Namvazhvu
பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
Monday, 27 Sep 2021 11:14 am
Namvazhvu

Namvazhvu

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு

(எண் 11:25-29. யாக் 5:1-6, மாற் 9:38-43,45,47-48)

அனைவரையும் அரவணைக்கும் கடவுளின் அருள்கரம்

கடவுளுக்கென்று சொந்த இனமோ, மொழியோ, சடங்கு சம்பிரதாயங்களோ எதுவும் இல்லை. அவரின் படைப்பு எதுவும் அவரிடமிருந்து விலகியிருப்பதில்லை, அவருக்கும் தம் படைப்பிலிருந்து விலகியிருக்கத் தெரியாது. அவர் அனைவருக்கும் அனைத்திற்கும் அனைத்துமாய் இருக்கின்றார். அவரின் பாசப்பிணைப்பிலிருந்து அவரது அன்புப் பிள்ளைகளைப் பிரிக்கும் சக்திகள் இவ்வுலகில் இல்லை. தாம் விரும்பும் அனைவரோடும், தமது அருள்கொடைகளைக் கடவுள் பகிர்ந்து கொள்கின்றார் என்பதை இன்றைய வாசகங்கள் உணர்த்துகின்றன. பல்வேறு மனித கருவிகள் மூலம் பல்வேறு வகைகளில் அவர் இன்றும் செயலாற்றுவதை உணர்கின்றோம். எல்லா மதங்களிலும் கடவுள் மனிதர்கள் உண்டு. கடவுளோடு அவர்கள் கொள்ளும் உறவு அவர்களை மனிதர்களுக்குள் மாணிக்கங்களாக உருவாக்குகின்றது. இறைவன் என்ற ஆழ்கடல் யாரும் இறங்கி முத்தெடுக்கலாம். அவரைத் தேடுவோர் யாரையும் அவர் வெறும் கையோடு அனுப்புவதில்லை. தம் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து அவர்களுக்கு அருள் வரங்களை அள்ளிக்கொடுப்பதில் நிறைவு காணும் கடவுள் யாவே. மனிதர்களின் நன்மையான செயல் மற்றும் சொல் அனைத்தும் கடவுளிடமிருந்தே பிறப்பெடுக்கின்றது. கடவுளின் வல்லமை எனக்கு தான் என்றும், கிறிஸ்துவின் மீட்பு எனக்கு மட்டும் என்று புகழ் தேடுவது தவறு. நன்மை செய்யும் அனைவருக்கும் கடவுளின் அருள் கொடைகள் கொட்டிக் குவிக்கப்படும். தொடர்ந்து நன்மைத்தனம் செய்தால் அருள் நிலைக்கும். தீமை செய்யும்போது அழியும். ஒரு மரம் தருகின்ற கனியை வைத்தே அதன் தன்மையைத் தீர்மானிக்க முடியும். நல்ல மரங்கள் அனைத்தும் நட்டு நீர் பாய்ச்சி வளர்ப்பவர் கடவுளே.

உன் சிந்தனை என் சிந்தனையல்ல (எசா 59:8-9).

மனிதர்கள் சிந்திப்பதுபோல் கடவுள் சிந்திப்பதில்லை என்பதால் நமது சிந்தனைகளை அவர்மேல் திணிப்பது தவறு. “குரைக்கின்ற நாய்கள் கடிப்பதில்லை” என்பது சில மனிதர்கள் உருவாக்கிய பழமொழி. அது அனைத்து நாய்களுக்குத்  தெரியாது (அல்லது  ஒத்துவராது). சிலரின் சிந்தனையான இந்தப் பழமொழியை முற்றிலும் உண்மை என்று கருதி செயல்படும்போது, அது மிகவும் ஆபத்தாக முடியும். நாய்களைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியவர்களும் நாய்களிடம் கடி வாங்கிய கதை உண்டு. அது போல் கடவுள் எப்படி, எங்கு செயல்பட வேண்டும் என்ற சட்டம் மனிதர்கள் இயற்ற முடியாது. தூய ஆவியானவர் செபக்கூட்டங்கள் நடத்துவோர் பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று உரிமை கொண்டாட முடியாது. செபக்கூட்டங்கள் நடத்துவோர் தங்களால் மழையை வரவழைக்கவும், நிறுத்தவும் முடியும் என்று அறிக்கையிடுவது ஆபத்தானது. குறுகிய எண்ணத்தோடு சிந்திப்பதே கடவுளுக்கு உகந்தது அல்ல. நற்செய்தியில் சமாரியர்கள் மீது நெருப்பை வரவழைப்போமா என்று கூறிய யோவானும், யாக்கோபுவும் இடியின் மக்கள் என்று பெயர் பெற்றனர் (லூக் 9:52-28).

மோசேயின் காலத்தில் அருள் பெற்ற சிலர்.

இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்று மார்தட்டினாலும், அவரால் ஆசீர்வதிக்கப்படாத மக்களினமே இல்லை என்பதே உண்மை. எகிப்தில் கொடுமைக்குள்ளான அனைத்து மக்களின் மீட்பராகவே மோசே செயலாற்றுகின்றார். பாலஸ்தீன எல்லைக்குள் வாழ்ந்த அனைவருமே இஸ்ரயேல் மக்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டனர். இன்றைய முதல் வாசகத்தில் மோசேவிடம் இருந்த அதே கடவுளின் ஆவி மேலும் எழுபது பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. எழுபது என்ற எண்ணை அடையாளமாகப் பொருள் கொண்டால், கடவுள் எண்ணற்ற பலரை அருள் பொழிவு செய்தார் என்றே பொருள் (எண் 11:29). உடன்படிக்கைக் கூடாரத்தில் இல்லாத எல்தாதும், மேதாதும் அதே ஆவியைப் பெற்று இறைவாக்குரைக்கின்றனர். எந்த இடத்தில் அவர்கள் உள்ளனர் என்பது முக்கியமல்ல; அவர்களது நன்மை தனம்மிக்க செயலாற்றலே முக்கியமானது. கடவுளருள் பலருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் அது எள்ளளவும் குறைவுபடுவதில்லை. அது அள்ள அள்ள குறையாத ஆழி. மேலும், எவரெவருக்கு கடவுள் ஆவி தரப்பட வேண்டும் என்று முடிவு செய்பவர் கடவுள்தான். மக்கள் அனைவரும் கடவுளைத் தேடி வந்து அவரின் திருத்தூதர்களாகச் செயல்படுவதைவிட சிறப்பான காரியம் எதுவுமில்லை (எசா 2:1தொ). ஆனால் சுயநலவாதிகளுக்கு கடவுளாவி தரப்பட்டால் அவர்கள் அதைப் பணம் சம்பாதிக்கும் கடைச்சரக்காக மாற்றிவிடுவர்.

அழைப்புக்கு ஏற்ற வாழ்வு

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பெயரால் நற்செயல் செய்யும் ஒருவரைத் தடுக்க சீடர்கள் முயற்சி செய்கின்றனர். சீடர்களால் செய்ய முடியாத ஒன்றை (மாற் 9:14-29), அந்தக் குழுவையே சேராத மற்ற ஒருவர் இயேசுவின் பெயரால் அதைச் செய்கின்றார். முற்றிலும் கடவுள் சார்பான வாழ்வால்தான் அவரால் பேயை ஓட்டியிருக்க வேண்டும். சாத்தானின் சதிராட்டங்களை வெற்றிகொள்ளாதவர் அதன் பலிகடாவாகவே இருப்பார். தன் குழுவைச் சேராதவர்கள் நன்மை செய்வது மற்றும் கடவுள் மனிதனாக இருப்பது குறித்து இயேசு மகிழ்கின்றார். கடவுளின் மகனாக இருந்தும், நல்லது செய்வது தமக்கு மட்டுமே சொந்தமானது என்று அவர் உரிமை கொண்டாடவில்லை. கடவுளின் அருள் பலரிடம் பரவிக்கிடப்பதை இயேசு அடிக்கோடிடுகின்றார். இந்தப் பன்னிருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள வரம் பலருக்கும் பரவலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் பெயரால் பேயை ஓட்டுகின்றவர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட வாய்ப்பில்லை. இதையே இயேசு சுருக்கமாக எனக்கு எதிராக இல்லாதவன் என் சார்பாக இருக்கின்றான் என்று கூறுகின்றார். அந்த மனிதன் ஆற்றலின் தோற்றமாகிய இயேசுவின் பெயரைச் சரியாகப் பயன்படுத்தி, சரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளான். இயேசுவின் பெயரைப் பயன்படுத்த மற்றவர்களுக்கு உரிமையில்லை என்று பன்னிரெண்டு திருத்தூதர்களும் கருதியிருக்கலாம். மற்றவர்கள் செய்யும் நற்செயல்களுக்காகப் பொறாமை கொள்வது சீடத்துவ பண்பாடல்ல என்று இயேசு கண்டிக்கின்றார்.

கிறிஸ்தவ வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் அந்த அழைப்புக்கு ஏற்ற உயர்ந்த வாழ்வு நடத்த வேண்டும். நாம் பெற்றுக்கொள்ளும் திருமுழுக்கு புனித வாழ்வுக்கான தொடக்கமே. கடவுள் அழைப்பின் உயரிய நோக்கத்தை அறிந்து அதற்கேற்ப வாழ்வு நடத்தாதவர்கள் இறுதியில் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை மத் 25:31-46 தெளிவாக்குகின்றது. சுயநல நோக்கோடு பயன்படுத்தப்படும் ஆன்மீக வளமும், அழிவின் பாதைக்கே வழி வகுக்கும். கடவுள் இலவசமாக சிலர் கையில் ஒப்படைத்திருக்கும் ஆன்மீகக் கொடைகளுக்குக் காப்புரிமை கொண்டாடுவது ஆபத்தானது.

நல்லது செய்வோர் அனைவரும் கடவுளுக்குச் சொந்தமானவர்களே.

மோசே யோசுவாவிடம் அந்த இருவரோடும் சேர்ந்துகொள் என்று கூறவில்லை. அதுபோல் இயேசு தம் சீடர்களிடம் தம் பெயரால் பேய்களை ஓட்டுபவரைப் பின்பற்றப் பணிக்கவில்லை. அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுகின்றார். தாம் வாழ்ந்த காலத்தில் இயேசு பிறமத சிந்தனைகளைக் கொஞ்சமும் கொச்சைப்படுத்தவில்லை. மக்களின் மனதை நஞ்சாக்கிய சில மதங்களின் நயவஞ்சக சிந்தனைகளையே கண்டித்தார். தமது தாய் மதத்தில் உருவாகிக்கிடந்த களைகளை முற்றிலும் களையப் பாடுபட்டார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் மற்ற மறைகளைப் பற்றி பேசும்போது, “இம்மறைகளிலே காணக்கிடக்கின்ற உண்மையானதும், புனிதமானதுமான எதையுமே கத்தோலிக்கத் திருஅவை வெறுத்து ஒதுக்குவதில்லை;…மதித்துப் போற்றுகின்றது,” என்று கூறுகின்றது. திருஅவை ஒரு மத இயக்கமாக இருந்தாலும் உலகின் ஆன்மாவாக செயல்பட்டு அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக  உயிரூட்டம்  தருகின்றது.  உலகின் மனசாட்சியாக நன்மையானது அனைத்தையும் அன்றாடம் அரங்கேற்றம் செய்வதோடு, அவ்வப்போது தலை தூக்கும் அநீத செயல்களைத் தண்டிக்கத் தவறுவதில்லை. பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வேளையில் திருத்தந்தை பிறமதத் தலைவர்களைக் கட்டித் தழுவி அவர்களின் வாழ்வின் வழிகளை ஆசீர்வதிப்பதோடு,   விண்ணகத்தை நோக்கிய பயணத்தில் அவர்களையும் தம்முடன் பயணிப்பவர்களாக ஏற்றுக்கொள்ளுகின்றார்.

சிலர் நன்மைத்தனத்தின் உயிர் தோற்றங்கள். அவர்களுக்குத் தீமையே செய்யத் தெரியாது. செயற்கரிய செயல்கள் செய்கின்ற மாமனிதர்களாகிய எழுத்தாளர்கள், இசைமேதைகள், தலைவர்கள், ஓவியர்கள்,

அறிவியல் அறிஞர்கள் …போன்ற அனைவரும்

ஏதாவது ஒரு முறையில் கடவுளோடு உறவுகொள்ளும் கடவுள் மனிதர்களாகவே இருப்பர். நம்மிடம் இருக்கும் திறமைகளை

வைத்துக்கொண்டு சில காரியங்களைச் செய்யலாம். ஆனால், செயற்கரிய காரியங்கள் செய்யும் ஆற்றல் விண்ணகத்திலிருந்தே பிறக்கின்றது என்பது இந்த சாதனையாளர்களுக்குத் தெரியும். அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தும் நாம், பல்வேறு உணவு பதார்த்தங்களைப் பல இடங்களில் இருந்து வாங்கிப் பயன்படுத்தும் நாம், அவற்றை உருவாக்கியவர்கள் எந்த மதத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேடுவதில்லை. திருமுழுக்குப் பெறாத நிலையிலும் கடவுளின் உயர் மதிப்பீடுகளைத் தம் வாழ்வில் பிரதிபலிப்போர் அனைவரும் கிறிஸ்துவின் ஒளியிலே நடைபயில்கின்றனர் என்று இரண்டாம் வத்திகான் ஏடு கூறுகின்றது.

எங்கும் நிறைந்திருக்கும் உண்மையின் ஒளிச்சிதறல்கள்

சூரியனை யாரும் சொந்தம் கொண்டாட இயலாது. நிலவின் ஒளிக்கு வரிவசூல் செய்வது குற்றம். காற்றுக்கு யாரும் கணக்கு போடக்கூடாது. மரங்கள் உமிழும் பிராண வாயு அனைவருக்கும் சொந்தமானது. உண்மையில் ஒளி சிதறல்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் இயேசுவே உண்மையின் ஒளியின் முழுமை என்பது நாம் அறிக்கையிடும் சத்தியம். மாட்டின் பியுபர் என்ற சிந்தனையாளர் ஒரு யூதராக இருந்தாலும் தமது நூல்களின் கிறிஸ்தவ சிந்தனைகளையே அள்ளி வழங்குகின்றார். போன்கோப்பர் என்ற பெயர்கொண்ட பிரிந்த சபையைச் சேர்ந்த போதகர், ஹிட்லரின் செயல்களைக் கடுமையாக எதிர்த்தார். அதற்காகவே கொலையுண்டார். அவர் பிரிந்த சபையைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு விண்ணகத்தைப் பரிசளிக்கக்கூடாது என்று கத்தோலிக்கர்கள் வாதிட இயலாது. காந்தியின் அகிம்சைக் கோட்பாடு இயேசுவின் மலைப்பொழிவிலிருந்து பிறக்கின்றது என்று அவரே ஒத்துக்கொள்கின்றார். அவர் இயேசுவைப் பற்றி போதிக்கக்கூடாது என்று எவரும் வாதிட இயலாது. கடவுளின் ஆவி தாம் விரும்பிய திசையில் வீசுகின்றது. அதன் செயல்பாட்டிற்குச் சட்டங்கள் இயற்ற இயலாது. ஆவியினால் பிறப்பெடுக்கும் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே (யோவா 3:8). உண்மையான ஆவியினால் நிகழும் அனைத்தும் கடவுள் வழிபாடாகும் (யோவா 4:19-24). கடவுளரசு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்புடையது.

இறுதியாக

கடவுளைக் கடவுளாகச் செயல்பட அனுமதிப்போம். வழிபாட்டுச் சடங்குகளை நடத்தும் பூசாரிகள் கடவுளைக் கட்டுப்படுத்தலாம் என்ற தவறான கோட்பாட்டை ஒழிப்போம். நாம் செய்யும் செபங்களுக்கு கடவுள் செவிமடுக்கின்றார். ஆனால் அவை அவரைக் கட்டுப்படுத்துகின்றன என்பது தவறான சிந்தனையாகும். கிறிஸ்தவர்களுக்குள் உயர் நோக்கம் கொண்டோர் நிறையருள் பெற்றோர் அல்லது எதுவும் பெறாதவர் என்ற வேறுபாடுகள் இல்லை. கிறிஸ்தவக் குழுவைச் சேராத பலர் கடவுளே கதி என்று வாழும் மக்களாக இருக்கலாம். பிற இனத்தவராகிய கொர்னேலியு திருமுழுக்கு பெறும் முன்பே, திருமுழுக்கின் அச்சாரமாகிய பரிசுத்த ஆவி தரப்பட்டுவிட்டது என்பதை நினைவில் கொள்வோம். நல்லவர்கள் அனைவரையும் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஏற்றுக்கொள்வோம். பலருக்குப் பகிர்ந்து தரவே பணம் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உணராது, ஒருவரின் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படும் செல்வம் மிகவும் ஆபத்தானது என்று இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகின்றது.