Namvazhvu
குடந்தை ஞானி 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல்நிலை தயாரிப்புக்கள்
Friday, 22 Oct 2021 05:02 am
Namvazhvu

Namvazhvu

ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில், 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது. அதற்கு, உலக அளவில் இடம்பெறும் ஈராண்டுகள் தயாரிப்புப் பணிகளின் முதல்நிலை, அனைத்து மறைமாவட்டங்களிலும் துவக்கப்பட்டுள்ளன. அந்த முதல்நிலை அக்டோபர் 18 திங்களன்று, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது. சென்னை சாந்தோம் தலைமைப் பேராலயத்தில், அவ்வுயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் ஆண்டனிசாமி அவர்கள் தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றி இந்த முதல்நிலை தயாரிப்பைத் துவக்கி வைத்தார். இத்திருப்பலியில், மாமன்ற இலக்குப் பாடல் ஒலிப்பேழை ஒன்றும் வெளியிடப்பட்டது. அப்பாடலை எழுதியவர் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை அவர்கள். அதற்கு இசையமைத்தவர் அருள்பணி ஜோ பாலா அவர்கள்.

முதல்நிலை தயாரிப்புப்பணி துவக்கப்பட்ட விதம் குறித்து அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை அவர்கள் விளக்குகிறார். சென்னை உயர்மறைமாவட்டத்தில், பொதுநிலையினர் பணிக்கென பேராயரின் பிரதிநிதியாகப் பணியாற்றும் இவர், சென்னை அடையாறு பங்குத்தந்தையுமாவார்.

முதல் கட்டமாக, 2021ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதியிலிருந்து 2022ம் ஆண்டு ஏப்ரல் வரை மறைமாவட்ட அளவிலும், 2022ம் ஆண்டு செப்டம்பரிலிருந்து, 2023ம் ஆண்டு மார்ச் வரை கண்டங்கள் அளவிலும் இந்த ஈராண்டு தயாரிப்புப் பணிகள் நடைபெறும். உலகளாவியத் திருஅவையின் இறுதிகட்ட பணிகள், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தோடு நிறைவடையும்.