Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 15:5-12, 17-18, 21, பிலி 3:17-4:1, லூக் 9:28-36
Tuesday, 08 Mar 2022 09:34 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை              

தவக்காலத்தின் இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நம் அனைவரையும் உருமாற்றம் அடைய அழைப்புவிடுக்கின்றது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் உருமாறியதை நாம் நமது கத்தோலிக்கத் திரு அவையில் ஒரு விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். தவக்காலத்தின் இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில், ஆண்டவரின் உருமாற்றம் நமக்கு தரும் செய்தி என்ன? நம் மீட்பர் இயேசு கிறிஸ்து, முழு மனிதனும், முழு கடவுளுமாக இவ்வுலகிற்கு வந்தவர். சில நேரங்களில் அவர் தனது மனிதத் தன்மையை அடக்கி இறைத்தன்மையையும், சில நேரங்களில் தன் இறைத்தன்மையை அடக்கி மனிதத் தன்மையை வெளிப்படுத்துவதை விவிலியத்தில் காண்கின்றோம். இவ்வாறு, முழு மனிதத் தன்மையும், முழு கடவுள் தன்மையும் கொண்டவராய் இவ்வுலகிற்கு வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இந்த தாபோர் மலையில் மட்டுமே முழு இறைவனாக காட்சியளிக்கின்றார். இத்தவக்காலத்தில் இதை செய்யத்தான் இறைவன் இன்று நமக்கு அழைப்புவிடுக்கின்றார். அதாவது, பாவத்திற்கு அடிபணியக்கூடிய நமது வலுவற்ற மனிதத் தன்மை மறைந்து, இறைவனோடு ஐக்கியமாகக் கூடிய வலுவான தெய்வீகத்தன்மை வெளிப்பட வேண்டும் என்பதைத்தான், இன்றைய வாசகங்கள் உணர்த்துகின்றன. முதல் ஆதாம் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் ஆதாமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, விண்ணிலிருந்து வந்தவர். முதல் ஆதாம் பாவத்திற்கு அடிமையானார். இரண்டாம் ஆதாம் பாவத்தை வென்றார். மண்ணுக்குரிய இயல்பைப் பெற்றிருக்கும் நாம், விண்ணுக்குரிய இறை இயல்பையும் பெற்றிட வரம் வேண்டி, இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆபிரகாம் உன் வழி மரபினரை எண்ணிக்கையில் பெருக்குவேன், பிறர் நாட்டையும் உனக்கு சொந்தமாக்குவேன் என்று ஆண்டவர் கொடுத்த வாக்குறுதிக்கு ஆபிரகாம் அடையாளம் கேட்கிறார். ஆண்டவரும் தெளிவான அடையாளத்தை தந்து அவரை வழி நடத்துகிறார் என்று கூறும் இம்முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அவமானத்தின் உச்சமாய் கருதப்பட்ட சிலுவை, ஆண்டவர் இயேசுவினால் அன்பின் அடையாளமாய், மன்னிப்பின் அடையாளமாய், இரக்கத்தின் அடையாளமாய் மாறியது. ஆண்டவர் இயேசுவின் இந்த சிலுவைக்கு எதிராக நடப்பவர்களுக்கு அழிவே முடிவாக இருக்கும் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. இரக்கமுள்ள தந்தையே! உம் திரு அவையை நீர் நிறைவாக ஆசீர்வதியும். உலகில் நடைபெறும் போர்கள், குழப்பங்கள், அநீதிகளுக்கு எதிராக தனது குரலை கொடுத்து, மனம் மாறிட அனைவருக்கும் அழைப்புவிடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லாம் வல்ல தந்தையே! எம் நாட்டை நிறைவாக ஆசீர்வதியும். எம் நாட்டில் பெருகி வரும் கொலை, கொள்ளை, லஞ்சம், வன்முறைக் கொடுமைகள் அனைத்தும் முடிவுற்று, அமைதியுள்ள நாடாக அமைந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புள்ள தந்தையே! உலக அமைதிக்காக மன்றாடுகிறோம். ஆணவத்தினால், அதிகாரப் போக்கினால் உலக நாடுகளிடையே ஏற்படுகிற போர்கள், பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்கு வந்து, ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பரிவுள்ள தந்தையே! நாங்கள் மனிதர்கள், பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதை உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, அந்த பாவநிலையிலிருந்து திரும்பி, உம் திருமகன் கற்பித்த புனித நிலையை பெற்றிட வேண்டு மென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எங்கள் வானகத் தந்தையே! தங்கள் சொந்தங்களை, சொத்துக்களை இழந்து அகதிகளாய் தனிமையில் வாடும் மக்களுக்கு நீரே அவர்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.