Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
Thursday, 04 Nov 2021 13:55 pm
Namvazhvu

Namvazhvu

இந்தியக் குடியரசின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 30 சனிக்கிழமை காலையில், வத்திக்கானின் ட்டுரோனிட்டோ) அறையில் தனியே சந்தித்துப் பேசினார்.
முதல் முறையாகத் தன்னைச் சந்திக்க வந்திருந்த நரேந்திர மோடி அவர்களை, சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 8.25 மணிக்கு, ஏறத்தாழ 55 நிமிடங்கள் அவரோடு திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.
காலை 9.20 மணிக்கு முடிவுற்ற இவ்வுரையாடல் குறித்து அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இச்சந்திப்புக்குப்பின் மோடி அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார் என்று கூறியது.
இச்சந்திப்புகளில், இந்தியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு திருப்தியாக உள்ளது என்று கூறப்பட்டதாக அறிவித்த திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருத்தந்தையும், இந்தியப் பிரதமரும் பரிமாறிக்கொண்ட பரிசுப்பொருள்கள் குறித்த விவரங்களையும் அறிவித்துள்ளது.

திருத்தந்தை பரிசாக வழங்கியவை
"பாலைநிலம் ஒரு தோட்டமாக மாறும்" என்று பொறிக்கப்பட்ட ஒரு வெண்கல ஓடு,
திருத்தந்தை வெளியிட்டுள்ள ஏடுகள்,
2021ம் ஆண்டின் அமைதி நாள் செய்தி, அனைவரும் உடன்பிறந்தோர் பற்றிய ஓர் ஏடு ஆகியவற்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.


இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் பரிசாக வழங்கியவை
இந்தியப் பிரதமரும் வெள்ளியிலான ஒரு மெழுகுதிரி ஸ்டான்ட் ஒன்றையும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக ஆற்றும் பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு நூலையும் பரிசாக வழங்கி மகிழ்ந்தார்.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக பிரமதர் பதவியிலிருக்கும் நரேந்திர மோடி அவர்கள், முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளார். திருத்தந்தை, இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு தனது ஆவலை வெளிப்படுத்தியபோதெல்லாம், மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் கொடுக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 1964ம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களும், 1986, 1999 ஆகிய இரு ஆண்டுகளில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை ஆகும்.