கடந்த செப்டம்பர் 26 ஆம் நாள் தூத்துக்குடி மறைமாவட்டம் முன்னாள் முதன்மை குருவும், மலரும் மணஉறவு (Marriage Encounter) இயக்க ஒருங்கிணைப்பாளரும், “நம் வாழ்வு” நற்செய்தி தோட்டத்தில் மனித நேயம் மலரச் செய்பவருமான பேரருள்தந்தை ச.தே. செல்வராசு அடிகளாரின் குருத்துவப் பொன்விழா கொண்டாட்டம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் பேரருள்தந்தை ரூபர்ட் அருள் வளன் தலைமையில், மறைமாவட்ட முதன்மை குரு பேரருள் தந்தை பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், முன்னாள் தலைமை தம்பதியர் பிரிட்டோ - வினிப் ரெட்டாள் அவர்களின் திருமண பொன் விழா, வேதியர் யேசுதாஸ் அவர்களின் மறை பணி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் உடன் அரங்கேற, முப்பெரும் விழாவாக முத்திரை பதித்தது.
விழா நாயகர் ச.தே. செல்வராசு தனது ஏற்புரையில் வேதியர்கள் எண்ணிக்கை குறைவு பட்டு, திருஅவையின் வளர்ச்சிப் பணிகள் தளர்ச்சி பெற்றுள்ளன என்ற ஆதங்கத்தை உருக்கமாக வெளிப்படுத்தினார். எனவே, திண்டிவனம் வேதியர் பயிற்சிப் பள்ளி மீண்டும் திறக்க, தமிழக ஆயர்கள் ஆவன செய்ய வேண்டுகோள்விடுத்தார்.
முன்னதாக முப்பெரும் விழா நாயகர்களுக்கு பொன்னாடைகள், பரிசுகள் பகரப்பட்டு, இயக்க முன்னோடிகள் தங்கையா ப்ராங்களின், வேதியர் அருள்ராஜ், ஆலிவர் டைட்டஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, மலரும் நினைவுகளை மறு ஒலிபரப்பு செய்தனர். குடும்ப நலப்பணிக்குழு இயக்குநர் அருட்பணி ஜெயகர் அடிகளாரின் நட்சத்திர சிறப்புரை பொற்சித்திரமாய் ஜொலித்தது.
மனிதநேய சேவையாக, நலிந்தோர் நலம்பெற, கல்வி, மருத்துவ உதவிகள் பண முடிப்புகளாக, நேரிடையாக வழங்கப்பட்டன.
இறுதியில் பாச விருந்து பரிமாறிய, இயக்க தலைமை தம்பதியர் பேட்ரிக் முறாயிஸ் - ரெஜினா அவர்கள் விழா கொண்டாட்டங்களை பொறுப்பாக நிறை வேற்றி, சிறப்புறச் செய்தார்கள்.
T.M.A. ரெடம்டர், மரியானுஸ் மீடியா மினிஸ்டிரி, தூத்துக்குடி