Namvazhvu
(செப் 3:14-17, பிலி 4:4-7, லூக் 3:10-18) திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
Saturday, 11 Dec 2021 04:55 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை:

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடப் படுகின்றது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்பனியா, ‘மகளே சீயோன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரி அறம் செய்என்று கூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் பிலிப்பு நகர மக்களை நோக்கி, ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் என்று கூறுகிறார். நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் மக்கள் கூட்டத்தினர், வரி தண்டுவோர், படைவீரர் என, அவரவர் உங்கள் நிலைகளுக்கு ஏற்றவாறு பாவம் செய்யாமல் நன்மை செய்யுங்கள் என்று கூறுகிறார். மேலும், நான் மெசியா அல்ல; என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார். அவர் உங்களுக்கு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்ற செய்தியையும் வழங்குகிறார். தன்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார் என்ற செய்தியை திருமுழுக்கு யோவான் வழியாகவே கேட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தங்களுக்கு மீட்பர் வரப்போகிறார் என்று மனதிற்குள்ளே ஆரவாரம் செய்கிறார்கள். அதேநேரத்தில் திருமுழுக்கு யோவானின் இந்த செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்ததா? என்றால், கண்டிப்பாக இல்லை. ஆண்டவரின் வருகையால் நல்லவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால், தீயவர்கள், மக்களை ஒடுக்கி ஆண்டவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். இன்று ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கும் நாம், வருத்தப்படுகிறோமா? அல்லது மகிழ்ச்சி அடைகிறோமா?. மகிழ்ச்சி என்றால் நம் வாழ்வு நேரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால் அதற்கான வரம் வேண்டி இப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

வேற்று தெய்வங்களை வணங்கி, தனக்கு எதிராகப் பாவம் செய்த இஸ்ரயேல் மக்களுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கிய பின்பு, தந்தை உள்ளத்தோடு கடவுள் சீயோன் மகளே ஆர்ப்பரி, ஆரவாரம் செய், அஞ்ச வேண்டாம். ஏனெனில், நான் உன் தண்டனை தீர்ப்பை தள்ளி வைத்துவிட்டேன் என்று கூறுவதை இம்முதல் வாசகத்தில் கேட்போம்

இரண்டாம் வாசக முன்னுரை:

பிலிப்பு நகர திருஅவையினரே, எதைப்பற்றியும் கவலை கொள்ளவேண்டாம். ஏனெனில், ஆண்டவரின் வருகை அண்மையில் உள்ளது. எனவே, அவரிடம் மன்றாடுங்கள். அவரோடு என்றும் இணைந்து மகிழுங்கள் என்று பவுல் அடியார் கூறும் அறிவுரைகளை இவ்விரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

மன்றாட்டுக்கள்:

1. இஸ்ரயேல் மகளே மகிழ்ந்து ஆர்ப்பரி... எங்கள் விண்ணகத் தந்தையே! திருவருகைக் காலத்தில் மகிழ்ச்சியின் ஞாயிறை கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவைக்காகவும், அதை வழிநடத்தும் திருப்பணியாளர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் தங்கள் ஆழமான சிந்தனையாளும், எளிமையான வாழ்வாலும், பணியாலும் உம் மந்தைகளை மகிழச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்…... எங்கள் பரம் பொருளேஎம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் பதவியில், பணத்தில், அதிகாரத்தில் மகிழ்ச்சி கொள்ளாமல் உமது நியமங்களின் படி மக்களை வழிநடத்துவதில் மகிழ்ச்சி கண்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரண்டு அங்கிகளை உடையோர் இல்லாத ஒருவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்…... எங்கள் வானகத் தந்தையே! உம் திருமகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் நாங்கள் இதுபோன்ற இரக்க செயல்களால், நற்பண்புகளால் எங்கள் உள்ளத்தை தயார் படுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்... எங்கள் அன்பு தந்தையே! திருவருகைக் காலத்தில் உலக இன்பங்களை பற்றியோ, அன்றாட வாழ்க்கையை பற்றியோ சிந்தித்துக் கொண்டு, கவலைப்படாமல் உம் திருமகனின் வருகையை எவ்வாறு எதிர் கொள்வது என்பதை பற்றி சிந்திக்க அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.