Namvazhvu
அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச. தேடுங்கள் கிடைக்கும் – 27 குடும்பத்தில் இது இருந்தால்...
Wednesday, 16 Mar 2022 06:30 am
Namvazhvu

Namvazhvu

சத்யா: எங்க வகுப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பத்திப் பேசிட்டு இருந்தோம்.

ஆசான்: என்ன நிகழ்ச்சி?

சுந்தர்: எங்களுக்கு அறிவழகன்னு ஒரு சார் இருக்கார். அவர் வெறுமனே பாடத்தை மட்டும் நடத்திட்டுப் போகமாட்டார். ஏதாவது ஒன்னு வித்தியாசமா செஞ்சுட்டே இருப்பார். போன வாரம் எல்லாரையும் நாங்க கடவுளிடம் கேட்க விரும்புற ஒரு முக்கியமான வரத்தை எழுதச் சொன்னார்.

சத்யா: எல்லாம் எழுதிக் கொடுத்த பிறகு, நாங்க எழுதினதை வாசிச்சுக் காட்டினார். என்னென்னவோ எழுதி இருந்தாங்க. பில்கேட்ஸ் மாதிரி ஏதாவது புதுசா கண்டுபிடிச்சு, பெரிய ஆளா வரணும். .ஆர். ரகுமான் மாதிரி பெரிய இசைக் கலைஞரா ஆகணும், அஜித், விஜய் மாதிரி பெரிய ஆக்டரா ஆகணும்னு, ஆளாளுக்கு ஏதேதோ எழுதியிருந்தாங்க. ஆனால், கதிர்னு ஒருத்தன். எங்க ரெண்டு பேருக்குமே ஃப்ரெண்டு தான். அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா? எங்க குடும்பத்தில நிம்மதி வேணும்னு எழுதியிருந்தான்.

சுந்தர்: வகுப்பு  முடிஞ்சதும்  ஏண்டா அப்படி எழுதினேனு  கேட்டேன். அவங்க குடும்பத்தில் அமைதி இல்லை. அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக தினமும் சண்டை போட்டுக்குவாங்களாம். கோபத்தில் ஒருத்தரை ஒருத்தர் திட்டுறது, அப்புறம் சில நாள் பேசாம இருக்கிறது. இதனால் நான் நிம்மதியா இருக்க முடியல. படிப்பில் கவனம் செலுத்த முடியலன்னு, ரொம்ப கவலையா சொன்னான்.

ஆசான்: வேறு யாரும் இதனை எழுதவில்லை என்பது வியப்புதான். பலர் இதனை எப்படி எழுதுவது என்று தயங்கி, வேறு ஏதாவது ஒன்றை எழுதி இருப்பார்கள்.

சுந்தர்: ஆமா. எழுதினா நம்ம வீட்டு வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துல...

ஆசான்: குடும்பத்தில் அமைதி இல்லை என்றால், குடும்பத்தில் யாரும் நிம்மதியாய் வாழ இயலாது. மனதில் எதிர்மறை உணர்வுகள் குடியிருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். படிப்பதற்கு, உழைப்பதற்கு ஆர்வம் குறைந்து கொண்டே வரும். மனச்சோர்வு மிகுந்துவிடும். ஒரு மேலைநாட்டு நாட்டுப்புற கதையை நமது சூழலுக்கு ஏற்ப மாற்றி சிலவற்றை சேர்த்துச் சொல்லுகிறேன்.

சத்யா: சொல்லுங்க.

ஆசான்: ஒரு காட்டில் வாழ்ந்த இந்த தம்பதியர் சண்டை போடாத நாளே இல்லை. காட்டிற்குப் போய் மரம் வெட்டி, தினமும் விற்றான் கணவன். அதில் கிடைத்த பணத்தில் மிக எளிமையான வாழ்வே வாழ முடிந்தது. “உனக்கு அதிர்ஷ்டமே இல்லை. இருந்தா நாம எங்கேயோ இருப்போம்என்று தினமும் புலம்புவாள் மனைவி. “நானாவது காட்டுக்குள்ள போய் கஷ்டப்பட்டு உழைச்சு, மரம் வெட்டி அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறேன். நீ வீட்டுக்குள்ளே உட்கார்ந்து என்னைத் திட்டிட்டே இருக்கஎன்பான் கணவன்.

ஒருநாள் காட்டிற்குள் போய் ஓங்கி உயர்ந்து நின்ற ஒரு மரத்தை வெட்ட கோடரியை ஓங்கினான். “வெட்டாதே! பொறு, பொறுஎன்று ஒரு குரல் கேட்டது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். யாரையும் காணவில்லை. மனப்பிரமை என நினைத்துக்கொண்டுமீண்டும் கோடரியை ஓங்க, “வெட்டாதே! தயவுசெய்து மரத்தை வெட்டாதே!” என்று சொல்லிக்கொண்டே ஒரு மரத் தேவதை அவன் முன்னே குதித்தது.

சுந்தர்: மரத் தேவதையா?

ஆசான்: ஆமாம். ஆங்கிலத்தில் வுட் ஃபேரி (Wood Fairy) என்பார்கள். மரங்களில் வாழும் குட்டி தேவதைகளில் ஒன்று. “இந்த மரம் தான் என் வீடு, இதை வெட்டி என் வீட்டை நாசமாக்கிடாத! இதை வெட்ட மாட்டேன்னு நீ வாக்குக் கொடுத்தா நீ கேட்கிற மூணு வரங்களைத் தருவேன்என்றது.

என்ன வேண்டுமானாலும் கேட்கலாமா?” என்று அவன் கேட்டான்.

என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்க வேண்டியது கூட இல்லை. மனதில் ஆசைப்பட்டா கூடப் போதும், உடனே அதை உனக்குத் தருவேன். இந்த சலுகை உனக்கு மட்டுமல்ல; உன் மனைவியும் இதனைப் பயன்படுத்தலாம். நீயோ, உன் மனைவியோ ஆசைப்பட்டதையெல்லாம் உடனே தருவேன். ஆனா, ஆசைப்பட்டதை அதற்குப் பிறகு மாத்த முடியாதுஎன்றது தேவதை.

உன்னை நான் நம்பலாமா?” என்று அவன் கேட்டான்.

தேவதைகள் பொய் சொல்வதில்லை. நீயோ, உன் மனைவியோ எங்கிருந்தாலும் நீங்க ஆசைப்பட்டா போதும். அது நடக்குமாறு பார்த்துக் கொள்வது என் வேலை. ஆனா, மூணு முறை தான் ஆசைப்பட முடியும்என்று தேவதை சொன்னதும், “சத்தியமாக நான் இந்த மரத்தை வெட்ட மாட்டேன்என்று சொல்லிவிட்டு, அவன் வீட்டிற்கு ஓடினான். ஓடி வந்து வீட்டில் அமர்ந்து மனைவியிடம்இங்கே வா. ஒரு நல்ல செய்தி. மிக மிக நல்ல செய்திஎன்ற கணவனை வியப்போடு பார்த்தாள் மனைவி. “எனக்கு அதிர்ஷ்டம் இல்லை, அதிர்ஷ்டம் இல்லை என்று புலம்புவியே, அதிர்ஷ்டம் வந்துருச்சு. இனிமே நான் தினமும் காட்டுக்குள்ள போய் நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியதில்லை. நீ தினமும் செஞ்சு என்னைக் கொல்லுவியே ரசம் சாதம், இனி அந்தச் சனியனை சமைக்க வேண்டியதே இல்லை. அறுசுவை உணவு சாப்பிடலாம்என்று சிரித்த கணவன், அன்று நடந்ததை எல்லாம் சொன்னான். “மூணு வரங்கள் கேட்கலாம். என்ன வேணாலும் கேட்கலாம். கேட்கக் கூட வேண்டியது இல்ல. நானோ, நீயோ மனதில ஆசைப்பட்டாலே போதும் அதை உடனே தருவதாகச் சொல்லி இருக்கிறது தேவதை. வா, சாப்பிட்டியா? யோசிக்கலாம். நல்லா யோசி. நானும் யோசிக்கிறேன்என்றான் அவன்.

வழக்கம் போல, அன்றைக்கு செய்திருந்த ரசம் சாதத்தை மனைவி பரிமாறினாள். தட்டை எடுத்து முகத்தை சுளித்துக்கொண்டே அவன் சாப்பிட்டான். கணவனுக்கு கொழுக்கட்டை என்றால் அவ்வளவு இஷ்டம் என்பது மனைவிக்குத் தெரியும். ‘இவ்வளவு நல்ல செய்தி சொல்லி இருக்காரே! ஆனாலும், வெறும் ரசம் சாதம் தானே இருக்கு? ரெண்டு கொழுக்கட்டை இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?’ என்று பெருமூச்சுவிட்டாள் மனைவி.

யாரோ கேலியாகச் சிரிப்பது போன்று இருந்தது. “அப்படியா?” என்று ஒரு குரல் கேட்டது. ‘அந்த மரத் தேவதையின் குரல் போல் அல்லவா இருக்கிறது?’ என்று கணவன் மேலே பார்ப்பதற்குள், மேலிருந்து ஒரு தட்டு வந்து இவர்களது மேஜையில் அமர்ந்தது. அந்தத் தட்டில் இரண்டு கொழுக்கட்டைகள்! “முதல் வரம்!” என்று சொல்லிச் சிரித்த தேவதை மறைந்தது.

கணவனுக்கு வந்ததே கடும் கோபம்! என்ன வேண்டுமானாலும் ஆசைப்பட்டிருக்கலாம். பெரிய மாளிகை வேண்டும், ஒரு சாக்கு நிறைய தங்க நாணயங்கள் வேண்டும், குதிரைகள் பூட்டிய ரதம் வேண்டும் என்று என்ன வேண்டுமானாலும், ஆசைப்பட்டு இருக்கலாம். கொழுக்கட்டை வேண்டுமென்று ஆசைப்பட்டு மூன்றில் ஒரு வரத்தை இப்படி வீணடித்துவிட்டாளே என்ற கோபத்தில் கணவன், “கொழுக்கட்டையாம் கொழுக்கட்டை! அப்படியே இந்த இரண்டையும் உன் ரெண்டு மூக்கில திணிக்கலாம்னு தோணுதுஎன்று கத்தினான்.

மறுகணம் அதே கேலிச் சிரிப்பு கேட்டது. “இரண்டாவது வரம்!” என்று தேவதை சிரித்தது. மறுகணம் தட்டில் இருந்த இரண்டு கொழுக்கட்டைகளும் பறந்து போய் மனைவியின் மூக்கின் மேல் ஒட்டிக் கொண்டன. “ஐயோ!” என்று அலறிக்கொண்டே மனைவி அந்த கொழுக்கட்டைகளை எடுக்க முயன்றாள். முடியவில்லை. “தப்பு செய்து விட்டேன்!” என்று சொல்லிய கணவன் வந்து அவற்றை இழுத்தான். என்னதான் முயன்றாலும் அவற்றை அகற்றவே முடியவில்லை. சமையல் அறைக்குள் ஓடி கத்தியை எடுத்து வந்து அவற்றை வெட்ட முயன்றான். முடியவில்லை. கேட்ட வரத்தை மாற்ற முடியாது என்று தேவதை சொன்னது நினைவு வந்தது. இன்னும் ஒரு வரம் எஞ்சியிருக்கிறது. இப்போது கூட மாளிகை கேட்கலாம், தங்க ரதம் கேட்கலாம். ஆனால், இப்படி கொழுக்கட்டைகள் என் மனைவியின் மூக்கில் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் அனைவரும் அவளைக் கேலி செய்வார்கள். ஏளனம் செய்து சிரிப்பார்கள். அவள் எங்குமே வெளியே போக முடியாது. வீட்டுக்குள்ளே அடைபட்டுக்கிடந்தால் கூட அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நிம்மதியாக சுவாசிக்க இயலுமா? நான் நினைத்துவிட்டேன் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவளுக்கு இப்படியொரு தண்டனையா? ஐயோ, பாவம்!” என்று நினைத்த கணவன், ஒரு முடிவுக்கு வந்தான்.

மேலே நிமிர்ந்து பார்த்து, “தேவதையே, மூன்றாவது வரம் கேட்கிறேன். இந்தக் கொழுக்கட்டைகளை என் மனைவியின் மூக்கில் இருந்து அகற்றிவிடு! உடனே! இப்போதே!” என்றான். மேலே தேவதை சிரிக்கும் ஒலி கேட்டது. மனைவியின் மூக்கில் ஒட்டிக் கொண்டிருந்த கொழுக்கட்டைகள் கீழே விழுந்தன. மனைவிக்குப் புரிந்தது. ‘மூன்றாவது வரமாக என் கணவன் என்ன வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம். என்னை உதறிவிட்டு மனைவியாக இன்னொரு பெண் வேண்டும் என்று கூட கேட்டிருக்கலாம். ஆனால், என் துயரம் நீங்க வேண்டும் என்று கேட்டு, எனக்கு விடுதலை பெற்றுத் தந்தானே! என் மீது ஆழ்ந்த அன்பு இல்லாவிட்டால் இதனைச் செய்திருப்பானா?’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

மறுநாள் காலை கோடரியை எடுத்துக் கொண்டு கணவன் காட்டிற்குப் புறப்பட்டபோது, “ஒரு நிமிஷம், பொறுங்கஎன்று சொல்லி அருகே வந்து அவனைத் தழுவிக் கொண்டு, “என் ராசா!” என்ற மனைவி அவன் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டாள். அந்த முத்தத்தை வாங்கிக்கொண்டு ஏதோ தங்க நாணயங்களை வாங்கியது போல புன்னகைத்துக் கொண்டே கம்பீரமாக நடந்தான் கணவன். சண்டை எல்லாம் அன்றோடு நின்றது. “என் ராசாஎன்று அவள் அழைத்து அன்போடு தந்த முத்தம் அவனுக்கு புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் தர அவன் அன்றிலிருந்து நிறைய மரங்களை வெட்டினான். விற்ற பணத்தை மகிழ்ச்சியோடு மனைவியிடம் தர, அவள் அன்போடு, ஆசையோடு சுவையாகச் சமைத்து பரிமாறினாள். முன்பை விட இருமடங்காக உழைக்கத் தொடங்கினான் கணவன். வருமானமும் இரு மடங்கானது என்று கதை முடிகிறது.

சுந்தர்: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருந்தா மற்ற நலன்கள் எல்லாம் தானா வந்து சேரும் என்பது தானே இந்தக் கதை சொல்ற கருத்து?

சத்யா: கரெக்ட்.

ஆசான்: அதனால் உங்கள் நண்பன் கதிர்குடும்பத்தில் அமைதி வேண்டும்என்று கேட்டது மிகச் சரியானது தான். ஆனால், குடும்பத்தில் அமைதி குறைய கணவன், மனைவி மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். பிள்ளைகள் உட்பட. அதனால் குடும்பத்தில் அமைதி இல்லையே என்று கவலைப்படும் இளைஞர்கள் அதை நிலைநாட்ட தாங்கள் எப்படி உதவலாம் என்று யோசித்துச் செயல்பட வேண்டும்.

சத்யா: உண்மைதான்.

சுந்தர்: வேண்டாம்பா, எனக்கு வேண்டாம்.

சத்யா: என்னடா உனக்கு வேண்டாம்?

சுந்தர்: கொழுக்கட்டை!

சத்யா: இல்ல. நாளைக்கு செஞ்சு எடுத்துட்டு வரேன் பாரு.

சுந்தர்: ஹலோ, எடுத்துட்டு வருவது நீயா இருக்கலாம். ஆனால், நினைக்கப் போறது நான்தான். அப்புறம் உனக்குத்தான் ஆபத்து.