Namvazhvu
குடந்தை ஞானி ஜனநாயகமும் பேனாநாயகமும்
Thursday, 21 Oct 2021 05:10 am
Namvazhvu

Namvazhvu

பத்திரிகையாளர்கள்! எழுத்தாளர்கள்! இவர்கள் ஜனநாயகத்தின் ஆணிவேர்கள். எந்த ஒரு நாட்டில் ஊடகச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும்  தழைத்திருக்கிறதோ, அந்த நாடு ஜனநாயகத்தன்மையில் பூத்திருக்கும். பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்களுடைய சுதந்திரம் பறிக்கப்படும்போது, ஜனநாயகமும் நீர்த்துப்போகிறது. ஆகையால் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஜனநாயகம் பூத்திருப்பதைவிட, பத்திரிகையாளனின் பேனா மையில் தன்னைத்தானே பட்டைத் தீட்டிக்கொள்கிறது. பத்திரிகை சுதந்திரம் பறிபோகிறபோதெல்லாம் அரசு இயந்திரம் சர்வாதிகாரத்தை நோக்கியே நகர்கிறது.  ஜனநாயகம் நெகிழ்வுத்தன்மையோடு இயங்கவும் மக்களை இயக்கவும் பத்திரிகை தன்னால் முடிந்த அனைத்தையும் தியாக உள்ளத்தோடு செய்கிறது;  இன்று ஒருவேளை தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகம், கானல் நீராக ஆட்சி செய்யலாம். ஆனாலும் அச்சு ஊடகமே அனைத்தின் ஆணிவேராக விளங்கும். ஆகையால்தான், தமிழகத் திருஅவைக்கென்று, தமிழ்ப்பேசும் கிறிஸ்தவர்களுக்கென்று உள்ள ஒரே வார பத்திரிகையான "நம் வாழ்வை" அரவணைத்து, பாதுகாக்க வேண்டியது அனைவரின் தலையாயக் கடமையென்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன். ஆயர்களும் குருக்களும் துறவறத்தாரும் பொதுநிலையினரும் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்கும்போது மனது வருத்தமடைகிறது.

அக்டோபர் 08 ஆம் தேதி  பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா (Maria Ressa) மற்றும் ரஷ்ய நாட்டின்  டிமித்திரி முரட்டோவ் (Dmitry Muratov) ஆகிய இரு பத்திரிகையாளர்கள் நோபல் அமைதி விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பத்திரிகையாளர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது, எழுத்தின் வலிமையை மீண்டும் நிரூபிக்கிறது. கார்ன் வான் ஓசீட்ஸ் என்ற பத்திரிகையாளர் 1935 ஆம் ஆண்டு, ஜெர்மனியின் நாஜிப்படை மீண்டும் தயார் ஆவதை ஆவணப்படுத்தி உலகை எச்சரித்ததற்காக நோபல் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு, 2021 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா என்ற பத்திரிகையாளரும் ரஷ்ய பத்திரிகையாளர் டிமித்திரி முரட்டோவும் தத்தம் நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளையும் நெருக்குதல்களையும் மீறி, பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக போராடியதைப் பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊடக வெளிப்பாடுகள்தான் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு அடிப்படை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மரியா ரெஸ்ஸா  சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறி, கல்வி பயின்று, சி.என்.என், வால் ஸ்ட்ரீட் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றி, 2012 ஆம் ஆண்டு ராப்லர் என்ற செய்தி வலைத்தளத்தை உருவாக்கி, பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே-வின் அடக்குமுறைக்கும் அராஜகத்திற்கும் எதிராக குரலெழுப்பினார். மரியா ரெஸ்ஸாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டபோதும் மனம் உடைந்து போகவில்லை. கொலை மிரட்டல் விடுத்தபோதும் பயந்து பின்வாங்கவில்லை. பிலிப்பைன்சில் போதை மருந்து கடத்துபவர்களையும் விற்பவர்களையும் ஒடுக்குகிறேன் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான நபர்களை அவரும் அவர்தம் படைகளும் படுகொலை செய்ததை தம் ராப்லர் (Rappler) செய்தி நிறுவனத்தின் பெயரில் ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். இதனால் இவர் பலமுறை தாக்கப்பட்டார்;  இருமுறை சிறையில் அடைக்கப்பட்டார்;  கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பத்துமுறை கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.  கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். அரசு, இவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்தது. தண்டிக்கப்பட்டார்; தற்சமயம் பிணையில் வெளியே இருக்கிறார்.  அதிபர் ரோட்ரிகோவின் அரசு, சமூக ஊடகங்கள் மூலம் போலிச் செய்திகளைப் பரப்புவதைக் குறித்தும் அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் மரியா தோலுரித்துக் காட்டி மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.   இவர் தற்போது எழுதியிருக்கிற நூல், ‘ஒரு சர்வாதிகாரிக்கு எதிராக எதிர்த்து நிற்பது எவ்வாறு?’ என்ற நூல்  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது.  நோபல் பரிசு பெறும் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் பிலிப்பைன்ஸ் நாடு ஏழாவது இடத்தில் உள்ளது.

பிலிப்பைன்ஸைப் போல ரஷ்யாவும் பத்திரிகைகளுக்கு இரும்புத்திரை போட்டுள்ளது என்பது நாம் அறிந்தது. அந்த  ரஷ்யாவின் டிமித்ரி முரட்டோவ் என்ற பத்திரிகையாளர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு கொம்சோமோல்ஸ்கயா பிராவ்டா என்ற கம்யூனிச இளைஞர் இதழில் தம் பணியைத் தொடங்கினார்; பின்னர் அதிலிருந்து வெளியேறி, கொர்பச்சேவ் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடகத்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டபோது, 1993 ஆம் ஆண்டு டிமித்ரி முரட்டோவ் தம் செய்தியாளர் நண்பர்களுடன் இணைந்து நோவயா கெஸட்டா (Novaya Gazeta) என்ற நாளிதழைத் தொடங்கினார். அவர்கள் துவக்கிய இந்த புதிய இதழ், கணினி வாங்கவும், தன் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும் என்று, கோர்பஷேவ் அவர்களும், மற்றுமொரு ரஷ்ய நோபல் விருது பெற்றவரும், தங்களின் அமைதி விருதுகளிலிருந்து கிடைத்த தொகையை வழங்கி உதவினர்.

 ரஷ்ய அரசின் பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளை துணிந்து வெளியிட்டார்; அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சியில் ஊடகச் சுதந்திரத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு தம் பத்திரிகை வழியாக முயற்சித்தார். தம் பத்திரிகையில் பணி புரிந்த ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டபோதும், தமக்கு நேரடியாக அரசிடமிருந்து அச்சுறுத்தல் வந்தபோதும் எதையும் பயப்படாமல் ஊடகக் கடமையை நிறைவேற்றினார். இன்று நேவயா கெஸட்டா- துணிச்சலோடு அரசு பயங்கரவாதத்தை தம் எழுத்துகள் மூலம் எதிர்த்துப் போராடி வருகிறது. புதினின் ஊழல்களையும் ஆட்சி  நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் சுட்டிக் காட்டுகிறது.

முன்னாள் அதிபர் கோர்பஷேவ் அவர்கள், முரட்டோவ் அவர்களுக்கு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த மகிழ்ச்சியை வெளியிட்டதோடு, இந்த அறிவிப்பு, நவீன உலகில், பத்திரிகையின் முக்கியத்துவத்தை அதிகமாக உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

உடலுக்குள் எப்படி இரத்தம் என்னும் நீர்மம் தொடர்ந்து இயங்கி, அனைத்து உறுப்புகளையும் தொடர்ந்து இயங்க உதவுவது போல, ஜனநாயகத்திற்குள் இந்த பத்திரிகை - ஊடகம் தொடர்ந்து இயங்கி, அதன் தூண்களான சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகியவற்றை இயக்குவிக்கிறது.  மக்களாட்சியின் ஆணிவேரே ஊடகமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதிலும், ஆட்சியாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதைக் கண்காணிப்பதிலும் ஊடகங்கள் அளிக்கும் அளப்பரிய பங்கை, இந்த நோபல் பரிசு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் இந்தக் காலக்கட்டத்தில், ஊடகங்கள் சர்வாதிகார முறையில் விலை பேசப்பட்டு முடக்கப்படும் நிலையில், மன் கி பாத் முறையில் ஒரு வழிப்பாதையாக, பத்திரிகையாளர் சந்திப்புக்கு வழியின்றி, ஏழு ஆண்டுகளாக கோலோச்சும் பிரதமர் உள்ள இந்தியாவில், வலது சாரி, இடது சாரி என்று ஊடகங்களுக்கே பூநூல் போடும் இந்நாட்டில், பெகாசஸ் ஆப் மூலம் அனைத்தும் அனைவரும் உளவுப் பார்க்கப்படும் சூழலில், ஊடகம் - பத்திரிகை துறை இன்னும் உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்பதற்கான அழைப்பாக இந்த நோபல் பரிசை நாம் பார்க்கலாம். வாழ்க! பத்திரிகையாளர்கள்! வளர்க அவர்கள்தம் தொண்டு! ஜனநாயகம் வாழ்க! பேனாநாயகம் வாழ்க!

கத்திமுனையை விட பேனா முனை வலிமையானது என்பதை இந்த அமைதிக்கான நோபல் பரிசு  மீண்டும் இன்னொருமுறை இந்த 21 ஆம் நூற்றாண்டில் நிரூபித்திருக்கிறது.

ஆம்! நோவயா கெஸட்டாவின் தாரக மந்திரமான ‘தூதுவரைக் கொல்லலாம்; உண்மையைக் கொல்ல முடியாது’. உண்மைதானே!