென் டிரெய்னிங் சென்டரை உருவாக்கியதோடு ஆறு மாதம் தங்கி படிக்க விடுதியையும் உருவாக்கினார்.

விசைப்படகு அறிமுகத்தால் கடற்கரை கிராமங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலிலிலும் கலவரம் உருவானது. விசைப்படகை தடை செய்ய கட்டுமரக்காரர்களால் வழக்கும் தொடுக்கப்பட்டது. லூர்தம்மாவின் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. விசைப்படகு வாங்கியவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஆனால், இன்றைக்கு விசைப் படகுகளே மீனவர்களின் உயிர்நாடியாக விளங்குகிறது.

தொடர்ந்து செய்த சமூகப்பணி :

அன்றைய பிரதமர் இந்திரா காந்தியுடன் லூர்தம்மாளுக்கு ஆரோக்கியமான நட்பு இருந்தது. இராஜேந்திர பிரசாத், நேரு, காமராஜர், கக்கன், பக்தவத்சலம் என்று காங்கிரஸ் தலைவர் களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார் லூர்தம்மாள்.

1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டவர் சாதி ரீதியான ஓட்டுப் பிரிப்பால் தோல்வியைத் தழுவினார். கணவர் அலெக்சாண்டர் அத்துடன் தன் அரசியல் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். ஆனால் லூர்தம்மாளோ மனம் தளரவில்லை. மீனவ சமுதாயம் முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் முன் நின்றார்.

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்துக்குப் பின் மீனவர் சமூக மக்களுடன் மூன்று நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார் லூர்தம்மாள். அதே ஆண்டு அலெக்சாண்டர் சைமன் இறந்துபோக, மகன்கள் ஆதரவில் வாழ்ந்தார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் இடுப்பெலும்பு உடைந்துபோக, அதன் பின் வீல்சேர் வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டார்.

சிறப்புகள் :

1997 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டமன்ற வைர விழா கொண்டாடியபோது லூர்தம்மாளை அழைத்து விருது வழங்கி கௌரவப்படுத்தினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

கன்னியாகுமரி மாவட்டம், கீழமணக்குடி - மேல மணக்குடி இடையே சுமார் 21 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் சென்னை நேப்பியர் பாலம் போன்று, கட்டப்பட்ட பிரமாண்ட பாலத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இறுதிக்காலம் :

லூர்தம்மாள் செய்த மக்கள் பணிகளைவிட கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் ரீதியாக எவரும் சாதிக்கவில்லை. அவ்வளவு மதிப்புமிக்க ஒருவர் சாதி ரீதியாக தோற்கடிக்கப்பட்டார் என்பது மிகவும் வருத்தமான செய்தியாகும். இவ்வளவு பெரிய ஒரு அரசியல் ஆளுமையை தமிழக அரசும் மீனவர்களும், ஏன் தமிழக கிறிஸ்தவர்களும்  தமிழக ஆயர்களும் காங்கிரஸ் கட்சியினரும் மறந்து போயினர் என்பது அதை விட வருத்தமான செய்தியாகும்.

“வீட்டில் பெண் குழந்தைகள் இல்லாமல் இருப்பது குறை, பெண் குழந்தைகளை வளர்ப்பது வரம்” எனச் சிலாகித்த லூர்தம்மாள், தன் இறுதி நாள்களைத் தனிமையிலும், வலியிலும் கழித்து, 2002 மே 4 அன்று சென்னை அண்ணா நகரில் காலமானார்.

(நன்றி : ‘கடற்கரை’ இரு மாத இதழ், ஆக-செப்,2021).