Namvazhvu
புதுப்பிக்கப்பட்டு, திருப்பீடத் தூதரால் புனிதப்படுத்தப்பட்டது சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை திருத்தலம்
Tuesday, 08 Feb 2022 09:50 am
Namvazhvu

Namvazhvu

125 வது ஆண்டையொட்டி பிரமாண்டமான முறையில், பெரும் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்ட சேத்துபட்டு தூய லூர்து அன்னை திருத்தலத்தின் அழகிய ஆலயத்தை, திருத்தந்தையின் இந்தியத் திருத்தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ  ஜிர்ரெல்லி அவர்கள் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி திறந்து வைத்து, திருப்பீடத்தைப் புனிதப்படுத்தி, இறைமக்களுக்கும் வேலூர் மறைமாவட்டத்திற்கும் அர்ப்பணித்தார். ஆயிரக்கணக்கான மக்களும் நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களும் அணி திரள, சேத்துப்பட்டு நகரமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. திருத்தந்தையின் திருத்தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி அவர்களுக்கும், சென்னை- மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களுக்கும், வேலூர் மறைமாவட்ட நிர்வாகி பேரருள்திரு.ஐ. ஜான் ராபர்ட் அவர்களுக்கும், செங்கை ஆயர் மேதகு நீதிநாதன், கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ், தூத்துக்குடி ஆயர் மேதகு ஸ்டீபன், சேலம் ஆயர் மேதகு இராயப்பன், பணிநிறைவுப்பெற்ற ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ், பாண்டி- கடலூர் உயர்மறைமாவட்ட முன்னாள் முதன்மைக்குரு பேரருள்திரு.அருளானந்தம் ஆகியோருக்கும் மேள தாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.

வரவேற்பு நடனத்திற்குப் பிறகு, விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வேலூர் மறைமாவட்ட நிர்வாகி அருள்முனைவர். ஜான் ராபர்ட் அவர்கள் அன்பொழுக வரவேற்றார். விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி திருத்தல அதிபர் பேரருள்திரு. விக்டர் இன்பராஜ் அவர்களும் பங்குப் பேரவை உறுப்பினர்களும் மகிழ்ந்தனர். திருத்தலத்தின் சார்பில் ஜூபிலி விழா நினைவு மலரும், இன்னிசைப்பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட்டது. ‘நம் வாழ்வு வெளியீடு’ சார்பில் ‘நம்ம போப்’, ‘மக்கள் போப்’, ‘ஐரோப்பிய கிறித்துவ சமயப்பணிகள்’, ‘அயலகக் கிறித்துவ தமிழ்ப்பணிகள்’, ‘பொதுவெளி இறையியல்’, ‘மோட்சம் இருப்பது உண்மை-நரகம் இருப்பதும் உண்மை’ ஆகிய ஆறு நூல்களையும் திருத்தந்தையின் இந்தியத் தூதர் மேதகு லியோபோல்டோ அவர்கள், நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் முன்னிலையில் வெளியிட, அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களாகிய ஆயர் பெருமக்கள் முதல் பிரதியை பெற்று மகிழ்ந்தனர்.  துணை ஆசிரியர் அருள்பணி. ஜான்பால் அவர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வைச் சிறப்பாக தொகுத்தளித்தார்.

அதன் பின்னர், மேள தாளங்கள் முழங்கி, வண்ண வான வேடிக்கைகள் விண் அதிர, மக்களின் பக்தி ஆரவாரத்திற்கிடையே, புதிதாகக் கட்டமைக்கப்பட்ட அழகிய கொடிமரம் மேதகு பேராயர் லியோபோல்டோ அவர்களால் புனிதம் செய்யப்பட்டு, அன்னையின் கீதம் முழங்க, லூர்து அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட வண்ணக் கொடி வானுயர கம்பத்தில் ஏற்றப்பட்டது, தொடர்ந்து, திருத்தந்தையின் திருத்தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ அவர்கள் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தைப் புனிதப்படுத்தி, அதன் பெருங்கதவுகளைத் திறந்து திருப்பலி பீடம் நோக்கி பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், இறைமக்கள் புடைசூழ சென்று திருப்பலியைத் தொடங்கினார். ஒவ்வொரு திருச்சடங்கிற்கும் உரிய விளக்கமும் முன்னுரையும் கொடுக்கப்பட்டது. இறைவார்த்தைக்கான திருப்பீட மேடை புனிதம் செய்யப்பட்டு, இறைவார்த்தை வாசிக்கப்பட்டது. சென்னை- மயிலை பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் ஆழமான கருத்துகள் நிறைந்த, கருத்துச் செறிவுமிக்க மறையுரையை திருத்தலத்தை மையப்படுத்தி வழங்கினார். அதன் பின்னர், புனித பியோவின் திருப்பண்டத்தைப் பதித்து, திருப்பீடத்தை, கிறிஸ்மா தைலம் பூசி, திருப்பீடத் தூதர் மேதகு லியோபோல்டோ அவர்கள் அர்ச்சித்தார். பாஸ்கா திரி ஏற்றப்பட்டு, ஆலயத்தின் திருத்தூண்கள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. நற்கருணை திருவிருந்துக்கு பிறகு, மிக அழகான முறையில், ஆலயத்திற்குள் ஓர் ஆலயமாக, லூர்து அன்னையின் திருச்சுருபம் தாங்கி, பிரமாண்டமாக உள்ள திருப்பீட மேடையில், மையமாக அமைக்கப்பட்டிருந்த நற்கருணை பேழையை புனிதம் செய்து, நற்கருணைப் பேழைக்குள் நற்கருணை ஆண்டவர் வைக்கப்பட்டார். இறுதியில் திருப்பீடத்தூதர் மேதகு பேராயர் லியோபோல்டோ அவர்கள் இந்த பிரமாண்டமான இவ்வாலயத்தைக் கட்டியவரும் பாரிஸ் வேதபோதக சபையின் பணியாளருமான பேரருள்திரு. தாhரஸ் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து, அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.

மறைந்த மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த உழவாரப் பணியை, திருத்தல அதிபரும் பங்குத்தந்தையும் வட்டார முதன்மைக்குருவுமான மேதகு விக்டர் இன்பராஜ் அவர்கள், முழு மூச்சோடும் அர்ப்பண உணர்வோடும் ஈடுபட்டு, சற்றும் சோராமல், பெரும் பொருட்செலவில் இறைமக்கள் மற்றும் உபகாரிகளின் பொருளுதவியுடன் செவ்வனே செய்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார். உதவிப் பங்குத்தந்தையர் லாரன்ஸ் பயஸ், சேகர் அவர்களுடன் புனித அன்னாள், புனித தோமையார் மருத்துவமனை, அன்சால்டோ அருள்சகோதரிகள், வேதியர், பங்குப் பேரவையினரும் தோள்கொடுத்து இப்பெரும் நிகழ்விற்கு உதவினர். இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தல அதிபர் பேரருள்திரு. விக்டர் இன்பராஜ் அவர்கள் செவ்வனே செய்திருந்தார்.