Namvazhvu
தேடுங்கள் கிடைக்கும் – 24 ஆண்களை விட...
Monday, 31 Jan 2022 08:52 am
Namvazhvu

Namvazhvu

சத்யா: ஆண்களை விட பெண்கள்தான் ரொம்ப நல்லவங்களா இருக்கணும்னு சுந்தர் சொல்றான். நல்ல மனுஷங்களா இருக்கிறதுல என்ன பாலியல் வேறுபாடு? ஆண்கள், பெண்கள் எல்லாருமே நல்லவங்களாத்தான் இருக்கணும்னு நான் சொல்றேன்.

சுந்தர்: ஆண்களை விட பெண்கள் நல்லவங்களா இருக்கணும்னு ஏன் சொல்றேன்னா, பெண்கள் சொன்னால்தான் பசங்க கேட்கிறாங்க. என் கிளாஸ்ல ஒருத்தன் இருக்கான். நல்லா விளைஞ்சு இருக்கிற வயல் மாதிரி தலைமுடியை வெட்டிட்டு வருவான். வானத்தைப் பார்த்தபடி முடியெல்லாம் நிமிர்ந்து நிற்கும். வாத்தியாருங்க சொன்னாங்க, கேட்கல. அவனோட அப்பா பலமுறை சொன்னாரு, அவன் கேட்கலை. ரெண்டு வாரமா ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறான். அவ சொன்னதும் போயி அடுத்த நாளே முடிய வெட்டிட்டு வந்துட்டான். அதனால...

சத்யா: அதனால பெண்கள் நல்லவங்களா இருந்து அவங்க நீதி, நியாயத்தின் பக்கம் நிற்கிறவங்களா இருந்து, அதைச் சொன்னாங்கன்னா ஆம்பள பசங்க கேப்பாங்க. பொம்பளைங்களே மோசமான ஆட்களா இருந்து, அநீதி, அநியாயம் அக்கிரமங்களுக்குத் துணை போகிற ஆட்களாக இருந்தால் அவங்களோட ஆண்கள் எப்படிப்பட்டவங்களா இருப்பாங்கன்னு புரிஞ்சுக்கலாம். இதைத் தானே சொல்ல வர்ற?

ஆசான்: எழுத்தாளர் ஜெயமோகனை உங்களுக்குத் தெரியுமல்லவா?

சத்யா: தெரியும்.

ஆசான்: தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். ‘அறம்என்ற தலைப்பில் அவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை அனைத்தும் உண்மை மனிதர்களின் கதைகள். அனைத்தும்அறம்என்ற மையப்புள்ளியைச் சுற்றி வருபவை. அதில் முதல் கதையின் தலைப்பேஅறம்தான்.

பெரியவர் என்று மட்டுமே அடையாளம் காட்டப்படுகிற வயதான ஒரு எழுத்தாளரைக் காணச் செல்கிறார் ஜெயமோகன். அந்த எழுத்தாளர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை விவரமாகச் சொல்லுகிறார்.

ஐம்பதுகளில் நடந்த ஒரு நிகழ்ச்சி அது. அப்பொழுதுதான் நூல் பதிப்புத் தொழில் தொடங்கி வளர்ந்து கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஐம்பதுகளில் தான் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எல்லாம் வந்தன. பர்மாவில் சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்பி இருந்த சில செட்டியார்கள் நூல் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பதிப்பாளர் திருச்சியிலே இருந்தார். பணம் சேர்ப்பதைத் தவிர வேறு நோக்கம் எதுவும் அவருக்கு இல்லை. அவரை இந்த எழுத்தாளர் பார்க்கப் போன போது, “என்னையா, புக்கு எழுதுறீரா? பக்கத்துக்கு இவ்வளவுன்னு கொடுத்துடுவோம்என்றார். இன்று இருப்பது போல விற்பனையாகும் பிரதிகளுக்கு ஏற்ப எழுத்தாளருக்குக் கொடுக்கப்படும்ராயல்டிஎன்பதெல்லாம் அக்காலத்தில் இல்லை. எழுதித் தரும் பக்கங்களுக்கு ஏற்ப பணம் என்று முதலில் பேசினாலும் அதை இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.

எழுத்தாளர் ஏதாவது எழுதி எடுத்து வரும் போது மனதில் தோன்றியபடி பத்து, இருபது என்று ஏதோ கொடுப்பார்கள். அதுவும் சேர்ந்தாற் போல ஒரே நாளில் தரமாட்டார்கள். ஒரு ரூபாய், எட்டணா என்று கொடுத்துவிட்டு அதை பேரேட்டில் எழுதி வைத்துக் கொள்வார்கள். ‘இதற்கு மேல் இந்த என் படைப்பின் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லைஎன்று எழுதிக் கையெழுத்திட்டுத் தர வேண்டும். மீண்டும், மீண்டும் பதிப்பித்து வருடக்கணக்காக ஒரு நூலை விற்றால் கூட, அதனைப் படைத்த எழுத்தாளருக்கு எதுவும் தராத அநியாயம் அந்தக் காலத்தில் இருந்தது.

வயது முதிர்ந்த அந்த முதுபெரும் எழுத்தாளர், அந்தக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்கச் சொன்னார். பள்ளிகளுக்கான நூல்கள் அதிகம் விற்பனையானதால், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், அசோகர், அக்பர் போன்ற வரலாற்று மாமனிதர்கள் பற்றி நூறு நூல்கள் வெளியிட முடிவு செய்த இந்தச் செட்டியார், இந்த நூறில் எத்தனை நூல்கள் இவரால் எழுத முடியும் என்று கேட்டார். வறுமையில் வாடிய எழுத்தாளர் தன் குடும்பத்தின் நிலையை எண்ணி, தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து நூறு நூல்களையும் தானே எழுதித் தருவதாகச் சொன்னார். ஒரு நூலுக்கு 50 ரூபாய் சன்மானம். நூறு நூல்களையும் எழுதினால் 5,000 ரூபாய்.‌ ஓராண்டிலேயே நூறு நூல்களையும் எழுதித் தர முடியுமா என்று கேட்டார் செட்டியார். முடியும் என்றார் எழுத்தாளர்.

ஒரு வருடத்தில் 100 நூல்கள் எழுதித் தர வேண்டுமென்றால், ஏறத்தாழ மூன்று நாட்களில் ஒரு நூல் எழுதி முடிக்க வேண்டும். கை வலி, வீக்கத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் எழுதினார். முடியாத போது இவர் சொல்லச் சொல்ல, மகனை, மகளை எழுத வைத்து, மூன்று நாட்களுக்குள் ஒரு நூல் என்று எழுதிக் கொண்டு போய், செட்டியாரிடம் கொடுத்துவிடுவார். பேசி ஒத்துக் கொண்ட 5,000 ரூபாயில் அவ்வப்போது தேவைக்கு வாங்கிய பணம் போக, மீதி 3,000 ரூபாய் செட்டியாரிடமே இருந்தது.

இதை நம்பி தன் மகளுக்குக் கல்யாணம் பேசி முடிவு செய்து, தாம்பூலத்துடன் போய் செட்டியார் முன்னே நின்றார். தனக்குத் தர வேண்டிய 3,000 ரூபாயை நினைவுபடுத்தியதும்,

மூவாயிரமா? என்ன உளறுறீர்? புக்கு எழுதறதுக்கு மூவாயிரமா?” என்றார் செட்டியார். முன்பே பேசி ஒத்துக்கொண்டது தான் என்றாலும் 3,000 ரூபாயை ஒரு எழுத்தாளருக்குத் தருவதை செட்டியாரால் நினைத்தே பார்க்க முடியவில்லை.

நூல்கள் அமோகமாய் விற்றபடியால் முதலில் எழுதிய நூல்களை திரும்பத் திரும்ப அச்சிட்டு விற்றுச் சேர்த்த பணத்தில் செட்டியார் திருச்சியிலே மாடி வீடு கட்டிவிட்டார். ஊரில் நிலபுலம் வாங்கிவிட்டார். ஆனால், அத்தனை வருமானத்திற்கும் காரணமான எழுத்தாளருக்கு பேசிய பணத்தை - அதுவும் அவர் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துவிட்ட அந்த இக்கட்டான தருணத்தில் கூட - தருவதற்கு செட்டியாருக்கு மனம் வரவில்லை.

சுந்தர்: எவ்வளவு பெரிய அநியாயம்? சும்மாவா இருந்தார் எழுத்தாளர்?

ஆசான்:

மூவாயிரம்னு பேசவே படாது. எழுநூறு தர்றேன்என்றார் செட்டியார். ‘சாமி, வயித்தில அடிக்காதீங்கன்னு கெஞ்சினேன். சட்டுனு கண்ணுல தண்ணி கொட்ட ஆரம்பிச்சது. ‘என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்துடாதீங்க முதலாளி!”ன்னு சொல்லி மேஜைக்கு அடியில குனிஞ்சு செட்டியார் காலைப் புடிச்சுண்டேன். காலை உதறிட்டு எழுந்திரிச்சு காட்டுக் கத்தலா கத்தினார். “நீ என்னய்யா எழுதுனே? எழுதுறது என்ன பெரிய காரியமா? இத்தனை நாளும் உன் வீட்டில் அடுப்பு எரிஞ்சது என் காசுல தான் தெரியுமா? நன்னி கெட்ட நாயே!”ன்னு கத்தினார்.”

எழுத்தாளரின் தம்பி உட்பட அங்கு சேர்ந்த ஆட்கள் நடந்ததெல்லாம் தெரியாமல் இவரைத் திட்ட கடும் கோபம் கொண்ட எழுத்தாளர், “என்னை ஏமாத்தி சொத்து சேக்கிற நீ உருப்பட மாட்டேஎன்று கத்தினார். “என் உப்பைத் தின்னுட்டு எனக்கே சாபம் போடுறியா? போடான்னு செட்டியார் கத்தினார்.

தெருவில் நின்ற எழுத்தாளருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பணம் இன்றி வீட்டுக்கு எப்படித் திரும்பப் போவது? திருமணத்திற்கு உடனே பணம் வேண்டும். நகை, புடவை எடுக்க வேண்டும். பந்தலுக்கு, விருந்துக்கு முன் பணம் தர வேண்டும். கடை வாசலிலேயே நின்றார். இருட்டியதும் மறுபடியும் செட்டியார் காலில் விழுந்து அழுதார். செட்டியார் இவரைப் பிடித்து வெளியே தள்ளினார்.

கடையைப் பூட்டிய பிறகும் இரவு முழுவதும் எழுத்தாளர் அங்கேயே நின்றார். காலையில் கடை திறக்க வந்த செட்டியார் இவரைப் பார்த்தார். அழுது கொண்டே கைகூப்பிய எழுத்தாளரால் எதுவும் பேச முடியவில்லை. கடும் சினம் கொண்ட செட்டியார் மிகவும் இழிவாக அவரைத் திட்டத் தொடங்கினார். அழுது கொண்டே இவர், “எனக்கு கதி இல்ல. நான் போய் சாகத்தான் வேணும்னு சொல்ல, “போய் சாவுடா, நாயே! இந்தா விஷத்தை வாங்கன்னு ஒரு ரூபாய் நாணயத்தை அவர் முகத்தில் எறிந்தார் செட்டியார்.

பிரமை பிடித்தாற் போல் அமர்ந்திருந்த எழுத்தாளர் வேகமாக நடந்து செட்டியாரின் வீட்டுக்குச் சென்றார். செட்டியாரின் மனைவி பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு இட்லி ஊட்டிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் நடந்ததை எல்லாம் சொன்னார். சொல்லச் சொல்ல ஒரு வெறி, வேகம் வந்து, குரல் மேலேறி, “நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். என் வயித்துல அடிச்சா நீயும் உன் பிள்ளை குட்டிகளும் வாழ்ந்துடுமா?” என்று சொல்லி பேனாவை எடுத்து ஒரு வெண்பாவை எழுதி, அவள் தட்டில் இருந்த இட்லியை எடுத்துப் பூசி, வீட்டுக் கதவில் ஒட்டி விட்டு வந்து விட்டார். ‘செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுக வென்றறம்என்று முடிந்தது வெண்பா.

மனம் நொந்து தளர்ந்து போன எழுத்தாளர் கையில் கட்டியிருந்த பழைய கைக்கடிகாரத்தை விற்று, குடித்து விட்டு வீட்டிற்கு போய் சவம் போலக் கிடந்தார் நினைவே இல்லாமல். கிணற்றில் குதிக்கப் போன எழுத்தாளரின் மனைவியை மற்றவர்கள் தடுத்துவிட்டனர். எழுத்தாளர் போன பிறகு செட்டியாரின் வீட்டில் இருந்த ஆச்சி...

சுந்தர்: ஆச்சின்னா?

சத்யா: செட்டியாரோட மனைவி.

ஆசான்: ஆச்சி அப்படியே போட்டது போட்டபடி விரிச்ச தலையும் கலைஞ்ச சேலையுமா எழுந்து போய், செட்டியாரின் கடைக்கு முன்னே நின்று, “எழுத்தாளருக்குச் சேர வேண்டிய பணத்தை மிச்சம் மீதி எதுவும் இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டும்என்றார். செட்டியார் நடுங்கிப் போய்கொடுத்துடுறேன். சத்தியமா நாளைக்குள்ள கொடுத்துடுறேன்என்று சொல்ல, ஆச்சிஇன்னைக்கே கொடு. இப்பவே கொடு. நீ கொடுத்த பின்னாடி நான் எந்திரிக்கிறேன்என்று சொல்லி, தீயாய் எரியும் தார் ரோட்டில் உட்கார்ந்துவிட்டார். எழுந்து ஓடிய செட்டியார் வங்கி, நண்பர்கள், தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு பணம் திரட்டி, எழுத்தாளரின் வீட்டுக்கு டாக்சியில் வந்து எழுத்தாளரின் மனைவியின் காலில் பணத்தைக் கொட்டி, “என் குடும்பத்தை அழிச்சிராதேன்னு உன் புருஷன் கிட்ட சொல்லு தாயி. அவன் பணம் முச்சூடும் வட்டியோடு இந்தா இருக்குன்னு சொல்லிவிட்டு, ஓடி தார்ச்சாலையில் தவமிருந்த தன் மனைவியின் முன் நின்று, “என் குலதெய்வமே, எந்திரி. நான் செய்ய வேண்டியதைச் செஞ்சுட்டேன், தாயிஎன்று கதறினார்.

எழுத்தாளர் மகளின் திருமணம் சிறப்பாய் நடந்தது. செட்டியார் ஒரு பவுன் மோதிரம் கொடுத்தனுப்பியிருந்தார். அதன்பின் ஆச்சி, எழுத்தாளரை வீட்டுக்கு அழைத்து, வெள்ளித் தட்டில் உணவு அளித்து, பொன் நாணயம் மூன்றும், 500 ரூபாய் பணமும் கொடுத்து, தங்கள் குலத்தை வாழ்த்திப் பாட வேண்டும் என்று கேட்க, இவரும் எழுதித் தந்தார்.

சத்யா: ஒரு பெண்தான் அறத்தை நிலைநாட்டி இருக்கா.

சுந்தர்: இப்ப புரியுதா நான் சொன்னது? தன் கணவன் செஞ்சது பெரிய அநியாயம்ன்றதைத் தெளிவா உணர்ந்து, எழுத்தாளருக்கு நியாயம் கிடைக்க அவள் எடுத்த முயற்சியினால் தான் ரெண்டு குடும்பமும் பிழைச்சது. அவளுக்கு அந்த அற உணர்வு இல்லைன்னா...

ஆசான்: ஒரு சமுதாயத்தின் தரத்தைக் கணிக்க வேண்டும் என்றால், அந்தச் சமுதாயத்துப் பெண்களின் தரத்தை, அவர்களின் விழுமியங்களை, அவர்களின் அற உணர்வைக் கணித்தால் போதும். காதலி, மனைவி, தாய், பாட்டி என்று பல நிலைகளில் அவளின் எண்ணங்களும் பேச்சும் செயல்பாடும் குடும்பம் முழுவதையும் பாதிக்க வல்லவை. அறவுணர்வும் விழுமியங்களும் கொண்ட பெண்கள் - நீதி, நியாயத்தை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் பெண்கள் - அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்தப் பெண்கள் வாழும் குடும்பங்கள் மட்டுமல்ல; அவர்களின் சமுதாயமும் தழைக்கும். அதேபோல அவர்கள் ஆளும் நாடுகளும் தழைத்தோங்கும்.

சத்யா: நியூசிலாந்து மாதிரி.