அனைத்திற்கும் முடிவுண்டு
கடைசி காலம்
பூமியில் நாம் நிரந்தரமானவர்கள் அல்ல. ஆடாத ஆட்டம் போட்ட மாமன்னர்களும் மண்ணில் ஒரு நாள் வீழ்ந்து மடிந்து போயினர். வானத்திற்கே சவால்விட்ட அத்தனை அரசுகளும் தோற்றுப்போயின (எசா 14:3-27). உலகையே ஆட்டுவித்த பேரரசுகளைக் காலம் தோற்கடித்து விட்டது. பிறரின் மண்மீது ஆசைப்பட்டு பல உயிர்களைக் காவுவாங்கியவர்களை, மண் இறுதியில் வென்று புழுதியாக்கிவிட்டது. அனைத்திற்கும் முடிவுண்டு. பிறப்பெடுக்கும் போதே ஒவ்வொரு உயிரும் இறக்கும் இறுதி நாள் நிச்சயமாகிவிட்டது. கடைசி நாளின்போது கடவுளுக்குக் கட்டாயம் நாம் அனைவரும் தம் செயல்பாட்டுக் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். அந்த இறுதி நாள் தீர்ப்பை இதயத்தில் இருத்தி செயல்படுவோரின் வாழ்வு கடவுள் மயமானதாகவும், பிறரன்பு மயமானதாகவும் சிறப்பாக அமையும். இளமைப் பருவத்தில் ஆடாத ஆட்டம் போட்டவர்கள், வயதான காலத்தில் திருந்தி கடவுள், பிறரன்பு சேவைகளில் அதிகவனம் செலுத்துவது விரைவில் சந்திக்க விருக்கும் கடவுளின் தீர்ப்பைக் கண்டு, அச்சம் கொள்வதால்தான். மாறாக, கடவுளே இல்லை என்ற உணர்வோடு உள்ளத்தில் யாருக்கும் எந்த பயமும் இல்லாத மனிதன், தான்தோன்றியாகி கட்டுத்தறிக்காளையாக மாறிவிடுவான். உலகத்தையே ஆட்டிப்படைத்த கொடுங்கோலர்கள் இப்படித்தான் உருவாகி, உலகை உருக்குலைத்தனர். ஆனால், கொடுங்கோல் மன்னர்கள் தமது ஆட்சிகாலத்தில் பலரை வேட்டையாடினாலும், வாழ்வின் இறுதி நாள்களில் கதறியழுது கண்ணீர்விட்டனர். அவர்களின் கதி நமக்கும் நடந்து விடாமல் இருக்க, கவனத்துடன் செயல்பட இன்றைய நற்செய்தி அறிவுறுத்துகின்றது.
உலகம் அழியும்
இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் காட்சி இலக்கிய வகையைச் சேர்ந்தவை. அவற்றை வார்த்தைக்கு வார்த்தைப் பொருள் கொள்வது சரியல்ல. மக்கள் சொல்லவே முடியாத சோகங்களோடு வாழ்ந்தபோது கடவுள் மீதுள்ள தமது நம்பிக்கை செய்தியை உருவகங்கள், காட்சிகள் மூலம் வெளிக்கொணர்ந்தனர். அவை குறித்துக்காட்டும், சிறப்பு செய்திகள் மட்டுமே அழுத்தம் பெற வேண்டும். இன்றைய நற்செய்தி பேரழிவு நிகழவிருக்கின்றது என்ற சிந்தனையைத் தருகின்றது. கடவுள் தாம் விரும்பிப் படைத்த அழகான உலகை வன்முறையின் வரையறைகளைப் பயன்படுத்தி ஒருபோதும் அழிக்கமாட்டார். மனித சுயநலமும் மற்றவர்களை அழிக்கத் துடிக்கும் பேய்குணங்களும், வேதனைகளை உருவாக்கி (மாற் 13:24) அதை அழித்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை இதுவாகும். அணுசக்தியைக் கொலைக் கருவியாக்கி உலகைப் பலமுறை அழிக்கக்கூடிய அணுகுண்டுகளாக உருவாக்கி மற்றவர்களை மிரட்டியே சிலநாடுகள் வாழ்க்கை நடத்துகின்றனர். இதுவரை நடந்த சண்டைகளினாலும், கழிவாகக் குவிக்கப்பட்டிருக்கும் போர்க்கருவிகளின் குவியல்களாலும் உலகின் அழகிய முகம் உருக்குலைந்து கிடக்கின்றது. போர்க்கருவி தொழிற்சாலைகளில் முதலீடு செய்வது நிறுத்தப்பட்டு, ஆக்கபூர்வமான செயல்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும் வரை பூமி தேவதை அலங்கோலமாகவே காட்சியளிப்பார். பூமியின் அழகை இன்னும் மேம்படுத்துவது அதில் வாழும் மக்களே. அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு, இயற்கையும் வருத்தம் கொள்ளும் (மாற் 13:24-25). வழக்கமாக, விவிலியத்தில் கடவுள் தம் மக்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டி (திபா 50:4), அந்த குற்றங்களை வெறுக்கும்போது (எரே 2:12) சாட்சிகளாகச் செயல்பட வானமும், பூமியும் அழைக்கப்படுகின்றன. இங்கு மனித பாவம் அதன் உச்சத்தை அடைந்தமையால் அந்த இயற்கை சக்திகள் தமது ஆற்றலை இழந்து விடுகின்றன. சூரியனும், சந்திரனும் ஒளிகொடுக்க மறுப்பது கடவுள் நான்காம் நாள் படைத்ததைத் திரும்பப் பெறுவதாகும் (தொநூ 1:14-19). இந்த உருவகம் இதுவரை நடந்திராத பேரழிவைக் குறிக்கின்றது. எசா 13:10 இல் பாபிலோனும், எசா 34:4-5 இல் ஏதோமும், எசே 32:7-8, யோவேல் 2:10,31, 3:15 ஆமோஸ் 8:9 இல் தீமைக்குப் பழகிப்போன நாடுகள் தண்டிக்கப்படுவதை இந்த அடையாளங்கள் குறிக்கின்றன. இந்த உருவகம் கொடுக்கும் கடுமையான எச்சரிக்கை மனிதர் தங்களின் தவறுகளைத் திருத்திக்கொள்ள கடவுள் விடுக்கும் அழுத்தமான அழைப்பாகக் கருத வேண்டும்.
மானிட மகனின் தோற்றம்
உலகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ஒவ்வொருவரும் தம் கால்போகும் பாதையில் தான்தோன்றித்தனமாக அலைந்து, போர் மேகங்கள் எங்கும் சூழ்ந்து மாசற்ற மக்கள் இரத்தம் பூமியை நனைக்கும்போது, கடவுள் தீர்க்கமானச் செயல்பாடு - மானிட மகன் தோன்றுவதன் மூலம் வெளிப்படுகின்றது. மனிதர்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் தரப்படவில்லை. அவன் நினைத்ததெல்லாம் நிறைவேறினால் அவன் கடவுளுக்கும் கட்டளைபோட துவங்கி விடுவான். அநீதிகள் நீதிமன்றங்களுக்கு கட்டளை விதிக்கும்போது, அதர்மம் தர்மத்தைக் கவ்வும் வேளைகளில், குற்றவாளிகள் நீதிமான்களுக்குத் தண்டனைத் தீர்ப்புக்களை அறிவிக்கும்போது, மனித மாண்பின் உயிர் குரல்கள் அனைத்தும் பேயன்களிடம் அடகு வைக்கப்படும் போது, தீமையின் ஆதிக்கமும் அட்டகாசங்களும் அதிகமாகும்போது, ஒழுக்க வாழ்வு கானல் நீராகி, அன்றாட சுனாமிபோல் கரையை கடக்கும்போது, கடவுளே இல்லை என்ற குணம் தலைதூக்கும்போது, கடவுளின் தீர்ப்பு தீர்க்கமாகப் பாயும் (2 தெச 2:2-12). கடவுள் பயம் இல்லாத மனிதன் அடுத்திருப்பவனுக்கு உயிருள்ள நரகமாகி, பலரை எரித்துச் சாம்பலாக்குவான். கடவுளே இல்லாமல் வாழ்வோர் இறுதியில், விரக்தியடைந்து வாழ்வின் பொருள் இழந்து வீழ்வது உறுதி. ஆனால், அவர்கள் வீழும்முன் பலரைச் சீரழித்துள்ளனர் என்பது வரலாறு. தீமைக்குப் பழகிப்போனவர்களுக்கு மானிட மகனின் தோற்றம், அவர்களின் மனசாட்சியைத் திக்குமுக்காடச் செய்யும். பேயன்களுக்கு உறுதியான தண்டனை கிடைக்கும்.
இறுதி வெற்றி கடவுளுக்கே
மானிடமகன் கதவை நெருங்கி வந்து விட்டார். அதைத் தீமை செய்யும் ஒவ்வொரு தலைமுறையினரும் காண்பர் (மாற் 13:30). உலகில் நடக்கின்ற தீமைகளைக் காணும் வெறும் பார்வையாளராக கடவுள் இருக்கமாட்டார். தாமே படைத்து, ஒவ்வொருநாளும் புதுப்பித்து சாமக்காவல் காத்து, அதை மீட்கத் தன் மகனையே கையளித்த கடவுள் அழிப்போனில் கையில் அதை ஒருபோதும் ஒப்புவிக்கமாட்டார். அவரின் அடிப்படை அறநெறிகள் காயப்படுத்தப்படும் போது, மனித மாண்பின் சங்கு முறிக்கப்படும் போது, கடவுள் உறுதியுடன் செயல்பட்டு இறுதியில் வெற்றி கொள்வார். இதன் அடிப்படையிலே கடவுள் பல கொடுங்கோலர்களைக் கவிழ்த்துள்ளார். உள்ளத்தில் நேர்மையான தாழ்ந்தோரை உயர்த்தியுள்ளார் (லூக் 1:51). சாதாரண வெளியடையாளங்களை வைத்து கோடைக் காலத்தையும், இயற்கை மாற்றங்களையும் நிகழவிருப்பதையும் மனிதர்களால் கணிக்கமுடியும். அப்படியிருக்க, கடவுளின் கோபம் வெளிப்படும் நாள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் அடையாளங்களுடன் நடந்தேறும். அந்த அடையாளங்களைக் காணும் மானிடர் தம் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் கலங்கித் தவிக்கும் போதெல்லாம், அன்னை மரியாள் தோன்றி மக்களைப் பக்தி மார்க்கத்திற்குத் திருப்புவது கடவுளின் திட்டமே. திருஅவை பணக்கார பாதையில் உறுதியாக நடந்தபோது, அதைத் தம் கல்வாரிப் பாதைக்குத் திருப்ப அசிசியாரை உருவாக்கியதும் கடவுளே. புதிய மாற்றங்களுக்கு ஏற்ப திருஅவையின் வாழ்வைத் திறனாய்வு செய்ய இரண்டாம் வத்திக்கான் திருசங்கத்தைக் கூட்ட 23 ஆம் யோவானைத் தூண்டியவர் தூய ஆவியானவரே. தாமே எளிமையான முன்உதாரண வாழ்க்கை நடத்தி, 2023 அக்டோபரில் - ஒருங்கிணைந்த பயணம் - என்ற தலைப்பில் உலக ஆயர் மாமன்றத்தைக் கூட்டியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மூலம் செயலாற்றுபவர் கடவுளின் ஆவியானவரே. கடவுள் தமது தட்டுத் தடுமாறும் தம் மனிதப் படைப்பை இப்படியான மாபெரும் மனிதர்கள் மூலமும் வெற்றிகொள்வார்.
கடவுளின் தீர்ப்பைக் கண்முன் நிறுத்தி வாழும் வாழ்வு
திருந்த மறுப்போர் தீர்க்கமாகத் திருத்தப்படுவர் என்ற எச்சரிக்கையும் நற்செய்தியில் உண்டு. ஒவ்வொரு தலைமுறைக்கும் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப இவ்வுலகில் வாழும்போதே (இந்த தலை முறையினர்) அதற்கான பலனை அனுபவிப்பர். கடவுளின் கட்டளைகளைக் கண்முன் நிறுத்தி கவனத்துடன் வாழ்வோர் இந்தத் தீர்ப்பிலிருந்து தப்பிவிடுவர் என்று நற்செய்தியின் இரண்டாம் பாகம் கூறுகின்றது. வாழ்வில் கடவுளுக்கு அல்லது யாராவது ஒருவருக்குப் பயந்த வாழ்வு நடத்த வேண்டும். பயமே இல்லாத வாழ்வு நம்முள் எப்போதும் சீரும் சிங்க குணத்தைப் புகுத்திக் கொடுமையாளனாக உருமாற்றலாம். நரிகுணத்தைப் புகுத்தி, ஏமாற்றுப் பேர்வழியாக மாற்றலாம். பாம்புக்கு இருப்பது போன்ற விஷம் நிறைந்த நாக்கைக் கொடுத்து பலரைக் கடித்துக் கொலை செய்யலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். அவனவன் செயலுக்கு ஏற்ப ஆண்டவர் கைமாறு தருகின்றார். நின்று கொல்ல தெய்வம் உண்டு. இரவல் தரப்பட்ட வாழ்வுக்கு கணக்கு தரவேண்டும். ஆண்டவரின் நாள் - கோபத்தின் நாள் (புல 1:12). இருளும், காரிருளும் கவிந்தநாள், கார்முகிலும், மந்தாரமும் சூழ்ந்தநாள் (யோவே 2:2). இவை போன்ற எச்சரிக்கைகள் பயத்தை உருவாக்க அல்ல; மாறாக, வாழ்வை படைக்கப்பட்ட நோக்கோடு முழுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே. மனித சமுதாயத்தில் வாழும் அனைவருக்கும் நாம் பொறுப்பாளிகள். பூமியில் நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் விண்ணகத்தில் கடவுளருகில் ‘மானிட மகன்களாக’ வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை தானியேல் நூல் கூறுகின்றது. பூமியில் அவர்கள் நடத்திய பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வே அதைத் தீர்மானித்துள்ளது.
பாடம் கற்போம்
1. இது நிறைவின் உச்சநிலை எய்திய உலகம் அல்ல. இந்த உலகமும் நமது வாழ்வும் நிலையற்றவை. மனித நல்வாழ்வை எதிர்த்துப் போராடும் ஆற்றல்கள் நிறைந்துள்ளன. மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கண்டுபிடிப்புகள், சேர்த்து வைக்கப்படும் சொத்து, சுகங்கள் ஒருநாள் ஒன்றுமில்லாமல் போய்விடும். கொரோனா கொடூரன் கற்றுக் கொடுத்தப் பாடங்களில் இதுவும் ஒன்று. எனவே, நமது சொத்துக்களை ஞானத்தோடு முதலீடு செய்வோம் - மற்றொரு உலகில் அல்லது கடவுளரசில்.
2. கொரோனா வந்தவுடன் உலகம் அழிந்து விடவில்லை. பாடம் கற்று வாழ்வைத் தொடர்கின்றோம். இதுபோல் நிலநடுக்கங்கள், இயற்கைச் சீற்றங்கள், சீரழிவுகள் மனித வாழ்வு நிலையற்றது என்ற பாடங்களைக் கற்பித்துள்ளன. மேலும், மனித கண்டுபிடிப்புக்கள் இன்னும் தொடர வழிவகை செய்துள்ளன. எருசலேம் கோவில் இடிக்கப்பட்டவுடன், யூதமதம் அழிந்து விடவில்லை. திருஅவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு முன் சில நாடுகளை ஆட்சி செய்தது. அவற்றை இழந்தபின், அது ஒழிந்து விடவில்லை. உலகின் ஆன்மிக மையமாகத் திகழ்கின்றது. வரலாற்றில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்கள் நம்மைக் கடவுள் பக்கம் திரும்பச் செய்கின்றன. ஒரு சில நாள்கள் இருண்டு கிடப்பதால் வெளிச்சத்தின் மேன்மையை அறிகின்றோம். கோடைவெயில் கொளுத்தும் சமயங்களில் தான் மழை நீர் நமக்கு இனிக்கின்றது.
3. கடவுள் தோன்றும் காலத்தையும், நேரத்தையும் அவர்தான் முடிவு செய்வார். கவிஞர் கண்ணதாசன் கூறுவது போல், மூலமூம் அவரே, முடிவும் அவரே, இயக்கமும் அவரே. அநியாயங்களைத் திருத்த நீதியின் தெய்வம் கட்டாயம் தோன்றி, இவ்வுலகத் தீமைகளுக்கு அவர் முடிவு கட்டுவார். ஒவ்வொரு மனிதனும் தமது அடிப்படை மானுடக் கடமைகளை நிறைவேற்றி கவனத்துடன் வாழ்வு நடத்துவது அவசியம்.