மற்றும்
அன்பு உள்ளங்களின் அடிச்சுவடுகள்
அருள் ரொசாரியோ என்ற இளைஞர் குருவாகும் எண்ணத்துடன் திருப்பத்தூரிலிருந்து சேலம் மறைமாவட்டத்திற்காக பணிபுரிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு சேலம் இளங்குருமடத்தில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து பெங்களூரூ புனித பேதுரு பாப்பிறை குருமடத்தில் மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பு பயின்றார். இவர், மறைந்த கர்தினால் லூர்துசாமி, அருட்தந்தை செபாஸ்டியான், அருள்தந்தை சவரிமுத்து ஆகிய சிறப்புமிக்கவர்களோடு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இளமை துடிப்போடும், ஆன்மீக தேடலோடும், தாகத்தோடும் பட்டி தொட்டிகளுக்கு நேரில் சென்று மக்கள் மனநிலைகளை புரிந்து கொண்டு செயல்பட்டார்.
இந்த உணர்வுமிக்க அனுபவங்களே எதிர்காலத்தில் இவரை சேலத்து தொன்போஸ்கோ என்றும், தென்னகத்தின் தொன்போஸ்கோ என்றும் அழைக்கும் அளவுக்கு மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று மாணவர்களைக் கல்வியிலும், ஒழுக்கத்திலும், விளையாட்டிலும் புனித தொன்போஸ்கோ மற்றும் புனித தோமினிக் சாவியோ போல வளர்த்தெடுத்தார்.
பள்ளி விடுமுறை நாட்களில் இவர் விரும்பிச் செல்லும் இடங்கள் கிராமங்கள். சிலுவைகிரி பங்கிற்கு அடிக்கடி சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்வார். இவைகளில் குறிப்பாக தாசரபள்ளி, வாழப்பாடி, மேட்டூர், திருச்செங்கோடு, நாமக்கல் பகுதிகள், விசுவாசம்பட்டி, கோவிலூர் மற்றும் மறைமாவட்டத்தின் பல குக்கிராமங்கள் அடங்கும். கிராமங்களில் இவர் பெயர் செபமாலை சாமியார். இவர் சென்றால் சிறுவர்கள் இவரை சூழ்ந்துக் கொண்டு இவர் அங்கியின் இரண்டு பாக்கெட்டுகளிலும் கையைவிட்டு சாக்லேட், ஆரஞ்சு மிட்டாய்களை உரிமையோடு எடுத்துக்கொண்டு தேனீக்களைப்போல் சூழ்ந்திருப்பர்.
தாய் கோழியைச் சுற்றி குஞ்சுகள் இருப்பது போல பள்ளியில் எப்போதும் சிறுவர் கூட்டம் சூழ்ந்திருக்கும். எல்லா மாணவர்களையும் அருகிலே வைத்து அணைத்துச் செல்வார். அதே சமயம் கண்டித்தும் திருத்துவார். செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டால் முன்பைவிட அதிகமாக அன்பு காட்டுவார், பல பொறுப்புகளைத் தருவார். ஒவ்வொருவரின் பெயர், பெற்றோரின் பெயர் மற்றும் சூழ்நிலைகளைக் கேட்டறிந்து மனதில் பதித்து எத்தனை மாதங்கள், ஆண்டுகள் கழித்து சந்தித்தாலும், பார்த்தாலும் பெயரிட்டு அழைத்து சூழ்நிலைகளைக் கனிவுடன் கேட்டறிவது இவரின் தனிச்சிறப்பாகும்.
மாணவர்களின் திறமைகள், பக்தி, கல்வி, ஆர்வம் இதை மையப்படுத்தி குருக்களாக, வேதியர்களாக, விளையாட்டு வீரர்களாக, ஆசிரியர்களாக ஊக்குவித்து உற்சாகமூட்டி பேண்டு செட், தொழிற்கல்வி,காவல்துறை மற்றும் அரசு பணிகளில் சேருவதற்கு ஆர்வம் அளித்து தொடர்ந்து கண்காணிப்பார். எல்லாதுறைகளிலும் இவரின் முன்னாள் மாணவர்கள் பணியாற்றுகிறார்கள். குறிப்பாக சினிமா துறை, வங்கித்துறை, இராணுவம், அரசியல் மற்றும் சமூகப் பணியிலும் நிறைய பேர் பணியாற்றி வருகிறார்கள்.
சமூகம் மற்றும் கல்வித் துறையில் சிறந்த எடுத்துக்காட்டான ஆசிரியராக திகழ்ந்தார். தம் தலைமை ஆசிரியர் பணியை தன் உயிரினும் மேலாக மதித்து செய்து வந்ததால் தமிழக அரசு, இவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்தது. அன்பு, அமைதி, அடக்கம், ஒழுக்கம், முன்மாதிரிகை இவைகள் நிறைந்த நிறைகுடமாக திகழ்ந்தார். இறைவனின் கண்ணோட்டத்தில் நல்ல நிலமாகவும், கனிதரும் மரமாகவும், குன்றின்மேல் இட்ட விளக்காகவும், நல்வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
தந்தையின் தொடர் பணி:
சிறியோர்க்கு செய்வது எனக்கே செய்வது ஆகும் என்ற இயேசுவின் பொன்மொழிக்கு ஏற்ப அவரின் அடிச்சுவடுகளில் வாழ்ந்து காட்டிய தந்தையின் எண்ணங்களை, ஏக்கங்களை தொடர்பணியாக ஏற்று தந்தையிடம் பயின்ற மாணவர்கள் மற்றும் பணிசெய்தவர்களில் சிலர் தந்தையின் அன்பு உள்ளங்கள் என்ற அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு கடந்த 36 ஆண்டுகளாக கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு தங்களால் முடிந்த கல்வி உதவியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றோம்.. எங்களின் ஏக்கம், விருப்பம், ஆசை எல்லாம் இரக்கம் நிறைந்த இறைவன் நம் தந்தையை புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே ஆகும். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி கடந்த 37 ஆண்டுகளாக தந்தையின் நினைவுநாளை ஏழை எளிய மாணவர்களின் கல்வி உதவி நாள் என்று தந்தையின் அன்பு உள்ளங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
இப்படிக்கு
அருள்தந்தை அருள் ரொசாரியோ அடிகளாரின் அன்பு உள்ளங்கள், சேலம்