Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புத் திருப்பலியில் மறையுரை
Thursday, 21 Oct 2021 05:21 am
Namvazhvu

Namvazhvu

இவ்வாண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் முடிய, ஈராண்டுகள், கத்தோலிக்கத் திருஅவையில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புத் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 10 ஞாயிறன்று தலைமையேற்று நிறைவேற்றினார். 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இறுதிக் கூட்டங்கள் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வத்திக்கானில் திட்டமிடப்பட்டிருந்தாலும், இந்த மாமன்றம், தலத்திருஅவைகளின் கூடுதல் பங்கேற்புடன் ஆரம்பமாகியுள்ளது என்பதை உணர்த்தும் வண்ணம், இம்மாமன்றத்தின் துவக்கத் திருப்பலியை, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை நிறைவேற்றினார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் கட்டுப்பாடுகளை மதித்து, குறைந்த அளவு மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இத்திருப்பலியில், பொதுநிலையினர், இருபால் துறவியர், அருள்பணியாளர்கள், ஆயர்கள் மற்றும் கர்தினால்கள் என்று அனைத்து நிலையிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். திருஅவையில் துவங்கியுள்ள இம்மாமன்றம் சந்தித்தல், செவிமடுத்தல், மற்றும் தெளிந்து தேர்தல் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் மையக்கருத்தாகப் பகிர்ந்துகொண்டார்.

சந்தித்தல்

இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டிருந்த நற்செய்தியை மையப்படுத்தி தன் மறையுரையைத் துவக்கியத் திருத்தந்தை, இந்த நற்செய்தியின் ஆரம்பத்தில், "இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது" என்று கூறப்பட்டிருந்த சொற்களைச் சுட்டிக்காட்டி, இயேசு, மக்களைச் சந்திப்பதில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்ததைப்போல், நாமும், இந்த சந்திப்புக்கலையை வளர்த்துக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

சந்திப்புக்கலையை வளர்ப்பதற்கு, இறைவனை நோக்கியும், அயலவரை நோக்கியும் திறந்தமனம் கொண்டிருப்பது, முதல் தேவை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

செவிமடுத்தல்

இறைவனையும், மனிதர்களையும் சந்திப்பதற்கு மிக முக்கியமான தேவை, செவிமடுக்கும் பண்பு என்பதை தன் இரண்டாவது கருத்தாகக் கூறியத் திருத்தந்தை, எவ்வித முற்சார்பு எண்ணங்களும் இன்றி, திறந்த உள்ளத்துடன் செவிமடுப்பது, உண்மையிலேயே, திருஅவைக்கு மிகவும் தேவையான ஒரு பண்பு என்று கூறினார்.

ஒவ்வொரு தலத்திருஅவையிலிருந்தும் கேட்கப்படும் கேள்விகள், உணர்த்தப்படும் கவலைகள், மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு செவிமடுப்பது இந்த மாமன்றத்தின் முக்கிய தயாரிப்பாக இருக்கவேண்டும் என்று திருத்தந்தை, தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

தெளிந்து தேர்தல்

சந்தித்தல் மற்றும் செவிமடுத்தல் என்ற இரு நிலைகளும், தன்னிலேயே முடிவுகள் அல்ல; மாறாக, அவற்றின் வழியே, அனைவரும் இணைந்து, சரியான தெரிவுகளை மேற்கொள்ள தெளிவுகள் உருவாகவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

தன்னைச் சந்திக்க வந்த செல்வந்தரிடம், இயேசு, ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்ளச் சொன்னார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, செல்வந்தரை அழைத்ததுபோல், திருஅவையையும் இறைவன் அழைக்கிறார் என்று கூறினார்.

அடுத்துவரும் ஈராண்டுகள் நடைபெறும் இந்த ஒருங்கிணைந்த பயணத்தில், திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, தூய ஆவியாரின் வழிநடத்துதலை கண்டுணர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள இறையருளை இறைஞ்சுவோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவுசெய்தார்.