Namvazhvu
அருள்முனைவர்  யேசு கருணாநிதி கிறிஸ்து பிறப்பு பெருவிழா எசா 9 : 2-4, 6 - 7, தீத்  2: 11-14, லூக் 2 : 1-14
Wednesday, 22 Dec 2021 09:00 am
Namvazhvu

Namvazhvu

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கிறிஸ்து பிறப்பு மறையுரையில் (2019),‘ஆயனின் வெற்றுக் கைகள்என்னும் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். அக்கதையின்படி, வானதூதரின் அறிவிப்பைக் கேட்ட இடையர்கள் உடனடியாக பெத்லகேம் நோக்கிப் புறப்பட்டனர். தங்கள் கைகளில் கிடைத்த ஏதாவது ஒன்றைக் குழந்தைக்குக் கொடுப்பதற்காக அவர்கள் எடுத்துக்கொண்டனர். தங்கள் மந்தையில் உள்ள ஓர் ஆடு, தாங்கள் சேமித்து வைத்த பாலாடைக் கட்டி, ஓர் ஆட்டுக்குட்டி, அழகிய விளக்கு என தங்களிடம் உள்ள ஒன்றை அவர்கள் கையோடு எடுத்துச் சென்றனர். குழந்தையைச் சந்தித்து அவர்கள் தங்கள் பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கே அவர்கள் நடுவில் ஒன்றும் இல்லாத, வெறுங்கை ஆயன் ஒருவர் இருந்தார். மற்றவர்களோடு நிற்க வெட்கப்பட்டுத் தனியாக நிற்கின்றார். பரிசுகளை வாங்கிக்கொண்டே இருப்பது யோசேப்புக்கும் மரியாவுக்கும் சிரமமாக இருந்தது. குறிப்பாக, குழந்தையைக் கையில் ஏந்தி நின்று மரியாவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அந்த நேரத்தில் மரியாவின் கண்கள் வெளியே நின்றுகொண்டிருந்த அந்த ஆயன்மேல் பட்டது. மரியாவைக் கண்ட ஆயன் புன்னகை பூக்கின்றார். உள்ளே வருமாறு அவரை அழைத்த மரியா, அவருடைய கைகளில் குழந்தை இயேசுவைப் பொதிகின்றார். குழந்தையைக் கைகளில் ஏந்திய ஆயன், பரிசுகளுக்கெல்லாம் பெரிய பரிசைத் தன் கைகளில் ஏந்துவதை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றார். இதுவரை வெறுமையாக இருந்த தன் கைகள் கடவுளின் தொட்டிலாக மாறியதை எண்ணி வியக்கின்றார். இதுவரை வெட்கமும் அவமானமும் அடைந்தவர் இப்போது பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றார். தன் வெறுமை நிலையும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், தானும் அன்பு செய்யப்பட்டதையும் உணர்ந்த அந்த நபர், இயேசுவை அருகிலிருந்த அனைவருக்கும் காட்டுகின்றார். ஏனெனில், கொடைகளின் கொடையை, பரிசுகளின் பரிசைத் தனக்கென வைத்துக்கொள்ள அவரால் இயலவில்லை!”.

நம் கைகளும் இதயமும் வெறுமையாக இருந்தால், இந்த இரவு நமக்கான இரவு! மனித குலத்திற்கு வெளியே இருந்த கடவுள் மனித வரலாற்றுக்குள் நுழைந்து தன்னையே மனிதத்தோடு கலந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

நாம் இன்று முதலில் கேட்க வேண்டிய கேள்வி: ‘கிறிஸ்துமஸ் என்பது எனக்கு ஒரு நிகழ்வா? அல்லது அனுபவமா?’ - நிகழ்வு என்றால் அது கேரல்ஸ், கேண்டில்ஸ், கேக், க்ரீட்டிங்ஸ் என நின்று விடும். அனுபவம் என்றால்தான் அது என் உள்ளத்தைப் பாதிக்கும்.

இன்றைய வாசகங்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை மூவகை அனுபவங்களாகப் பகிர்கின்றன: () மகிழ்ச்சியின் அனுபவம் (காண். முதல் வாசகம்) - அடிமைத்தனத்தில் இருந்த மக்களுக்கு. () மீட்பின் அனுபவம் (காண். இரண்டாம், மூன்றாம் வாசகம்) - கடைநிலையில் இருந்த ஆடு மேய்ப்பவர்களுக்கு. () அமைதியின் அனுபவம் (காண். மூன்றாம் வாசகம்) - நன்மனத்தவர் அனைவருக்கும்.

முதல் வாசகத்தில் ஆகாசு அரசருக்கு வழங்கப்பட்டஇம்மானுவேல்அடையாளத்தின் தொடர்ச்சியாக வருகின்ற இறைவாக்குப் பகுதியில், “ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார். ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்என மொழிகின்றார் எசாயா. இது மெசியா இறைவாக்குப் பகுதியாக இருந்தாலும், உடனடியாக இது குறித்துக் காட்டுவது, ஆகாசுக்குப் பிறக்கப் போகின்ற ஒரு குழந்தையைத்தான். இப்பாடத்தின் சூழல் பாபிலோனிய அடிமைத்தனமாக இருக்கலாம் என்றும், அசீரிய அடிமைத்தனமாக இருக்கலாம் என்றும், யூதாவைச் சுற்றியிருந்த போர்ச்சூழல் என்றும் சொல்லப்படுகின்றது. இப்பாடத்தில் வரும் மக்கள் நான்கு நிலைகளில் வெறுமையாக இருக்கின்றனர்: () ‘இருளில் நடக்கின்றனர்’- அதாவது, தாங்கள் செல்வது எங்கு என்று தெரியாமல் நடந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை வழிநடத்த சரியான தலைவர்கள் இல்லை. அல்லது அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சரியாக வழிநடத்தவில்லை. () ‘சாவின் நிழல் சூழ்ந்திருக்கிறது’ - இது போர்ச் சூழலைக் குறிக்கலாம். அல்லது நாடு கடத்தப்பட்டவர்களில் எஞ்சியவர்கள் அனைவரும் வயதானவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் என்பதால், அந்த நாட்டில் இறப்பு ஓர் அன்றாட நிகழ்வாக இருந்தது. () ‘சோகம்’- தங்கள் நாடு மற்றும் உறவுகளை இழந்ததால் அவர்கள் துயரத்தில் இருந்தனர். இறுதியாக, () ‘அடிமை நுகம்’- விடுதலை இல்லாதவர்களாக இருந்தனர். இது அவர்களுக்கு மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும்.

ஆக, தலைமையின்மை, இறப்பு, துயரம், மற்றும் அடிமைத்தனம் என்னும் நான்கு நிலைகளில் அவர்களின் இதயம் வெறுமையாக இருந்தது.

நான்கு நிலைகளில் வெறுமையில் நின்ற மக்களை நிரப்புகின்ற இறைவனின் வாக்குறுதி ஒரு குழந்தையாக வருகின்றது. இந்தக் குழந்தை உடனடிச் சூழலில், ‘எசேக்கியாவையும்’, மெசியா சூழலில்இயேசுவையும்குறிக்கிறது. குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:

() ‘வியத்தகு ஆலோசகர்’ - அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.

() ‘வலிமைமிகு இறைவன்’ - இங்கே இறைவன் என்பதற்குஎலோகிம்அல்லதுயாவேபயன்படுத்தப்படவில்லை. ‘ஏல்என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஏல்என்றால்பெருமான்அல்லதுபெருமகனார்என மொழிபெயர்க்கலாம். இறப்பின் நிழலில் நின்றவர்களுக்குத் தன் வலிமையால் பாதுகாப்பு தரவிருப்பவர்.

() ‘என்றுமுள தந்தை’- எபிரேயத்தில்அவ்என்னும் சொல்தந்தையைகுறிக்கிறது. ‘அவ்என்றால்இல்லத்தின் வலிமைஎன்பது பொருள். ஓர் இல்லத்திற்கு தன் இருப்பால் வலிமை சேர்க்கின்றவர் தந்தை. தந்தையின் இருத்தல் குடும்பத்தில் உள்ள துயரத்தை அகற்றுகிறது. மற்றும்அமைதியின் அரசர்’-அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவித்து, போர்களை வென்று, அமைதியை நிலைநாட்டும் இந்தக் குழந்தை.

இயேசுவின் சமகாலத்தில் இஸ்ரயேல் மக்கள் உரோமையர்களால் ஆட்சி செய்யப்பட்டனர். அவர்களுடைய ஆட்சி பற்றிய குறிப்பை இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் லூக்கா தருகின்றார். இறக்கும் தருவாயில் நின்ற யாயீரின் மகள், இறந்து போன நயீம்   விதவையின் மகன், இலாசர் என இயேசு இறப்பின் பிடியிலிருந்தவர்களுக்கு வாழ்வு தருகின்றார். நோய் மற்றும் அலகையின் கட்டுகளிலிருந்தவர்களை விடுவிக்கின்றார். தன் போதனையால் நல்வழி காட்டுகின்றார். இயேசுவின் மலைப்பொழிவு அவரைவியத்தகு ஆலோசகர்என்றும், இயற்கையின்மேலும் தீமையின்மேலும் அவர் அடைந்த வெற்றி அவரைவலிமை மிகு இறைவன்என்றும், ‘இறப்பை வென்று உயிர்த்து விண்ணேற்றம் அடைந்ததுஅவரைஎன்றுமுள தந்தைஎன்றும், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த பிரிவை அகற்றி, ஒன்றிப்பை உருவாக்கியது அவரைஅமைதியின் அரசர்என்றும் நமக்கு அறிமுகம் செய்கின்றது.

மகிழ்ச்சிக்கான மூன்று காரணங்கள்: () அடிமைத்தனம் ஒழிந்தது. அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கும் நுகம், தடி, கொடுங்கோல் ஒடிக்கப்படுவது மட்டுமல்லாமல், போர்வீரனின் ஆடைகள், காலணிகள் அனைத்தும் நெருப்பிலிட்டு அழிக்கப்படுகின்றன. அடிமைத்தனத்தின் தடயமே இல்லாமல் ஆக்கிவிடுகிறது மெசியாவின் வருகை. () குழந்தை பிறந்துள்ளது. குழந்தை புதிய நம்பிக்கையின் அடையாளம். இந்த குழந்தை ஒருவேளை உடனே வரவிருக்கும் அரசரைக் குறித்தாலும், இந்த குழந்தையைப் பற்றி முன்னுரைத்த அமைதியை எந்த அரசராலும் தரமுடியவில்லை. ஆக, இந்த குழந்தை வரவிருக்கும் மெசியாவைத்தான் குறிக்கமுடியும். () நீதியும், நேர்மையும் அவருடைய ஆட்சியின் அடையாளங்கள். இதுதான் காரிருளில் வாழ்ந்த மக்கள் காணும் பேரொளி. அநீதியும், பொய்மையும் இருளின் காரணிகள். இவற்றிற்கு மாற்றான நீதியும், நேர்மையும் ஒளியின் காரணிகள்.

இவ்வாறாக, மெசியாவின்   வருகை குறித்தும், அந்த வருகை கொணரும் மகிழ்ச்சி குறித்தும் முன்னுரைக்கிறார் எசாயா.

கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளதுஎன்று தொடங்கிகடவுளின் மாட்சி வெளிப்படப்போகிறதுஎன நிறைவு செய்கின்றார் பவுல் (இரண்டாம் வாசகம்). ‘வெளிப்படுத்துதல்என்பது கீழைத் திருச்சபையில் மிக முக்கியமான வார்த்தை. அதாவது, லாஜிக் ரொம்ப சிம்ப்பிள். கடவுளை நாமாகவே கண்டுகொள்ள அல்லது அறிந்துகொள்ள முடியாது. அவராகத்தான் தன்னை வெளிப்படுத்தவேண்டும். இந்த வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: () அவரது பிறப்பில். () அவரது உயிர்ப்பில்.

இந்த இரண்டு வெளிப்படுத்துதல்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்றும் தொடர்ந்து எழுதுகின்றார்: () பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சியளிக்கிறது. () உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இயேசு தன் பிறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் நடுவே செய்தது என்ன? “அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள மக்களாக நம்மையே தூய்மைப்படுத்தினார்.” இதுதான், இயேசுவின் இவ்வுலக வாழ்வின் நோக்கமாக இருந்தது. ‘நெறிகேடுஎன்பதற்கான கிரேக்க வார்த்தைஅனோமியா’ (அதாவது, சட்டம் எதுவும் இல்லாமல், ஏனோ, தானோ வென்றுவாழ்வது). மொத்தத்தில்இயேசுவின் பிறப்பு ஒரு வெளிப்படுத்துதல். அந்த வெளிப்படுத்துதலுக்கு நோக்கம் இருந்தது. அது வெறும் வரலாற்று விபத்தாக நடந்தது அல்ல. ஆக, அந்த நோக்கம் நம் ஒவ்வொருவரிலும் நிறைவேறினால்தான் நாம் இயேசுவின் வெளிப்படுத்துதலை நம் வாழ்வில் கண்டுணரமுடியும்.

இந்த திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: () இயேசுவின் பிறப்பு (2:1-7). () வானதூதர்கள் இடையர்க்கு அறிவித்தலும், அவர்களின் பாடலும் (2:8-14). நற்செய்தி வாசகத்தில், ‘நிரம்பிய கைமற்றும்வெற்றுக் கைஎன்னும் இரு கருத்துருக்களை நம்மால் காணமுடிகிறது. வாசகத்தின் முதல் பகுதியில் பெத்லகேமும் விடுதியும் நிரம்பி வழிகின்றது. ஆனால், வாசகத்தின் இரண்டாம் பகுதியில், நகருக்கு வெளியே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் நடுவில் நிறைய வெற்றிடம் இருக்கின்றது. மெசியாவின் பிறப்பு அங்கே அறிவிக்கப்படுகின்றது. மெசியாவின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்படும் நிகழ்வில் உள்ள சில கருத்துருக்கள் முக்கியமானவை: () ‘இடையர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கின்றனர்’ – தங்களுடைய அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டிருந்தவர்கள் நடுவில் செய்தி அறிவிக்கப்படுகின்றது. () செய்திதிடீரென’ - எதிர்பாராத நேரத்தில், விதத்தில் - வருகின்றது. () ‘ஆண்டவர், மெசியா, மீட்பர்என்னும் மூன்று கிறிஸ்தியல் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் () மெசியா பிறந்திருப்பதற்கான அடையாளங்கள் என்று, ‘குழந்தை,’ ‘துணிகள்,’ மற்றும்தீவனத் தொட்டிஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

சமூகத்தின் விளிம்புநிலையில் நின்ற மக்களைத் தேடி வந்து அவர்களின் உள்ளத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறார் கடவுள். இயேசுவின் பிறப்புஅனைத்து மக்களுக்குமான நற்செய்திஎன்று மொழியப்படுகின்றது.

வெறுமை இறைமையால் நிறைகின்ற விழா கிறிஸ்து பிறப்பு பெருவிழா. இறைவனின் அருள் நம் நடுவே வெளிப்பட்ட இந்த நாளில், நாம் ஒருவர் மற்றவருக்கு அதே அருளை அளிப்பவர்களாகவும், ஒருவர் மற்றவரின் கரங்களை நிரப்புபவர்களாகவும் வாழ இன்று நாம் அழைக்கப்படுகின்றோம்.

வெறுமை என்பது நம் இன்றைய வாழ்வியல் அனுபவமாக இருக்கலாம். ஏதாவது ஒரு வெறுமை அனுபவத்தால் நாம் அலைக்கழிக்கப்படலாம். இருள் என்று நின்றவர்கள் ஒளியைக் கண்டார்கள். அந்த ஒளி என்றும் நம் உள்ளத்தில் ஒளிரட்டும்!