Namvazhvu
(1 அர 17:10-16, எபி 9:24-28, மாற் 12:41-44) பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு (1 அர 17:10-16, எபி 9:24-28, மாற் 12:41-44)
Friday, 05 Nov 2021 06:54 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை

வழக்கமாக விதவைகள் அல்லது கைம்பெண்கள் என்றாலே இவ்வுலகம் கேளியும் கிண்டலுமாய் அபசகுணம் கொண்டவர்களாக கருதுவது உண்டு. ஆண்டவர் இயேசு இன்று இத்தகைய ஏழைகைம் பெண்ணை புகழ்ந்து பேசுகிறார். கைம்பெண்கள் என்றாலே அவர்கள் பிறரின் உதவியை பெறுபவர்கள் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த அக்காலத்திலேயே, ஆண்டவர் இயேசு, கைம்பெண்கள், பிறரின் உதவியை எதிர்பார்த்து இருப்பவர்கள் அல்ல, மாறாக அவர்கள் ஆண்டவருக்கே கொடுப்பவர்கள் என்ற சிந்தனையை தருகிறார். அன்றைய யூத சமுதாயம் கணவன், மகன் என்று ஆண்துணை இல்லாத ஏழைக் கைம்பெண்களை ஏமாற்றி அவர்களின் சொத்துக்களை வஞ்சித்து பிடுங்கி, அவர்களை, பிச்சையெடுத்து பிழைப்பு நடத்த ஆளாக்கியது. இத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்ட ஏழைக்கைம் பெண்ணின் காணிக்கையைப் பற்றித்தான் ஆண்டவர் இயேசு உள்ளம் நெகிழ்ந்து பேசுகிறார். இந்த சமுதாயம் தான் வாழ்வதற்கான வாழ்வாதாரங்களை பிடுங்கி கொண்ட போதும் தன்னிடம் இருப்பவற்றை மனமுவந்து கடவுளுக்கு தருகிறார் இந்த ஏழைக்கைம் பெண். நாமும் இத்தகைய மனநிலையோட வாழ வேண்டும் என்று ஆண்டவர் இயேசு விரும்புகிறார். நம்மிடம் வாழ்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதற்காக ஆண்டவரை பழித்துரைக்காமல், இருப்பவற்றையும் ஆண்டவருக்கு தந்து, அதற்காக அவரை புகழ்கின்ற போது, நம் வாழ்வின் இறுதிவரை ஆண்டவர் நம்மை பராமரித்து காப்பார் என்ற எண்ணத்தோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

உனக்கு உணவு அளிக்குமாறு கைம்பெண் ஒருவருக்கு கட்டளையிட்டிருக்கிறேன் நீ சாரிபாத்துக்கு செல் என்ற இறைகட்டளைக்கு அடிபணிந்து இறைவாக்கினர் எலியா செல்கிறார். அக்கைம் பெண்ணும் தன்னிடமிருக்கும் சிறிதளவு மாவிலிருந்து உணவு தயாரித்து முதலில் இறைவாக்கினருக்கு கொடுக்க, இறைவன் பஞ்சக்காலம் முழுவதும் அக்கைம் பெண்ணிற்கும், அவரதுமகனுக்கும் உணவளித்தார் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறைமகன் இயேசு உலகின் பாவங்களை போக்கும் பொருட்டு ஒரேஒரு முறைஉலகிற்கு வந்து ஒரேஒரு முறை தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார். அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார். உலகின் பாவங்களுக்கு பலி செலுத்துவதற்காக அல்ல, மாறாக தங்களின் மீட்புக்காக தன்னை சந்திக்க இவ்வுலகில் காத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவே அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் வானகத்தந்தையே, உம் திருஅவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அதற்காக உம்மிடம் பரிந்து பேசுபவர்களாகவும், உம் திருமகனின் இரண்டாம் வருகையின் போது அவரை எதிர்கொள்ளும் தகுதி உள்ள மந்தைகளாக உம் மக்களை மாற்றிடும் ஆற்றல் பெற்றவர்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் பரமதந்தையே நாட்டை ஆளும் தலைவர்கள், தேவையற்ற வரிகள் மற்றும் கடுமையான விலைவாசி ஏற்றத்தால் மக்களை வாட்டி வதைக்காமல், மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, அவற்றை வழங்குபவர்களாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துபவர்களாகவும் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் விண்ணகத்தந்தையே, இளம் வயதில் தங்கள் துணையை இழந்து வாடும் ஆண் மற்றும் பெண் விதவைகளை ஆசீர்வதியும். ஈடு செய்யமுடியாத இழப்பாக, துன்பமாக இவர்கள் நினைப்பதை நீர் உமது முடிவில்லா பிரசன்னத்தால், உடனிருப்பால் முடிவில்லா இன்பமாக இவர்களுக்கு மாற்றியளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் பரம்பொருளே உமக்கும் எம் அயலாருக்கும் தேவைக்கு அதிகமாக இருப்பதிலிருந்து கொடாமல் எங்கள் தேவைக்காக இருப்பவற்றையே கொடுப்பவர்களாகவும், எப்போதும் பிறர் நலனில்அக்கறை கொண்டு அதற்காகவே உழைத்திடும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் மாறிட வேண்டுமென்று இறைவாஉம்மை மன்றாடுகின்றோம்.