Namvazhvu
குடந்தை ஞானி பஞ்சாபின் தெருக்கூத்து
Tuesday, 11 Jan 2022 08:53 am
Namvazhvu

Namvazhvu

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெராஸ்பூரில் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி காலை நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்க இந்திய பிரதமர் மோடி வருவதாக இருந்தது. பிரதமர் பதிந்தா விமான நிலையத்தில் வந்திறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஃபெராஸ்பூர் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் அன்று காலை வந்திறங்கியதிலிருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது. சிறிது நேரம், அதாவது இருபது நிமிடங்களுக்கும் மேல், விமான நிலையத்தில் காத்திருந்தார். வானிலை சரியாகாததால், பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த பிறகு, சாலை மார்க்கமாகவே இரண்டு மணிநேரம் பயணித்து ஃபெராஸ்பூர் செல்ல முடிவெடுக்கப்பட்டது. அப்படி சாலை மார்க்கமாக சென்றபோது, நடு வழியில் விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி சென்ற வாகனமும் பாதுகாப்பு வாகனங்களும் மேம்பாலம் ஒன்றில், 20 நிமிடங்களுக்கும் மேலாகமேல் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து சரியாகவில்லை. காத்திருந்து காத்திருந்து பார்த்த பிரதமர், பயணத்தைத் தொடரமுடியாமல் சாலை மார்க்கமாகவே விமான நிலையத்துக்கே திரும்பினார்.

என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றிஎன்று பிரதமர் மோடி பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருக்கிறது. ஃபெராஸ்பூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்துக்குக் காத்திருந்த பொதுமக்களும் மழை காரணமாக எழுந்து சென்றுவிட்டனர்.

பாஜகவும் காங்கிரசும் வழக்கம்போல் ஒருவர் மற்றவரைக் குறைசொல்ல ஆரம்பித்துவிட்டனர். மோசமான வானிலை காரணமாக, பிரதமரின் பயணத்தை ரத்து செய்யச் சொன்னோம். மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் 70000 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்த நிலையில் வெறும் 700 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்ததால் பிரதமர் தன்னுடைய பயணத்தை ரத்துச் செய்தார் என்று முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தெரிவித்துள்ளார். பாஜகவும், இது காங்கிரசின் சதி என்றும் பிரதமர் உயிருக்குக்கூட பஞ்சாபில் பாதுகாப்பு இல்லை என்றும் இச்சதியின் பின்னணியில் காலிஸ்தான் அல்லது பாகிஸ்தான் உள்ளதா என்பது போன்ற விவாதங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறது.

இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஆர்எஸ்எஸ்-ன் பந்தயக் குதிரை. எந்த வகையிலெல்லாம் வெற்றி பெற்றுத் தர முடியுமோ அந்த வகையிலெல்லாம் தன் நாக்பூர் தலைமைக்கு வெற்றியைப் பெற்றுத்தரவே அவர் முயற்சிப்பார்.

வழியனுப்ப ஆட்களே இல்லாத நிலையில், விமானப் படிகளில் ஏறி, தன்னைச் சுற்றி வீசும் காற்றுக்கும், தன்னை மையப்படுத்தி பதிவுச் செய்யும் கேமராக்களுக்கும் கையசைப்பார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போதும் அப்படித்தான் செய்வார். கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வண்ண மயில்களுக்கு இரை வைத்து, கேமரா வெளிச்சத்தில் புத்தகங்களைப் புரட்டி போஸ் கொடுப்பார்.

எந்தெந்த வகையிலெல்லாம் தன்னை முன்னிலைப்படுத்த முடியுமோ, அந்த வகையிலெல்லாம் அவர் விளம்பரப்படுத்திக் கொள்வார். இவர் எப்போதும் விளம்பர பிரியர். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்களிலும் வைக்கப்பட்டுள்ள பதாகைகளும் நாம் காசு கொடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் தரப்படும் சான்றிதழில், ஓர் ஓரமாக, ஒய்யாரமாக புன்னகைப் பூத்து நிற்பார். வாரணாசி, காசி விஸ்வநாதர் ஆலய வளாகத் திறப்பின்போது அவர் அணிந்திருந்த பட்டையும் உடுத்தியிருந்த உடையும் கேமரா லென்ஸ்களுக்கே கூசும் அளவுக்கு அமைந்திருந்தது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இவர்தலைமையில் பாஜக போடும் வேஷம், விஷம் நிறைந்தது.

பாராளுமன்றத் தேர்தல் வரும்போது, கார்கில் போர் என்று கதறிய வாஜ்பேய் பாணியில், கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது (பிப்.14, 2019) புல்வாமா தாக்குதலைக் கையிலெடுத்து, இந்தியாவிற்கு ஆபத்து என்று அறிவித்து, தன்னை ஆபத்பாந்தவனாக முன்னிலைப்படுத்தினார்; சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என்று கதறுவார். லடாக்கின் லே பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினரிடையே தள்ளுமுள்ளு என்பது தேர்தல் நேரத்தில் செய்தியாகும். ஆனால் வசதியாக, அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் அத்துமீறலையும் அடுக்குமாடி குடியிருப்பையும் மறந்துவிடுவார்; மறைத்தும் விடுவார். தனக்கு சாதகமானது அனைத்தையும் விளம்பரப்படுத்துவார்; பாதகமானது அனைத்தையும் தன் 56 இஞ்ச் மார்புக்கு பின் உள்ள முதுகில் மறைத்துவிடுவார்.

தேர்தல் என்று வந்துவிட்டால் விமானங்களில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்வார்; நாடாளுமன்றத்தில் இருந்த நேரத்தைவிட, விமானத்தில் இருந்த நேரமும் பறந்த நேரமும்தான் அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாதுகாப்பு கருதி ரோடு ஷோ வேண்டாம் என்று சிறப்பு காவல்படை சொன்னாலும் கேட்க மாட்டார்; தேசப்பற்றைக் காட்ட, சிலைகளில் வாழும் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார். தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, லங்கா கேட் முதல் கங்கா கேட் வரை ஆறு கிலோமீட்டர் தூரம் அவர் செய்த லந்து சொல்லிமாளாது. கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்வைத்து, சிறப்புத் திட்டங்களை ஆரம்பித்து வைத்து, தேர்தல் யுத்தம் தொடங்கி வைத்தவர், அடுத்த இலக்காக இந்த மாதம், பஞ்சாபைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

மழைக்காலம்; உங்கள் பயணத்தை இரத்துச் செய்யுங்கள் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்தும் பிரதம அலுவலகம் கண்டுகொள்ளவில்லை; வானிலை மோசமாக இருக்கிறது என்றாலும் கேட்கவில்லை. ஒரு பிரதமர் இரண்டு மணி நேரம் சாலை மார்க்கமாக செல்ல வேண்டியதன் அவசியம் என்ன? எழுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பலி கொடுத்து, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் போராட்டத்தில் வெற்றிப்பெற்று, போராடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் (பெரும்பாலும் பாஞ்சாபியர்கள்) இல்லந்திரும்பி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஓராண்டு வரை அவர்களைப் போராட வைத்த பிரதமர் ஏன் சாலை மார்க்கமாக செல்ல வேண்டும்? பஞ்சாப் மாநிலம் முழுவதும் பாஜகவுக்கும் பாஜக தலைவர்களுக்கு எதிரான மனநிலை வலுவாக உள்ள நிலையில், பாஜகவினர் எவரும் எத்தெருமுனையிலும் பிரச்சாரம் செல்ல முடியாத சூழல் உள்ள நிலையில், தெரு வழியாக, சாலை வழியாக இரண்டு மணி நேரம் பிரதமர் ஏன் செல்ல வேண்டும்? ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

மக்களிடையே அனுதாப அலையை ஏற்படுத்தி, திட்டமிட்டே பாஜகவினர் இப்படியொரு நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர் என்று காங்கிரசார் சொல்லும் குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை. பஞ்சாப் காவல்துறை சாலை மார்க்கமாக செல்ல அனுமதித்திருந்தாலும்கூட, விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டம் குறித்து மத்திய உளவுத்துறை உரிய தகவல் சேகரிக்காதது எப்படி நியாயமாகும்?.

தமிழகத்தில் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும்தான்கோ பேக் மோடிடிரெண்டாகும். சமூக வலைதளத்தில் மட்டுமே இருந்து வந்தகோ பேக் மோடி’, தற்போது சமூகத்தி -லிருந்துகோ பேக் மோடிஎன்று டிரெண்டாகி, நிஜத்தில், சாலையில், விமானத்தில், ‘கோ பேக் மோடிஎன்று ஆகியிருக்கிறது. தங்களைச் சந்திக்காத பிரதமர் மோடியை, விவசாயிகள் சந்திக்க விரும்பவில்லை போலும். எது எப்படியோ?! தமிழர்கள் சொன்னார்கள். பஞ்சாபியர்கள் செய்து முடித்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பாஜகவை இந்தியாவிலிருந்து கோ பேக் என்று சொல்வதற்கான நேரம் வந்துவிட்டதோ, என்ன?! பஞ்சாபில் அடிக்கப்பட்ட இந்த மணி இந்தியாவெங்கும் எதிரொலிக்கட்டும்.