Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் தவக்காலம் நான்காம் ஞாயிறு (யோசு 5:9, 10-12, 2கொரி 5:17-21, லூக் 15:1-3, 11-32)
Wednesday, 23 Mar 2022 09:56 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தில் இந்த நான்காவது ஞாயிறானது நம் அனைவரையும் மனம்மாறி, இறைத்தந்தையை நோக்கி ஓடோடி வர அழைப்புவிடுக்கிறது. பொதுவாக, யூதர்கள் பிற இனத்து மக்களோடு பேசுவதை, பழகுவதை விரும்புவதில்லை. நாங்கள் கடவுளின் மக்கள். எனவே, பிற இனத்து மக்களோடு பேசி, நட்பு பாராட்டுவது தீட்டானது, பாவமானது என்று கருதி வந்தார்கள். இப்படி பிறரோடு உறவாடிய மக்களை, பாவிகள் என்று ஒதுக்கி வைத்தார்கள். தங்கள் யூத மக்களில் ஒருசிலர் பிற இனத்து மக்களோடு பழகி, அவர்களோடு திருமண உறவில் இணைந்ததால், அவர்களை சமாரியர்கள் என்று ஒதுக்கி, நாட்டிற்குள் அனுமதிக்காமல், புறம்பே தள்ளினார்கள். இவ்வாறு, உறவுகளைவிட, தங்கள் இனக்கொள்கைகளே முக்கியம் என்று வாழ்ந்து கொண்டிருந்த தருணத்தில், ஆண்டவர் இயேசு காணாமற்போன மகன் உவமையின் வழியாக இவர்களின் குறுகிய மனநிலையை உடைத்து, ஒரு புதிய மனநிலையைக் கொண்டு வருகிறார். தன் யூத இனத்தின் கொள்கைகளை மீறி, தன் நண்பர்களோடு சேர்ந்து தாறுமாறான வாழ்வை வாழ்ந்து, உள்ளம் குமுறி திரும்பிவந்த ஊதாரி மகனை, தன் யூத இனத்தின் கொள்கைப்படி, நாட்டிற்கு வெளியே தள்ளிவிடாமல், வீட்டுக்குள் வரவேற்று, விருந்து கொடுத்து மகிழ்கிறார் அந்த பரிவுள்ளத் தந்தை. நியாயம் கேட்டு நின்ற மூத்த மகனிடம், பாவத்தில் இருந்தவன் புனிதம் அடைந்து விட்டான், இறந்து போயிருந்தவன் உயிர்த்தெழுந்து விட்டான், எனவே மகிழ்ந்து கொண்டாடுவோம் என்று கூறுகிறார். இவ்வாறு, பாவநிலையிலிருந்து புனித நிலைக்கு, இறப்பு நிலையிலிருந்து உயிர்ப்பு நிலைக்கு இத்தவக்காலத்தில் கடந்து சென்றிடவரம் வேண்டி, இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாலைவனத்தில் வழிநடத்தப் பட்டு, தந்தை கடவுள் வாக்களித்த நாட்டை அடைந்த மக்கள், புதுவாழ்வை பெற்றவர்களாய் இறைவனின் பராமரிப்புக்கு நன்றி கூறி, பாஸ்கா விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்று கூறும் இம் முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தந்தை கடவுள், தன் மகன் கிறிஸ்து வழியாக இவ்வுலகை தம்மோடு ஒப்புரவாக்கினார். கிறிஸ்து வழியாகவே பழைய பாவநிலையை அகற்றி, மீண்டும் புதிய அருள்நிலையை உருவாக்கினார். எனவே, நாம் அனைவரும் கிறிஸ்துவின் தூதுவர்கள் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எல்லாம் வல்லவரே! உம் திருமகனை தலையாகக் கொண்டு பயணிக்கும் உம் திரு அவையானது, அவர் கற்பித்த அன்பு, நீதி, இரக்கம் மற்றும் பரிவுள்ளத்தோடு தன்னை நாடி வரும் மக்களை அரவணைத்து, வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. என்றும் வாழும் தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள், தம் மக்களை பணத்தின் அடிப்படையில் பிரித்தாளாமல், நல்குணத்தோடும், உயரிய உள்ளத்தோடும் மக்களுக்கான ஆட்சியை தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் அன்புத் தந்தையே! எங்கள் கொள்கைகள்தான் முக்கியம் என்ற பிடிவாத குணத்தோடு நாங்கள் வாழாமல், நீர் தந்த உறவுகளை மதித்து, அவர்களை அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வை வழங்குபவரே! ஏழை - பணக்காரர், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற எண்ணத்தோடு நாங்கள் வாழாமல், அனைவரும் எங்கள் சகோதர சகோதரிகள் என்றுணர்ந்து, அன்பு செய்து வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமுள்ள தந்தையே! போரினால், வன்முறையால், மனித குணம் அழிந்து, அலகை குணம் அதிகரித்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாய், ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ்ந்திட வரம் வேண்டி, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.