Namvazhvu
அருள்பணி. P.  ஜான் பால் ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு (எசா 6:1-2, 3-8, 1கொரி 15: 1-11, லூக் 5: 1-11)
Monday, 31 Jan 2022 09:08 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

மனிதர்களாகிய நாம் அசுத்தமானவர்கள். எனவே, தூய்மையே உருவான இறைவனைக் காணக் கூடாது. அவரது குரலைக் கேட்கக்கூடாது. அப்படி மீறினால் இறந்து போவோம் என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை. ஆனால், தந்தை கடவுள், நீங்கள் பாவிகளாக இருந்தாலும், என் மக்கள் என்பதை தன் அன்பினாலும், இரக்கத்தினாலும் இஸ்ரயேல் மக்களுக்கு அடிக்கடி வெளிப்படுத்தினார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, “ஐயோ, நான் அழிந்தேன். தூய்மையற்ற உதடுகள் கொண்ட நான் தூய்மையான கடவுளை கண்டேன்” என்று அலறுகிறார். ஆனால், கடவுளோ அவரது நாவைத் தூய்மைப்படுத்தி, தன் பணியை செய்ய அவரை இறைவாக்கினராக அனுப்பி வைக்கிறார். இரண்டாம் வாசகத்தில், தன்னைப் பின்பற்றிய மக்களை துன்புறுத்தி கொன்றொழித்த சவுலை, ஆண்டவர் இயேசு, தூய பவுலாக மாற்றி, தன் பணியை செய்ய அனுப்பிவைக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசுவின் அற்புதத்தைக் கண்ட சீமோன் பேதுரு, அவர் கால்களில் விழுந்து, “ஆண்டவரே நான் பாவி, என்னை விட்டுப் போய்விடும்” என்று கூறுகிறார். ஆனால், ஆண்டவரோ “அஞ்சாதே இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று தன் பணியை செய்ய அவரை திருத்தூதராக மாற்றுகிறார். நாம் பாவம் செய்கின்றபோது, இறைவனின் உறவிலிருந்து பிரிந்து போகிறோம். இருப்பினும், நாம் பாவிகள் என்றுணர்கின்றபோது, இறைவன் நம் பாவங்களை மன்னித்து, நம்மையும் இறைவாக்கினர்களாக, திருத்தூதர்களாக அவரது பணியை செய்ய நமக்கு அருள் புரிகிறார் என்பதை உணர்ந்தவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட நான், கடவுளைக் கண்டுவிட்டேன். பாவியான எனக்கு கண்டிப்பாக அழிவு உண்டு என்று நினைத்து கலங்கிய எசாயாவை, இறைவன் தூய்மைப்படுத்தி தன் மக்களுக்கு தன் பணியை செய்ய இறைவாக்கினராக அனுப்பி வைக்கிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தை கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நான் கடவுளின் திரு அவையை துன்புறுத்தி, ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக செயல்பட்டாலும், அவர் எனக்கு தோன்றி, எனது பாவங்களை மன்னித்து, அவரது அருளை அளித்தார். அவரது அருளின் வல்லமையாலே நான் இவ்வாறு பாடுபட்டு உழைக்கிறேன் என்று கூறும் தூய பவுலடியாரின் வார்த்தைகளை இந்த இரண்டாம் வாசகத்தில் கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. வல்லமையுள்ள தந்தையே! புனிதர்களும் பாவிகளும் ஒருங்கிணைந்து வாழும் உம் திரு அவையையும், திருபணியாளர்களையும் நிறைவாக ஆசீர்வதித்து, உமது பணியை குறைவு படாமல் நிறைவாக செய்து, அனைவருமே புனிதமிக்க மக்களாக மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. வழிநடத்தும் தந்தையே! எம் இந்தியத் திருநாட்டை ஆளும் தலைவர்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை பிரித்து வன்முறைக்கு ஆளாக்காமல், எல்லா மதங்களையும், மனிதர்களையும் மதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இரக்கமுள்ள தந்தையே! நாங்கள் பாவிகள் என்பதை மறந்தும், மறைத்தும் வாழ்கிறோம். எங்களின் ஆணவம் அழியப்பெற்று, உம் அன்பையும், மன்னிப்பையும் பெறுவதற்கு தகுதியானவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் அன்புத் தந்தையே! நீர் தந்த இந்த வாழ்வை வாழ்வதற்கு செல்வங்கள் தான் முக்கியம் என்று அவற்றைப் பற்றிக் கொண்டு வாழாமல், நீர் தந்துள்ள மனித உறவுகள் தான் முக்கியம் என்றுணர்ந்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் பரமதந்தையே! உம் பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும், எங்கள் வார்த்தையால், வாழ்வால் உம் பணியை இவ்வுலகில் செய்து, உமது இறையாட்சிக்கு ஏற்றவர்களாக நாங்கள் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.