Namvazhvu
அருள்பணி. P.. ஜான் பால் திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (பாரூ 5:1-9 பிலி 1:3-11 லுhக் 3:1-6)
Thursday, 02 Dec 2021 12:53 pm

Namvazhvu

திருப்பலி  முன்னுரை:

ஆண்டவரின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்யுங்கள், பாதையை செம்மையாக்குங்கள் என்று திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நமக்கு அழைப்புவிடுக்கின்றது. பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும், மலைகள், குன்றுகள் தகர்க்கப்படும் என்றெல்லாம் இறைவாக்கினர் எசாயா தன் நூலில் குறிப்பிட்டு இருப்பது ஆண்டவர் இயேசு பிறக்கவிருந்த பாலைவனமான, மண்குன்றுகள் குவிந்த பாலஸ்தீன நாட்டை அல்ல; மாறாக மனித இதயங்களைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். பாவமன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் உரைப்பதிலிருந்து நாம் இந்த உண்மையை கண்டுகொள்ளலாம். மலைகள்போல், குன்றுகள்போல் நம் உள்ளங்களில் இருக்கும் ஆணவங்கள், கர்வங்கள் தகர்க்கப்பட வேண்டும். பள்ளத்தாக்குகள்போல் பாவமான நிலையினால் நம்முள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை நிரப்பப்பட வேண்டும். பாவத்தால் கரடுமுரடாகவும், கோணலாகவும் இருக்கின்ற நம் இதயங்கள் இறைவனை நோக்கியவாறு நேராக்கப்பட வேண்டும். அப்படி செய்கின்றபொழுது  நம் இதயங்கள், வரவிருக்கும் இறைவனை வரவேற்க ஆயத்தமாய் இருக்கும். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை அவர் சிதறடித்து வருகிறார் என்னும் நம் தாய் மரியாவின் வார்த்தைகளை சிந்தித்தவர்களாய், இறைவனின் வருகைக்காக நம் உள்ளங்களை ஆயத்தமாக்க இத்திருப்பலியில் பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை:

ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அடிமைகளாக நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களின் நிலை கண்டு ஆண்டவர் இரக்கமுற்று, எருசலேமே உன் துன்ப ஆடையை களைந்துவிடு. நீதியோடும், இரக்கத்தோடும் இதோ கடவுள் உனக்காக குன்றுகளையும், மலைகளையும் தகர்த்து, தாழ்வான பகுதிகளை நிரப்பி உன்னை அழைத்துச் செல்ல மாட்சியோடு வருகிறார் என்று கூறும் முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி பணிக்காக தங்களை, சபை கண்காணிப்பாளர்களாக, திருத்தொண்டர்களாக அர்ப்பணித்த பிலிப்பு நகர மக்களை நோக்கி, உங்களுக்காக நன்றி கூறுகிறேன். உங்கள் செயலின் பொருட்டு மகிழ்ச்சி கொள்கிறேன், ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாய் இருங்கள் என்று பவுல் அடியார் கூறுவதை இவ்விரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் விண்ணகத் தந்தையே, உம் திருஅவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள் தங்கள் திருப்பணிகளால் மக்களையும், இவ்வுலகையும், வரவிருக்கும் உம் திருமகனின் இரண்டாம் வருகைக்காக ஆயுத்தபடுத்தவும், கோணலாக இருக்கிற இதயங்களை உம்மை நோக்கியவாறு நேராக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் வானகத் தந்தையே, எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஆட்சி செய்யவும், மதங்கள் அடிப்படையில் மக்களை பிரித்து ஆட்சி செய்யாமல் எல்லா மக்களையும் சமமாகவும், மாண்போடும், மரியாதையோடும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

3. எங்கள் பரம தந்தையே, மலைகள் போல், குன்றுகள் போல் எங்கள் உள்ளங்களில் இருக்கும் ஆணவங்கள், கர்வங்கள் தகர்க்கப்படவும், பள்ளத்தாக்குகள் போல் பாவமான நிலையினால் எங்களுள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை நிரப்பப்படவும், உம்மை வரவேற்க மனம் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு வழங்கும் வள்ளலே, இயற்கை சீற்றங்களால் இறந்துபோன மக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் உத்தரிக்க பலிபீடத்தில் இருக்கும் ஆன்மாக்களுக்காவும் நாங்கள் ஒப்புக்கொடுக்கிற எல்லா செபங்களையும் ஏற்று, அவர்களுக்கு முடிவில்லா பேரின்ப பலனை நீர் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே, தூய பவுலடியார் வாழ்த்திய பிலிப்பு நகர மக்களைப் போல நாங்களும் உமது பணிக்காக, உமது நற்செய்திக்காக, உமது இறையாட்சிக்காக எங்களையும், எங்கள் குடும்பங்களையும் அர்ப்பணித்து அதற்காக அயராது உழைத்திடவும், உமக்கு சாட்சிகளாக விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.