Namvazhvu
குடந்தை ஞானி அக்டோபர் 24, ஐ.நா. நாள்
Tuesday, 26 Oct 2021 12:36 pm
Namvazhvu

Namvazhvu

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நாளை நினைவுகூரும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி சிறப்பிக்கப்பட்டுவரும் அந்நிறுவன நாள், ஒருமைப்பாடு மற்றும், செயல்திட்ட உணர்வை வெளிப்படுத்துகிறது என்று, அந்நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

அக்டோபர் 24 ஞாயிறன்று இடம்பெறும் ஐ.நா. நாள், நியுயார்க் நகரிலுள்ள ஐ.நா. நிறுவனத்தின் தலைமையகத்தில், அக்டோபர் 21 வியாழனன்று சிறப்பிக்கப்பட்டபோது உரையாற்றிய கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும், அதன் கொள்கைகள், கடந்த 76 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

இந்த உலகம் கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரத் துவங்கியுள்ளவேளை, 2021ம் ஆண்டில், நாடுகள் மற்றும், மக்களுக்கு இடையே பன்னாட்டு அளவில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படவேண்டியது முக்கியம் என்பதையும் கூட்டேரஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

கடந்த இருபது மாதங்கள் மனித சமுதாயத்திற்கு மிகவும் துயர்நிறைந்த மற்றும், மக்கள் அதிகமாகத் தனிமைப்படுத்தப்பட காலமாக இருந்தது எனவும் கூறிய கூட்டேரஸ் அவர்கள், கடந்த 76 ஆண்டுகளாக காக்கப்பட்டுவந்த, அனைவருக்கும் அமைதி, மாண்பு மற்றும், வளமை ஆகிய விழுமியங்கள் தொடர்ந்து காக்கப்படவும் அழைப்புவிடுத்தார். (UN)