Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் சிறியோரின் பாதுகாப்பு
Saturday, 06 Apr 2019 10:16 am
Namvazhvu

Namvazhvu

சிறியோரின் பாதுகாப்பு -

திருத்தந்தையின்  சுய விருப்ப சட்டத் தொகுப்பாணை 


சிறியோரையும், பல்வேறு வழிகளில் நலிவுற்றவர்களையும் காப்பதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் ‘தன் சுய விருப்பத்தின் அடிப்படை’என்னும்  சட்டத் தொகுப்பு ஒன்றை மார்ச் 29 ஆம் தேதி வெளியிட்டார். 
“இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” (மத்தேயு 18:5) என்ற சொற்களை இத்தொகுப்பின் ஆரம்பத்தில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ், சிறியோர் மற்றும் நலிவுற்றவர்களை காப்பது, நற்செய்தியின் முக்கியமான ஒரு செய்தி என்றும், இதனை உலகெங்கும் பரப்புவது, திருஅவைக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்றும் கூறியுள்ளார்.
இந்த முயற்சியில் தொடர்ச்சியான, ஆழமான மனமாற்றம் எப்போதும் தேவை என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியை, நம்பத்தகுந்த வகையில் அறிவிப்பதற்கு, தனிப்பட்டவரின் புனிதமும், நன்னெறியின் அர்ப்பணமும் தேவை என்பதை தன் சட்டத்தொகுப்பின் துவக்கத்தில் எடுத்துரைத்துள்ளார்.
வத்திக்கான் நாட்டிலும், உரோமையிலும், உலகின் பல நாடுகளிலும் இயங்கிவரும் திருப்பீடத்தின் உயர் மட்ட அலுவலகங்கள் அனைத்திலும், தான் வெளியிட்டுள்ள சட்டங்கள், ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்பதை திருத்தந்தையின் அறிக்கை கூறியுள்ளது.
சிறியோருக்கும், வலுவற்றோருக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களில் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பது, 2013ம் ஆண்டு ஜூலை மாதம், தான் வெளியிட்ட சட்டத்தொகுப்பிலும், தற்போது வெளியிட்டுள்ள சட்டத்தொகுப்பிலும், கூறப்பட்டுள்ளதென திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய குற்றங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டிய வழிமுறைகளையும், இதனால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படவேண்டிய உதவிகளையும் திருத்தந்தை தன் சட்டத்தொகுப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், திருப்பீடத்தின் உயர் மட்ட அளவில் பணியாற்ற தெரிவு செய்யப்படும் வழிமுறைகளில் மிக கவனமான கண்காணிப்பு தேவை என்பதையும், குறிப்பாக, தெரிவு செய்யப்படவிருப்பவர் சிறியோருடனும், வலுவற்றோருடனும் எவ்வகையில் பழகினார் என்பது குறித்த பின்னணி ஆய்வு மிகவும் அவசியம் என்பதையும், திருத்தந்தை தன் சுய விருப்பச் சட்டத் தொகுப்பில் கூறியுள்ளார்.

திருத்தூது மன்னிப்பு அவையினரைச் சந்தித்த திருத்தந்தை
இறைவனின் மன்னிப்பை அடைய விழையும் விசுவாசிகள், மீட்பை சுவைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ’இரக்கத்தின் அருள்பணி’யை மேற்கொள்வது, திருத்தூது மன்னிப்பு அவையின் முக்கிய நோக்கமாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், தன்னைச் சந்திக்க வந்திருந்த இந்த அவையின் உறுப்பினர்களிடம் கூறினார்.
திருத்தூது மன்னிப்பு அவை, உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த முப்பதாவது கல்வித் தொடரை நிறைவு செய்திருந்த 700க்கும் மேற்பட்ட மாணவர்களையும், இத்தொடரை வழிநடத்தியவர்களையும் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு அவை நீண்ட காலமாக திருத்தந்தையருக்கு உதவி வந்துள்ளதைப் பாராட்டிப் பேசினார்.
இரக்கம், மன்னிப்பு போன்ற மனிதத் தேவைகளை உணர்வதற்கும், கடைபிடிப்பதற்கும் நேரமின்றி, மிக வேகமாகச் செல்லும் இவ்வுலகில், திருத்தூது மன்னிப்பு அவையின் பணிகள் இன்னும் உயர்ந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நான்காவது அருளடையாளமான ஒப்புரவு அருளடையாளம், அருள்பணியாளர்கள் அனைவரையும் தூய்மைப்படுத்தும் அருளடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ், மன்னிப்பு பெற்ற அருள்பணியாளர், மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்கும் பணியாளராக மாறுகிறார் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே, கல்லான இதயத்தைக் களைந்துவிட்டு, சதையாலான இதயத்தை பெறுகிறோம் (எசே. 11,19) என்றும், மனம் திருந்திய மகனாக, தந்தையின் இல்லம் திரும்புகிறோம் (லூக்கா 15,11-32) என்றும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகில் ஒப்புரவு அருளடையாளம் சரியான வழிகளில் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தாலும், ஒப்புரவினால் உருவாகும் நன்மைகளை, ஓர் அருளடையாளம் என்ற முறையிலும், சட்டங்கள் வழியிலும் இத்தனை நூற்றாண்டுகள் காத்து வந்திருப்பது, திருஅவையின் ஞானத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை தன் உரையில் தெளிவுபடுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருளடையாளத்தைத் தேடி வரும் விசுவாசிகளுக்கு தாராள மனதுடன் செவிமடுத்து, அவர்களை, புனிதத்தின் பாதையில் வழிநடத்துவது, அனைத்து அருள்பணியாளர்களின் மிக முக்கியமான கடமை என்பதை, தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, இந்தப் புனிதப் பணியின் வழியே ஒவ்வொருவரும் தங்களையே புனிதமாக்கவும், பிறரைப் புனிதமாக்கவும் இறைவன் துணைபுரியவேண்டும் என்று தன் உரையை நிறைவு செய்தார்.