திருப்பலி முன்னுரை
முதல் உலகப் போர் முடிவுற்ற பின்னர், இந்த உலகில் எல்லா நாடுகளையும்விட, எல்லா மக்களையும்விட நாங்கள் தான் சிறந்தவர்கள். எனவே, நாங்கள் தான் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தலைவர்களாகவும், அரசர்களாகவும் இருப்போம், என்று ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் முட்டிமோதிக் கொண்டன. இந்த அமைதியற்ற சூழ்நிலையில் தான் 1925ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், ஆண்டவர் இயேசு மட்டுமே அனைத்து உலகின் அரசர்; அவரைத் தவிர வேறு எவரும் இவ்வுலகில் அரசராகவோ, தலைவராகவோ இருக்க முடியாது என்று எடுத்துரைத்து நாடுகளை அமைதி அடையச் செய்தார். அன்றிலிருந்து நாம் இந்த கிறிஸ்து அரசர் பெருவிழாவினை கொண்டாடி வருகிறோம். படைவீரர்கள் புடைசூழ யானைகள் மீதும், குதிரைகள் மீதும் வலம் வந்த அரசர் இல்லை இவர். மாறாக ஏழை மக்கள் புடைசூழ, கழுதையின் மீது வலம் வந்தவர் இந்த அன்பின் அரசர். நீர் யூதர்களின் அரசனா? என்று பிலாத்து கேட்டபொழுது, ஆம்! என்று சொல்லாமல் உண்மைக்கு சான்றுபகர்வதே என் பணி, என்று சொல்கிறார். பதவி, பணம், பட்டம், அதிகாரம் இவைகள் நம்மிடம் இருக்கிறதோ, இல்லையோ, ஆனால், உண்மைக்கு சான்று பகரும் மனத்திடன் இருந்தால் நாமும் ஆண்டவரது ஆட்சியின் உரிமையாளர்களே என்பதை இந்த கிறிஸ்து அரசர் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கின்றது. ஆகவே, இந்த உண்மையின் அரசரை பின்பற்றி இவரைப்போல உண்மையோடு, நீதியோடு வாழ்ந்திட வரம் வேண்டி பங்குபெறுவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக முன்னுரை
மானிடமகன் உலக முடிவில் மாட்சியோடு வருவார். அவர் வரும்பொழுது இம்மண்ணுலக ஆட்சிகள் அனைத்தும் அழிந்து போகும். ஆனால், மானிடமகன் கொண்டுவரும் ஆட்சியோ முடிந்தும் போகாது, அழிந்தும் போகாது. இவரது ஆட்சியில் அனைவருக்குமே உரிமையுண்டு, என்று தான் கண்ட காட்சியை தானியேல் விளக்குவதை இம் முதல் வாசகத்தில் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
மண்ணுலகை ஆண்ட அரசர்கள் அனைவரும் இறந்து போனார்கள். ஆனால், ‘மானிட மகனோ இறந்து, உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் வருவார்’. அப்பொழுது அவரை ஊடுருவ குத்தியவர்கூட அவரை காண்கின்ற பாக்கியத்தை பெறுவார்கள் என்று, யோவான் தான் கண்ட காட்சியை விளக்குவதை இந்த இரண்டாவது வாசகத்தில் கேட்போம்.
மன்றாட்டுக்கள்
1. எங்கள் அன்புத் தந்தையே, உம் திருஅவையை வழிநடத்தும் திருஅவை தலைவர்கள், உம் திருமகன் இயேசு கிறிஸ்துவைப் போல தாங்கள் மக்களுக்கு தாழ்ச்சியோடு பணிவிடைபுரிய வந்த தலைவர்கள் என்பதை உணர்ந்து வாழவும், மக்களை நீதியோடும், உண்மையோடும் வழிநடத்தவும் தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. எங்கள் பரமதந்தையே, நாட்டை ஆளுகின்ற தலைவர்கள் தங்களின் பதவி மற்றும் அதிகார மோகத்தினால் தங்களின் குடிமக்களை கொடுங்கோல் ஆட்சியின் கீழ்கொண்டுவராமல், எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைபோல இரக்கமுள்ள, அன்புள்ள ஆட்சியை தந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
3. இரக்கமுள்ள தந்தையே, உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள், இன்னும் வளராத நாடுகளின் மீது மறைமுகமாய் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி அவர்களை அடிமைப்படுத்துவதை கைவிட்டு, அவர்களின் வாழ்வு வளம் பெறவும், முன்னேற்றமடையவும் உதவிபுரிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
4. பரிவுள்ளத் தந்தையே, குடும்பங்களில் கணவன், மனைவி இவர்களிடையே நல்ல அன்புறவு நிலைக்கவும், நான்தான் குடும்பத்தை ஆட்சிசெய்வேன் என்ற எண்ணம் இல்லாமல், இருவரும் சேர்ந்து குடும்ப பொறுப்புகளில் ஈடுபட தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
5. எங்கள் விண்ணக தந்தையே, எம் பங்கில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கின்ற நாங்கள், எங்களால் தான் இப்பங்கு இயங்குகிறது என்ற எண்ணத்தோடு செயல்படாமல், தாழ்ச்சியோடும், பொறுமையோடும், அனைவரையும் அன்புசெய்து எங்கள் பணிகளை சிறப்பாக செய்யத் தேவையான அருளைத் தந்தருள வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.