Namvazhvu
பேரா. S. பிலிப் & பேரா. இம்மாகுலேட் நோய்
Thursday, 16 Dec 2021 12:53 pm
Namvazhvu

Namvazhvu

... மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு என்றார் (மாற் 5:34).

மேலே கூறப்பட்ட வார்த்தைகள் இயேசுவின் மேலுடையைத் தொட்டு, நலம் பெற்ற பெரும்பாடுள்ள பெண்ணிடம் இயேசு, கூறியவையாகும். இயேசுவின் மேல், அவர் வார்த்தையின்மேல் நம்பிக்கை கொண்டு செயல்படும்போது நமக்குக் கிடைக்கும் இயற்கைக்கு அப்பாற் பெற்ற நலமாகும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13:8). எனவே, அதே நலனை நாம் பெற்று கொடுக்க முடியும்.

வள்ளுவர் கருத்து:

நோய் பற்றிக் கூறும் திருவள்ளுவர்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948) எனக் கூறுகிறார்.

அதாவது ஒருவர் நோயுற்றால் அது என்ன நோய்? அது எதனால் வந்தது? அதைத் தீர்க்கும் வழி என்ன? என்பவற்றை முறையாக ஆராய்ந்து, சிகிச்சைச் செய்ய வேண்டும் என்கிறது இந்த திருக்குறள்.

ஆன்மீக நலம்:

இறை மனச் சான்றில் நலம் பெறுதல் அல்லது பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் எனலாம். முடக்குவாதக்காரனின் (மத் 9:1-8) பாவம் அவனது உடல் நோய் குணம் பெறத்தடையாக இருந்துள்ளது. எனவே, இயேசு அவன் பாவத்தை மன்னித்து, உடல் நோயில் குணம்பெற வைக்கிறார். நமக்கு ஒப்புரவு திருவருட்சாதனம் இதைச் செய்கிறது. எனவேதான், யுங் போன்ற உளவியலார், தங்களிடம் யாராவது ஆற்றுப்படுத்தலுக்காக வந்தால், அந்த நபர் கத்தோலிக்கராக இருந்தால், முதலில் போய் பாவசங்கீர்த்தனம் செய்யச் சொல்வாராம். காரணம் அவர் பாவத்திலிருந்து விடுபட்டால், ஆற்றுப்படுத்துநரின் 50 விழுக்காடு வேலை முடிந்து போகுமாம்.

உடலையும், மனதையும் பாதிக்கும் வியாதிகள்:

இத்தகைய நோய்கள் மனதில் வேர்கொண்டிருக்கும். எனவேதான் கிரேக்க அறிஞர் பிளேட்டோ, உடலைக் குணப்படுத்த விரும்பினால் முதலில் மனதைக் குணப்படுத்த வேண்டும் என்கிறார்.

உளவியாலார் கருத்துப்படி, 60 முதல் 80 விழுக்காடு உடல் நோய்களுக்கு மனப்பிரச்சனை காரணமாம். இதனால்தான் மனமே (Mind is Man) மனிதன் என்கின்றனர். மனப்பிரச்சனை எனக் கூறும் போது பகை, பயம், குற்றப்பழி, தாழ்வு மனம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக 61 விழுக்காடு புற்றுநோயாளிகளிடம் பகை வெறுப்பு இருந்ததாக ஆய்வு கூறுகிறது.

நானே உன்னைக் குணப்படுத்தும் ஆண்டவர்:

உளவியல், மற்றும் அறிவியல் (மருந்துகள்) நோயை குணப்படுத்துவது இயல்பானது. ஆனால், இயற்கைக்கு அப்பாற்பட்டநிலையில் வார்த்தை நம்மை குணப்படுத்துவதை விவிலியம் நமக்குக் கூறுகிறது.

பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை;

ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே

எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது (சாஞா 16:12)

இங்கு வார்த்தையை அனுப்பி இறைவன் நமக்கு நலம் தருகிறார் (திபா 107: 20).

இதை இயேசு, புதிய ஏற்பாட்டில் செய்து காட்டுவதை நாம் காண்கிறோம். எந்த இடத்திலும் இயேசு வாய் திறந்து வார்த்தையைச் சொல்லாமல் குணப்படுத்தியதாக விவிலியத்தில் சொல்லப்படவில்லை. மேலும், இயேசு அதிகாரத்தோடு நோயை/பேயை விரட்டியதாகக் காண்கிறோம்.

ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போஇனி இவனுள் நுழையாதே” (மாற் 9:25) எனக் கூறி சிறுவனைக் குணப்படுத்துகிறார்.

நமக்கு அதிகாரம் கொடுத்துள்ளார்:

நம்பிக்கைக் கொண்டு திருமுழுக்கு பெறுவோர் ... உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்” (மாற் 16:16-18) எனக் கூறியுள்ளார் இயேசு. அவரில் நம்பிக்கை கொள்வோர் அவர் செய்ததையும் ஏன் அவற்றைவிட பெரிய காரியங்களையும் செய்வார் என்கிறார் இயேசு (யோவா 14:12).

இயேசு அதிகாரத்தோடு செயல்பட்டது போன்று, நாமும் செயல்பட அழைக்கப்படுகிறோம். லூக் 10:19 இல் அந்த அதிகாரம் பற்றி இயேசு பேசுகிறார். பேதுருவும், யோவானும் இதைச் செய்கின்றனர் (திப 3: 1-10). இந்த அழைப்பு திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் உண்டு என 2 ஆம் வத்திக்கான் சங்கம் சொல்கிறது.

நாம் குணம் பெற:

நிகழ்ச்சி:- ஒருவர் சர்க்கரை வியாதியால் அவதியுற்ற நிலையில், அவரது கால் விரல் ஒன்றில் புண் ஒன்று வந்துவிட்டது. எனவே, அந்த விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். ஆனால், விரல் வெட்டப்பட்ட இடத்திலுள்ள புண் ஆறவில்லை. எத்தனையோ மருந்துகள் தடவியும் புண் ஆறாததால், இரத்தக்குழாய் சம்மந்தப்பட்ட மருத்துவர் காலில் இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்து, அந்த இரத்தக்குழாயில் ஒருஸ்டென்ட்வைக்க அறிவுறுத்தினார். ஒரு வாரத்தில் பதில் கூறச் சொன்னார்ஆனால் பாதிக்கப்பட்டவரோ...

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!” (2கொரி 5:17) என்ற வார்த்தையை மனனம் செய்து, ஒருநாளைக்கு 500 முறை உள்ளூர நம்பி 6 நாள், 3000 முறை வாயார அறிக்கையிட்டார் (உரோ 10: 9-10). ஏழாவது நாள் அந்த இடத்தில் புதியதோல் வந்திருந்தது. புண் முழுமையாக காய்ந்து, குணமாகியிருந்தது.

இதை நாம் நம்பிக்கையால் குணம் பெறுதல் (Faith Healing) என்கிறோம் (மாற் 9:23).

இன்னும் கதிர் வீசும்