வரலாற்றில்...
சமய (மத, வேத கலாபனை என்பது, எந்த சமயத்திற்கும் புதிதல்ல; எல்லா சமயங்களும் பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு இடங்களில் துன்புறுத்தலை சந்தித்து வந்திருக்கின்றன; சந்தித்தும் வருகின்றன.
பொதுவாக, இப்படிப்பட்ட மோதல்கள் மதங்களுக்கு இடையே நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டாலும், உண்மை அதுவல்ல. ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நலனுக்காக (ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்லது உறுதிப்படுத்துவதற்காக) எடுக்கின்ற முயற்சிகள் அல்லது அம்முயற்சிகளின் விளைவுகளே இம்மோதல்கள். ஒருபுறம் அந்தந்த சூழ்நிலைக்கும், தேவைக்கும் ஏற்ப சாதி, மத, மொழி உணர்வுகளைத் தூண்டியெழுப்பி, மோதல்களை ஏற்படுத்திக்கொண்டு, மறுபுறம் சமுதாய மற்றும் நாட்டின் நலனுக்காக பிரிவினை சக்திகளை ஒடுக்குபவர்களாகவும், நடுநிலையில் உள்ளவர்களாகவும் தங்களையே காட்டிக்கொள்வார்கள். சமயங்களைத் துன்புறுத்துபவர்கள் உண்மையில் எந்த சமயத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களும் அல்ல; வெறுப்பவர்களும் அல்ல; அவர்களுக்கு வேண்டியது அரசியல் அதிகாரம். இதற்காக எதையும் செய்ய துணிவார்கள். எதையெதை ஆதரித்தால், எதையெதை எதிர்த்தால் தங்களுக்கு இலாபமோ அதைச்செய்வார்கள். வரலாற்றில் பொதுவாக இவ்வாறு தான் மதக்கலாபனைகள், அடக்குமுறைகள் நிகழ்ந்துள்ளன.
கிறிஸ்தவத்திற்கு எதிரான துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள் - அரசியல் நோக்கமே
கிறிஸ்தவத்திற்கும் வேதகலாபனை என்பது புதிதல்ல; தொடக்கத்திலிருந்தேலிருந்தே தொடர்கிறது. . இறுதி வரை கண்டிப்பாக இருக்கும் எனவும், இயேசு கூறியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வேதகலாபனை நிகழ்ந்து கொண்டேதான் வருகிறது. வேதகலாபனை இல்லாத காலமே இல்லை எனலாம்.
ஏரோது அரசன் காலத்தில் நிகழ்ந்ததுதான் அடக்கு முறையின் முதல் அலை. பிறந்திருந்த இயேசு பாலனை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமெனத் திட்டமிட்டு, அதற்காக அந்நாட்டில் இரண்டாண்டு இடைவெளியில் பிறந்திருந்த அனைத்து சிசுக்களையும் கொன்றுக் குவித்த நிகழ்ச்சியே அக்கலாபனை. அதன்பின், உரோமைப் பேரரசின் அதிகாரத்தில் நிகழ்ந்த கலாபனை பேரரசு முழுவதும் பரவியது. கொடூரமானது, சுமார் 300 ஆண்டுகள் நீடித்து, கி.பி.325 இல் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த இரண்டு கலாபனைகளுமே ஆட்சியாளர்களால், அரசியல் ஆதாயத்திற்காக நிகழ்த்தப்பட்டவை தான். தாங்கள் தேடிவந்த குழந்தையை “யூதர்களின் அரசன்” என்று ஞானிகள் குறிப்பிட்டதால், தன்னுடைய ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, ஏரோது அனைத்து குழந்தைகளையும் கொன்றான்.
தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் உயிர்த்த கிறிஸ்துவின் புதிய வாழ்வினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். எனவே, அந்த அனுபவத்தை வாழ்வியலாக்கி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தனர். அந்த வடிவமே அவர்கள் வாழ்ந்த பகிர்வு வாழ்வு; கடவுளை மையமாக வைத்த பொதுவுடமை வாழ்வு. இப்புதிய வாழ்க்கை முறையானது உரோமைப் பேரரசின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானது. செல்வம், அதிகாரம், சமத்துவமின்மை - இவைகளில் வோரூன்றியதே உரோமைப் பேரரசு. எனவே, கிறிஸ்தவர்களின் இப்புதிய வாழ்க்கை முறையைக்கண்டு, பேரரசு அச்சம் கொண்டது. பிறந்திருந்த “யூதர்களின் அரசனை” முளையிலேயே கிள்ளி எறிய ஏரோது முயற்சித்தது போல, அப்போது தான் பிறந்திருந்த கிறிஸ்தவத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சித்தது உரோமைப் பேரரசு.
ஏரோதும், உரோமை பேரரசும் அவர்கள் முயற்சியில் எந்த அளவுக்கு வெற்றி கண்டார்கள் என்ற கேள்வியை நாம் இங்கு எழுப்பவில்லை. நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம், மத அடக்குமுறை என்பது, ஒரு மதத்திற்கு எதிரான செயல் என்பதை விட, அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றவோ அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கோ, உண்மைக்கும், சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் எதிரான ஓர் அரசியல் செயல்பாடு என்பதை சுட்டிக்காட்டுவது தான்.
இப்பகிர்வின் நோக்கம்
கிறிஸ்தவமோ அல்லது வேறெந்த மதமோ வரலாற்றில் சந்தித்திருக்கின்ற கலாபனைகளைப் பட்டியலிட்டு, அக்கலாபனைகளின் கொடூர உச்சத்தையும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், விளைவுகளையும் சுட்டிக்காட்டுவது மற்றும் இதைத்தொடர்ந்து வருகின்ற ஐந்து கட்டுரைகளின் நோக்கம் அல்ல; மாறாக, நமது சிந்தனைகளையும், உணர்வுகளையும் அப்பக்கம் திருப்புவதைத் தவிர்த்து, அரசியல் செயல்பாடுகளாக, அரசியல் இலாபத்திற்காக, இன்று அரங்கேற்றப்படுகின்ற பல்வேறு கலாபனைகளை எப்படிப்பட்ட மன நிலையுடனும், தெளிவுடனும் நாம் சந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கவும், செயல்படவும் அழைப்பதே இந்தக் கட்டுரை மற்றும் இதைத் தொடர்ந்து வருகின்ற (ஏழு) கட்டுரைகளின் நோக்கம் ஆகும். துன்புறுத்தப்படுவது எந்த மதமாக இருந்தாலும் சாதி, இன, மொழி அடிப்படையில் எந்த மக்களாக இருந்தாலும், இச்சிந்தனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
தார்மீக உரிமை உண்டா?
இந்த எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, நான் ஒரு கிறிஸ்தவன் மற்றும் உரோமன் கத்தோலிக்கன் என்பதை நன்கு அறிவேன். அதாவது, கி.பி முதல் 20 நூற்றாண்டுகளில் மத ரீதியான துன்புறுத்தல்களின் வரலாற்றின் பின்னணியில் குறிப்பாக, கத்தோலிக்க திருச்சபையின் பல தவறான நம்பிக்கைகள் மற்றும் செயல்களின் பின்னணியில், ஒரு கிறிஸ்தவருக்கு இதைப் பற்றி மற்றவர்களுக்கு “போதிக்க” எந்த உரிமையும் இல்லை. வரலாற்றில் கிறிஸ்தவர்களால் நிகழ்ந்துள்ள தவறுகளை நாம் (கிறிஸ்தவர்கள்) உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, பொறுப்பேற்க வேண்டும். கத்தோலிக்க திருச்சபை கடந்த 16 நூற்றாண்டுகளில் குறிப்பாக, காலனி ஆதிக்க காலத்தில் நற்செய்தி அறிவிப்பு என்ற பெயரில் செய்திருக்கின்ற தவறுகளுக்காக அதிகாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கேட்டுள்ளது. ஏனெனில், கடந்த கால நிகழ்வுகளில் நாங்கள் நீதிமான்கள் என்று சொல்லிக்கொள்ள கிறிஸ்தவர்களாகிய நம்மால் இயலாது. நமது திருத்தந்தை அவர்களைப் பின்பற்றி, குற்ற உணர்வுகளுடனும், பணிவுடனும் இச்சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நற்செய்திப் பணிக்கான தெளிவான பார்வையையும், செயல் முறைகளையும் திருச்சபை வகுத்து வழங்கியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து மக்களும், நமது அனுபவங்கள் வெற்றிகள் மற்றும் தோல்விகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு, பொதுவான ஒரு இலக்கை நோக்கி, பொதுவான ஒரு பயணத்தில் இணைந்துள்ளோம். இப்பயணத்தில் நன்மை செய்வதில் ஒருவரோடொருவர் போட்டியிடுவோம் தீமை செய்வதில் அல்ல.
நம்பிக்கையுடன் முன் செல்வோம்
மதங்களை உலகத்தின் மனசாட்சி எனலாம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நமக்கு அருளப்பட்டுள்ள நீதி நெறிகளின் படியும், மறைப்படிப்பினைகளின் படியும், நமது மனச்சாட்சியின் படியும் வாழ முயற்சிப்போம். நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அம்மதத்தைப் பற்றிய ஆழமான புரிதலிலும், அனுபவத்திலும் நம்மையே ஈடுபடுத்திக் கொள்வோம். பிற மதங்களைப்பற்றிய புரிதல்களுக்கும், அனுபவங்களுக்கும் திறந்த மனதுடன் இருப்போம்.
மேலோட்டமான வலதுசாரி எண்ணங்கள், வெறித்தனம் மற்றும் பிரித்தாளும் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் ஆகிய இவை. தன் மதம் உட்பட எந்த மதத்தினரிடம் இருந்தாலும், அவற்றை இனம் கண்டு, அவற்றிற்கு எதிராக அன்புடனும், அமைதியுடனும் குரல் கொடுப்போம். எப்படிப்பட்ட துன்புறுத்தலாலும், மதங்கள் அழிந்து போனதாக வரலாறு இல்லை. எனவே, எந்த விதமான துன்புறுத்தலுக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. நாம் நமது உரிமைகள் மற்றும் நமது கடமைகளை அறிந்து, அவற்றை இடைவிடாமல் நிறைவேற்ற முனைவோம். இறைவனுக்கும், சமுதாயத்திற்கும் நம்மையே அர்ப்பணித்து, நம்மைத் துன்புறுத்துபவர்களின் நல்வாழ்வு உட்பட, அனைத்து மக்களும் மனித மாண்புடனும், நலமுடனும் வாழ ஜெபிப்போம், செயல்படுவோம். நம்பிக்கையுடனும், உறுதியுடனும் முன் செல்வோம்.
(அடுத்த வாரம் தொடரும்)