Namvazhvu
குடந்தை ஞானி COP26 மாநாட்டையொட்டி கத்தோலிக்கர்களின் முயற்சிகள்
Saturday, 30 Oct 2021 04:50 am
Namvazhvu

Namvazhvu

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 ஞாயிறன்று துவங்கும் COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு அமைப்புக்கள், சுற்றுச்சூழல் சீரழிவைக் குறித்தும், பூமிக்கோளத்தின் பராமரிப்பு குறித்தும் தங்கள் கவலைகளை, உலகத் தலைவர்களுக்கு, பல்வேறு வழிகளில் உணர்த்திவருகின்றன.

இந்த உலக உச்சி மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று முதலில் கூறப்பட்டிருந்தாலும், அவரது அண்மைய அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்து, இந்த முடிவு மாற்றப்பட்டு, அவர் தற்போது, இந்த மாநாட்டில், காணொளிச் செய்தி வழியே உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் இந்த உச்சி மாநாடு, கத்தோலிக்கத் திருஅவையைப் பொருத்தவரை, ஒரு முக்கிய சந்திப்பு என்பதால், திருப்பீடத்தின் சார்பில், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் தலைமையில், பல உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

COP26 சந்திப்பு நடைபெறும் அரங்கத்தையொட்டி, நீலப்பகுதி (blue zone) என்ற இடத்தில், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டிருக்கும் அமைப்புக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட, ஐ.நா.அவை செய்துள்ள ஏற்பாட்டில், கத்தோலிக்கத் திருஅவையின் பல்வேறு அமைப்புக்கள் தங்கியிருந்து, தங்கள் எண்ணங்களை உலகத்தலைவர்கள் அறிந்துகொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் கத்தோலிக்க ஆயர்களின் சார்பில், William Nolan மற்றும், John Arnold ஆகிய இரு ஆயர்கள், ஐ.நா. நிறுவனம் உருவாக்கியுள்ள நீலப்பகுதியில் தங்கியிருப்பர் என்று, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கிளாஸ்கோவின் பங்கு ஆலயங்களில், நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாள்களில், "காலநிலைக்காக 24 மணி நேரங்கள்" என்ற தலைப்பில், கருத்தரங்குகளும், இறைவேண்டல் வழிபாடுகளும் நடைபெறும் என்றும், நவம்பர் 7, ஞாயிறன்று, கிளாஸ்கோவில், இயேசு சபையினர் பணியாற்றும் புனித அலோய்சியஸ் பங்கு ஆலயத்தில், ஸ்காட்லாந்து ஆயர் பேரவையால் ஏற்பாடு செய்யபப்ட்டுள்ள திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5,6,7 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும், இந்நிகழ்வுகள், இணையம் வழியே உலகெங்கும் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ICN)