Namvazhvu
Pollachi Issue- Condemnation from TNBC பெண்மையின் மாண்பு காப்போம்
Friday, 15 Mar 2019 15:10 pm
Namvazhvu

Namvazhvu

பெண்மையின் மாண்பு காப்போம்

தமிழகத்தின் பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய நாடு பெண்மையைப் போற்று வதாகவும், பெண்டிரை இறைநிலையில் வைத்து கொண்டாடுகிறது என்று சொல்வதெல்லாம் வெறும் பொய்யுரையோ! என்று கருதுமளவிற்கு பொள்ளாச்சிப் பெண்கள் மீதான இக்கொடிய வன்முறை நடந்தேறியுள்ளது.
பெண் சமத்துவமின்மையும் பெண்கள் மீதான பாகுபாடுகளும் இயல்பான ஒன்றே என்று கருதும் இந்தியச் சமூக அவலத்துள், இன்றைய பாலியல் வன்கொடுமைகள் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியா மிகப்பெரிய வன்முறையாகும்.
வளர்ந்து  வரும் தொழில் நுட்பத்தினை மக்களின் ஆக்கத்திற்காக ஒரு பக்கம் பயன்படுத்திவரும் வேளையில், இன்னொரு பக்கம் மானுடரின் உள்ளார்ந்த மாண்பினை சிதைக்குமளவிற்குப் பயன்படுத்துவது வெட்கத்துக்குரியதாகும். தொழில் நுட்பங்களின் பன்முக வளர்ச்சியினூடே, மனிதமும் மனித மாண்பும் வளர வேண்டிய நிலையில், நாளும் மானுடம் சிதைக்கப்பட்டு வருவது கேவலத்திற்குரியதாகும். 
பொள்ளாச்சியில் நடைபெற்ற இக்கொடுமை பொள்ளாச்சியில் மட்டும் நடைபெறவில்லை. இன்று இந்தியாவெங்கும் இம்மடமை கயவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போக்கை கண்டு கொள்ளாதிருக்கும் காவல் துறையை, நாம் கண்டிக்கிறோம். உள்ளூர் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்கள் இக்குற்றப்பின்னணிக்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். மக்களின் மாண்பையும் சுதந்திரத்தையும் காக்கும் கடமையுடைய அரசு, இந்த வன்முறைகளை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 
மனித உரிமை இயக்கங்கள், சமய நிறுவனங்கள், பெண்ணிய இயக்கங்கள், குடிமைச் சமூகங்கள் ஒருங்கிணைந்து, இம்மாதிரியான போக்கு இனிமேல் நடைபெறா வண்ணம் செயற்பட வேண்டுவது கட்டாயம்.
சமய அடிப்படையில் இம்மாதிரியான தாக்குதல்கள் “பாவம்” (SIN) என்று கருதினாலும், சமூக, அரசியல் நிலையில் இச்செயலை மிகப் பெரிய வன்முறையாகவும், மனித உரிமை மீறலாகவும் கருதுவதால் மனித உரிமைகளை காக்க வேண்டிய அரசுகள் தம் துரித நடவடிக்கைகளால் பெண்களின் மாண்பினைக் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக ஆயர் பேரவை, பெண்களின் பாதுகாப்பு கருதி அரசு முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும் என்று உறுதி கூறுகிறோம்.

+ மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி
மதுரை உயர்மறைமாவட்டம்
தலைவர், தமிழக ஆயர் பேரவை
நாள்: 14.03.2019