திருப்பலி முன்னுரை:
ஒரு உன்னதமான சந்திப்பு நிகழ்கிறது. இந்த அற்புதமான சந்திப்பில் நான்குபேர் பங்கு கொள்கிறார்கள். இரண்டு தாய்களின் சந்திப்பில், இரு குழந்தைகளின் நட்பு மலர்கிறது. முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் எலிசபெத்தைக்காண அவருக்கு உதவி புரிய, இளம் வயதில் கருவுற்றிருக்கும் அன்னை மரியாள் செல்கிறார். கருவுற்றிருப்பதால் அன்னை மரியாளும் கவனிக்கப்பட வேண்டியவர், பராமரிக்கப்பட வேண்டியவர். இருப்பினும், தன்னைவிட முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கும் எலிசபெத்துக்கு உதவி செய்ய ஆவல் கொள்கிறார். இவர்கள் இருவரின் கருவுறுதலும் அதிசயமானது, அற்புதமானது, ஆச்சரியத்திற்குரியது. ஏனெனில், இவை அனைத்தும் இவ்வாறு நிகழ வேண்டும் என்பது இறைத்தந்தையின் திருவுளம். பாவிகளாக இருந்தபொழுதும், தன் மக்கள் மீது கொண்ட அதீத அன்பினால் இறைத்தந்தை தன் ஒரே பேரான மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அந்த திருமகனும் தன் தந்தை மீது கொண்ட அன்பினால் அவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஆவல் கொண்டார். பழைய ஏற்பாட்டில் நான் உங்கள் தந்தை, நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்று சொன்ன இறைவன், புதிய ஏற்பாட்டில் என் வார்த்தையின் படி, என் தந்தையின் திருவுளப்படி நடப்பவர்களே என் தாயும், என் சகோதரரும், சகோதரியும் என்கிறார். எனவே, இறைவனுக்கு நாம் சகோதரர்களாக, சகோதரிகளாக ஏன் தாயாக இருக்க வேண்டும் என்றால், இறைத்தந்தையின் திருவுளப்படி நடக்க வேண்டும். இந்நாள்வரை நாம் இறைவனின் திருவுளப்படிதான் வாழ்ந்திருக்கிறோமா? என்ற சிந்தனையோடு, வரவிருக்கும் திருமகனை வரவேற்க, நம் உள்ளங்களை தூய்மையாக்க இப்பலியில் பங்குபெறுவோம்.
முதல் வாசக முன்னுரை:
வறண்ட பூமியாய், பாலைவனமும், மணல் குன்றுகளும் நிறைந்திருந்த பாலஸ்தீன நாட்டில், மிகவும் சிறிய நகராக கருதப்பட்ட பெத்லகேமில் இருந்து, தன் மக்களை தன் சார்பாய், தான் விரும்பியவாறு அமைதி வழியில் ஆளப் போகிறவர் தோன்றுவார் என்று, இறைவன் முதல் வாசகத்தில் மீக்கா வழியாக உரைப்பதை கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை:
ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு வந்தது தன்னுடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல; மாறாக, தன்னை அனுப்பிய இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவே அவர் இவ்வுலகிற்கு வந்தார். எனவேதான், தன் தந்தையின் விருப்பப்படி தன்னையே பலியாக தந்தார் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தை கேட்போம்.
மன்றாட்டுக்கள்:
1. எங்கள் அன்புத் தந்தையே! உம் திருமகனின் உடலாக இருக்கின்ற திருஅவையை ஆசீர்வதித்து, உம் திருப்பணியாளர்கள் தங்கள் சொல்லாலும், செயலாலும் நீர் கொண்டு வந்த அன்பை, அமைதியை உலகத்தோடு பகிர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எங்கள் வானகத் தந்தையே! எம் நாட்டு தலைவர்கள் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக மக்கள் மீது வன்முறைகளை தொடுக்காமல், நீர் அமைத்த அன்பின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை அனைவருக்கும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் பரமதந்தையே! உலகிலுள்ள நாடுகள் தங்களை வல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு, உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தாமல் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து சகோதர, சகோதரிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் விண்ணகத் தந்தையே! உம் திருமகனின் வருகைக்காக காத்திருக்கும் நாங்கள், எங்கள் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பாராமுகமாய் இராமல், ஒருவரை ஒருவர் அன்பு செய்து, அரவணைத்து, அமைதியோடு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. எங்கள் பரமதந்தையே! அன்பின்றி, உள்ளத்தில் அமைதி இன்றி அனாதைகளாய், ஆதரவற்றவர்களாய் இருக்கும் குழந்தைகளையும், முதியவர்களையும் ஆசீர்வதித்து, நீரே அவர்களுக்கு அரணும் கோட்டையுமாய் இருந்து வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.