(ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த உலக அறிக்கையின் பின்னணியில்)
திருத்தந்தை பிரான்சிஸ் “இறைவா உமக்கே புகழ்” திருமடலின் 8 ஆம் பத்தியில் நாம் படித்ததுபோல் சுற்றுச்சூழலுக்கு எதிராக நாம் செய்து வரும் “மனித செயல்பாடுகள்” ஒவ்வொன்றும் “பாவமாக” கருதப்படவேண்டும், அல்லது “பார்க்கப்பட” வேண்டும்.
மலைகளை அழிப்பது - பாவம்
மணலை சுரண்டுவது - பாவம்
நீரை வியாபாரம் செய்வது - பாவம்
காற்றில் புகையை கக்குவது - பாவம்
உயிரினங்களை கொடுமைப்படுத்துவது - பாவம்
ஒலி மாசு ஏற்படுத்துவது - பாவம்
உன் மூளையில் உதவாக்கரைகளை நிரப்புவது - பாவம்
நாம் “பஞ்சபூதங்களை” பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
13 ஆம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ்கு அசிசியாரால் எழுதப்பட்ட “படைப்புகளின் கீதம்” (canticle of the creatures) இப்பிரபஞ்சத்திற்கு மூலக்காரணங்கள் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவை அனைத்துமே இறைவன் நமக்குக் கொடுத்த “ஆசீர்வாதங்கள்” (Blessings) கொடைகள், உறவுகள் என்று முன் மொழிகிறார். பஞ்சபூதங்கள் இல்லையென்றால் உயிர் உருவாக முடியாது. மனிதனும் தோன்றியிருக்க முடியாது. உயிரற்றவைகள் என்று நாம் அழைக்கும் உட்கூறுகள் அல்லது பஞ்சபூதங்கள் வழியாகத்தான் “உயிர்” உருவாக்கியிருக்கிறது” என்பதை நான் உங்கள் பார்வைக்கு முன் தருகிறேன்.
“பஞ்சபூதங்களில்” கடவுள் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என ஏழாம் நூற்றாண்டில் சிவ பக்தர் மாணிக்கவாசகர் பெருமான் திருவாசகத்தில் எழுதியிருக்கிறார்.
“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி
ஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய்”
ஆகவே, உயிரினங்களையே நாம் அனைவருமே ஒரே ஒரு “பிரபஞ்சக் குடும்பத்தைச் (cosmic family) சார்ந்தவர்கள் என பார்த்து அறிந்து கொள்கிறோம். இப்பிரபஞ்சக் குடும்பம் வாழும் இடமாகிய இப்பூமியே “நம் அனைவரின் பொதுவான வீடு” என திருத்தந்தை பிரான்சிஸ் அழைக்கிறார். இக்குடும்பத்தில்" இறைவன் தந்தையாகவும், தாயாகவும் இருந்து இவ்வீட்டையும், உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளையும் தம் அன்பினாலும், இரக்கத்தினாலும் வழிநடத்திச் செல்கிறார் என்பதை நாம் பார்க்கும் போது, இப்புவியில் உள்ள அனைத்துமே இறைவனுடைய அன்புப் பார்வையில் நல்லொரு படைப்பாகவே இருந்து வருகிறது. நாம் அனைவரும் அனாதைகள் அல்ல; கடவுள் நம்மோடு (இம்மானுவேல்) இருக்கிறார்! போன்றவைகளை பார்த்து பூரித்து போகிறோம்.
எனவே, இறைவன் - மனிதன் - படைப்புகள் இம்மூன்றுமே ஏதோ ஒரு உறவுக்கூட்டாக பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கநூல் 1,2 அதிகாரங்கள் இதற்கு உதாரணமாக நாம் பார்க்கலாம். “ஏதேன் தோட்டம்” என்று அழைக்கப்படும் இடத்தை நாம் “இப்பூமியாக” பார்க்க வேண்டும். கடவுள் - மனிதன் - படைப்புகள் இவை மூன்றுமே எப்பொழுதுமே ஒரு உறவு நிலையில் இருந்ததாக விவிலியம் நமக்கு சித்தரிக்கின்றது. ஆகவே, மனிதன் 3 உறவுநிலைகள் வழியாக உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1. கடவுளோடு உறவு ( ஒரு கடவுள், 3 ஆட்கள்)
2. மனிதனோடு உறவு (800 கோடி மக்கள்)
3. படைப்புகளோடு உறவு (உயிரற்றவை-உயிருள்ளவை)
இக்கட்டுரையின் தொடக்கத்தில் இப்புவியின் பாதுகாவலராகிய “புனித பிரான்சிஸ்கு அசிசியார்” எழுதிய படைப்புகளின் கீதத்தில் படைப்போடு நாம் கொண்டுள்ள உறவுகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
* சகோதரன் சூரியன் (Brother Sun)
* சகோதரி நிலவு (Sister Moon)
* சகோதர காற்று (Brother Wind)
* சகோதரி தண்ணீர் (Sister Water)
* சகோதர நெருப்பு (Brother Fire)
* சகோதரி மண் (பூமி) (Sister Earth)
* சகோதரி மரணம் (Sister Death)
படைப்புகளின் இகத்தில் புனித பிரான்சிஸ் இவ்வாறு எழுதுகிறார்: “சகோதரியாகவும், தாயாகவும் இருந்து எல்லா உயிரினங்களுக்கும் உயிரைக் கொடுத்து, உணவைக் கொடுத்து, கனிகளைக் கொடுத்து, மலர்களைக் கொடுத்து, மூலிகைகளைக் கொடுத்து இறைவனாகிய தந்தை போஷிக்கின்றார். ஆண்டவராகிய கடவுளே நீர் போற்றப்படுவீராக!
கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய “தொல்காப்பியம்” எனும் இலக்கண நூல் தமிழர்களுடைய கலாச்சாரச் செல்வம் எனலாம். தொல்காப்பியரும், புனித பிரான்சிஸ் அசிசியாரின் “பிரபஞ்சக் குடும்பம்” எனும் கருத்தை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருப்பது ஒரு சுவையான தகவல். இப்புவியில் உள்ள அனைத்துமே பஞ்சபூதங்களின் கலவையே என்கிறார் தொல்காப்பியர்.
“நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல் நெறி வழாமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.”
- (தொல்காப்பியம் மரபியல் - 635 பாடல் -91)
ஐந்து சூழல் அமைப்புகளை (Eco-systems) அதே தொல்காப்பியர், "குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை" என வகுத்து கொடுத்திருக்கிறார். தொல்காப்பியம் நமக்கு கற்றுக்கொடுப்பது என்னவென்றால் இந்த ஐந்து திணைகளும் கோடிக்கணக்கான செல்வங்களைத் (Biological Wealth) தன்னகத்தே கொண்டுள்ளன என்பதை நாம் பார்க்க தவறக் கூடாது.
இயற்கை வளங்கள் (Natural resources) எனப்படும் இருவகையான செல்வங்களை நான் உங்களுக்கு இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.
1. புதுப்பிக்க முடியாத செல்வங்கள் (Natural resources)
2. புதுப்பிக்கக் கூடிய செல்வங்கள் ( Renewable resources)
புதுப்பிக்க முடியாத வளங்கள் அல்லது செல்வங்கள் என்பவை: பஞ்சபூதங்கள் மலைகள், கடல்கள், நிலக்கரி, தங்கம், இரும்பு போன்றவை.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் அல்லது செல்வங்கள் என்பவை: மரங்கள், உயிரினங்களாகிய ஆடுகள், கோழிகள், மாடுகள், பன்றிகள், மீன்கள் போன்றவை.
புதுப்பிக்க முடியாத வளங்கள் என்பவை ஒருதடவை அவற்றை அழித்துவிட்டால் மீண்டும் அவற்றை கொண்டுவர முடியாது. உதாரணமாக மலையை நாம் அழித்துவிட்டால் மீண்டும் அதை கொண்டுவர முடியாது. அதைப்போல தங்கம், இரும்பு, புதைப்பொருள், எண்ணெய்கள் (Fossil Fuels) போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் ஒருதடவை உபயோகித்து முடித்து விட்டால், அவற்றை மீண்டும் கொண்டுவர முடியாது.
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்பவை பயன்பாட்டிற்கு பின் நாம் அவற்றை உருவாக்க முடியும். உதாரணமாக மரம், ஒரு மரம் வெட்டினால் பத்து மரங்களை நாம் உருவாக்க முடியும். அதைப்போல தண்ணீர் முழு பயன்பாட்டிற்கு பின்னும் மழை மூலம் அந்த தண்ணீரை மீண்டும் அடைய முடியும்.
மேற்சொல்லப்பட்ட செல்வங்கள் எல்லாம் இயற்கைச் செல்வங்கள் (Natural Wealth) என்று அழைக்கப்படுகின்றது. மொத்தம் 3 செல்வங்கள் மனிதன் அறிந்து வைத்திருக்கிறான். அவை பின் வருமாறு:
1. பொருளாதாரச் செல்வம்( Economic Wealth)
2. கலாச்சாரச் செல்வம் (Cultural Wealth)
3. இயற்கைச் செல்வங்கள் (Biological wealth)
பொருளாதாரச் செல்வம் என்பவை: தங்கம், புதைபடிவ எண்ணெய்கள், பணம், தொகுநாட்டு விளைபொருள் (GDP Gross Domestic Product) போன்றவை. இவற்றை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.
கலாச்சாரச் செல்வம் என்பவை: கோயில்கள், வீடுகள், கோட்டைகள், அரண்மனைகள், விஞ்ஞான தொழில் நுட்பங்கள் போன்றவை. இவற்றையும் நாம் நன்கு அறிந்துள்ளோம்.
இயற்கைச் செல்வம் என்பவை: மண், நீர், மலைகள், பூக்கள், விலங்குகள், தாவரங்கள் போன்றவை.
இவைகளின் சிறப்பை மனிதன் உணராமலும், பார்க்காமலும் இருப்பதுதான் சுற்று சூழல் சீர்கேட்டின் காரணம் என IPCC சிகப்பு எச்சரிக்கை தனது பணிக்குழு (WG1) வெளியிட்டுள்ள தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கான ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையில் (6th Assessment Report) குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
- மனிதன் பொருளாதாரச் செல்வம், கலாச்சாரச் செல்வம் போன்றவைகளின் மேல் கொண்டுள்ள மோகத்தின் காரணத்தால் "இயற்கைச் செல்வத்தைக்" கட்டுக்கடங்காமல் அழித்து வருகிறான்.
-புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களை தேவைக்கு அதிகமாக சுரண்டியதால் வருங்காலத் தலைமுறையினருக்கு “சுடுகாட்டை” இத்தலைமுறையினர் உருவாக்கி உள்ளனர். இதனால் "நீடித்த, நிரந்தர வளர்ச்சியை" (Sustainable Development) அடைவது மிகவும் கடினம்.
- 80 சதவிகித இயற்கை வளங்கள் அழிந்து போயின, 20 சதவிகிதத்தில் எப்படி எதிர்கால தலைமுறையினர் வாழ முடியும்?
(தொடரும்)