Namvazhvu
குடந்தை ஞானி கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்! அச்சு ஊடகத்தைக் காப்பாற்றுங்கள்
Wednesday, 04 May 2022 05:26 am

Namvazhvu

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் அதற்குப் பின்பும் மிகவும் பாதிக்கப்பட்ட துறை அச்சு ஊடகத்துறை என்றால் மிகையன்று. கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொது போக்குவரத்து மூடப்பட்ட நிலையில், அச்சகங்களும் பத்திரிகை அலுவலகங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு அச்சு ஊடகங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், போதுமான விளம்பரங்கள் வராமல் பத்திரிகைகள் பாதிக்கப்பட்டன; பொதுமுடக்க காலத்தில் அலுவலக ஊழியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்குவதற்கு சிரமப்பட்டன. ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில், சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்தது. ‘நம் வாழ்வுசந்தாதாரர்களுடைய எண்ணிக்கையும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சரிந்தது. ஐயாயிரம் சந்தாதாரர்கள் சந்தாவைப் புதுப்பிக்காமல் ஒதுங்கினர். கிறிஸ்தவ நிறுவனங்கள், சபைகள், மறைமாவட்டங்கள் நடத்தும் மாத பத்திரிகைகள் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டன.

அண்மையில் காகிதம், அச்சு மை உள்ளிட்டவற்றின் கடுமையான ஏறக்குறைய இரண்டு மடங்கு விலையேற்றத்தின் காரணமாக மூச்சு விடமுடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தினமணி நாளிதழில் ஏப்ரல் 23 ஆம் தேதி வந்த தலையங்கம்நம் வாழ்வுஉள்ளிட்ட பத்திரிகைகளின் நிலையை படம்பிடித்துக் காட்டுவதால் அப்படியே இங்கு தலையங்கமாக வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பதினெட்டு மறைமாவட்டங்களில் கும்பகோணம் மறைமாவட்டம் மட்டுமே தங்கள் 154 அருள்பணியாளர்களுக்கும்நம் வாழ்வு சந்தாவைச் செலுத்துகிறது. தஞ்சாவூர் மறைமாவட்டத்தில் விருப்பமுள்ள 57 பங்குத்தந்தையர்களும் வாங்குகின்றனர். செயின்ட் ஆன்ஸ், கும்பகோணம் மாநிலம் (28), செயின்ட் ஆன்ஸ், திருச்சி மாநிலம் (18), செயின்ட் ஆன்ஸ் பாளையங்கோட்டை மாநிலம் (31), FIHM- ஆந்திர மாநிலம் (27), FIHM  - கடலூர் மாநிலம்  (38), FSJ சென்னை - அச்சரப்பாக்கம் மாநிலம் (28), CTC செங்கை விமலா மாநிலம் (25) மட்டுமே வாங்குகின்றனர். குழித்துறை, திருச்சி மறைமாவட்டங்கள் நிறுத்திவிட்டன. இதுதான் நிலை. ஆகையால்.. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்! தமிழக அரசு தம் நூலகங்களுக்கு நம் வாழ்வு வாங்கும் நிலையில், மறைமாவட்டங்களும், மறைமாநிலங்களும் எம் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். விளம்பரங்கள் வழியாக தமிழகத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களும் பசிலிக்காக்களும் பங்குகளும் உதவ வேண்டும்.

 தலையங்கம் (நன்றி தினமணி ஏப்ரல் 23, 2022)

அழிந்திடலாகாது! அச்சு ஊடகத்தின் நிலை குறித்த தலையங்கம்

காகித விலை உயர்வால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது அச்சு ஊடகம். இதே நிலைமை தொடர்ந்தால் அதிக அளவிலான வாசகர்களைக் கொண்ட பெரிய பத்திரிகைகளே காணாமல் போனாலும்கூட வியப்படையத் தேவையில்லை. இப்படியொரு இக்கட்டான நெருக்கடியை இது நாள் வரை அச்சு ஊடகம் எதிர்கொண்டதில்லை.

உலகளாவிய அளவில் காட்சி ஊடகங்களின் பெருக்கமும், சமூக ஊடகங்களின் ஊடுருவலும் அச்சு ஊடகங்களின் விற்பனையை ஏற்கனவே பாதித்திருக்கின்றன. மேலைநாடுகளில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் விளம்பர ஊடகங்களாக மாறிவிட்ட நிலை, கால் நூற்றாண்டுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை காட்சி ஊடகங்களுக்கு ஏற்பட்ட வரவேற்புக்குப் பிறகும் அச்சு ஊடகங்களின் விற்பனையும், தாக்கமும் குறையாமலேயே இருந்து வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்எனப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறியீட்டை அதிகரிக்கும் பரபரப்புச் செய்திகளை குறிவைத்து காட்சி ஊடகங்கள் செயல்படுவதால் அவற்றின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைவாக இருந்ததுதான் அச்சு ஊடகங்கள் தொடர்ந்து வரவேற்புப் பெற்றதற்கு முக்கியமான காரணம். அறிதிறன்பேசிகளின் பயன்பாடு அதிகரித்ததும், எண்ம ஊடகங்கள் அறிதிறன்பேசிகளின் மூலம் அதன் பயனாளிகளைச் சென்றடைந்ததும், காட்சி ஊடகங்களைவிட அச்சு ஊடகங்களைத்தான் அதிகமாக பாதித்தன.

அதன் அடுத்தகட்டமாக, சமூக ஊடகங்கள் அறிதிறன்பேசி வழியாகப் பயனாளிகளைச் சென்றடையும் நிலை ஏற்பட்டபோது, அச்சு ஊடகங்கள் மட்டுமல்ல; காட்சி ஊடகங்களேகூட பாதிப்பை எதிர்கொண்டன. சமூக ஊடகங்களின் பரவு வெறும் பொழுதுபோக்கும், வதந்தி பரப்புரைகளை மட்டுமே ஊடக இலக்கு என்பதுபோன்ற சூழலை ஏற்படுத்திவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொள்ளை நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவால் விளம்பர வருவாய் கணிசமாகக் குறைந்துவிட்டது. ஏற்கனவே காட்சி, எண்ம, சமூக ஊடகங்களின் சவாலை அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டது போதாதென்று அச்சுக் காகித விலை உயர்வால் இப்போது அதன் அடித்தளமே ஆட்டம் காணும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் பிரச்சனையால் சீனாவில் இயங்கிய பல காகிதத் தொழிற்சாலைகள்

மூடப்பட்டுவிட்டன. அமெரிக்காவும் தனது நாட்டிலுள்ள காகிதத் தொழிற்சாலைகளை ஏற்கனவே குறைத்துக் கொண்டுவிட்டது. அமேசான் காட்டில் ஏற்பட்ட தீயால் மரங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால், தென் அமெரிக்க நாடுகளில் அச்சுக் காகிதத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இறக்குமதிக் காகிதத்தின் விலையை ஏற்கனவே அதிகரிக்கச் செய்துள்ளன.

உலகிலேயே மிக அதிகமாக அச்சுக் காகிதம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். நமது இறக்குமதியில் 45ரூ ரஷியாவிலிருந்துதான் பெறப்படுகிறது. தற்போதைய ரஷியா - உக்ரைன் போருக்குப் பிறகு, அன்றாடம் பத்திரிகைகளை வெளிக்கொணர காகிதம் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலைமைக்கு இந்திய அச்சு ஊடகங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.

ரஷியப் பொருள்கள் மீதான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடையால் அச்சுக் காகிதம் ஏற்றிக்கொண்டு வரும் கப்பல்கள் பல ஆங்காங்கே தடைபட்டு நிற்கின்றன. ஃபின்லாந்து நாட்டில், தொழிலாளர்கள் போராட்டத்தால் அச்சுக் காகித உற்பத்தி முடங்கி இருக்கிறது. கனடாவில் நடக்கும் சரக்கு வாகன வேலை நிறுத்தத்தால், அங்கிருந்து வரும் காகிதமும் தடைபட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கப்பல் சரக்குக் கட்டணம் 400ரூ க்கும் அதிகமாகி இருக்கிறது. அதன் விளைவாக இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை ஏற்கனவே அதிகரித்திருந்த நிலைமை. 2019 இல் கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு, டன் ஒன்றுக்கு 450 டாலராக இருந்த இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை கடந்த மாதம் 950 டாலராக உயர்ந்து, இப்போது 1,100 டாலராக உயர்ந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இறக்குமதி அச்சுக் காகிதத்தின் விலை டன் ஒன்றுக்கு 300 டாலர் உயர்ந்திருக்கிறது.

இறக்குமதி அச்சுக் காகிதம் அப்படியென்றால், உள்ளூரில் அச்சுக் காகிதத் தயாரிப்பு கணிசமாகக் குறைந்துவிட்டதை என்னவென்பது? இணைய வர்த்தகத்தின் அதிகரிப்பால் பெரும்பாலான அச்சுக் காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக லாபம் கிடைக்கும் அட்டைப் பெட்டித் தயாரிப்பில் இறங்கிவிட்டன. தயாரிக்கப்படும் அச்சுக் காகிதங்களைப் பெரிய பத்திரிகைகள் மொத்தமாக வாங்கிவிடுவதால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அச்சு ஊடகங்கள் இறக்குமதிக் காகிதத்தை நம்பித்தான் தங்கள் பத்திரிகைகளை வெளிக்கொணர வேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

அச்சு ஊடகங்கள் அழிந்தால், செய்திகளின் நம்பகத்தன்மை குலையும் என்பது மட்டுமல்ல; ஆழ்ந்து கவனக்குவிப்புடன் படிக்கும் பழக்கம் இல்லாமல் போகும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். காட்சி ஊடகங்களும், சமூக ஊடகங்களும் விளம்பரப்படுத்தவும், பொய்ப் பிரசாரத்துக்கும் பயன்படலாம். ஆனால், ஆக்கபூர்வ சமூக மாற்றங்களுக்கும், அரசியல் செயல்பாட்டுக்கும் அச்சு ஊடகங்கள் இன்றியமையாதவை.

அச்சு ஊடகங்களின் அழிவில் பொறுப்பேற்புடன் கூடிய நம்பகத்தன்மையும் அழிந்துவிடும் என்பதை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் உணர வேண்டும். காகிதத்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதும், அரசு விளம்பரங்கள் மூலம் அச்சு ஊடகங்களைப் பாதுகாப்பதும் உடனடி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

காட்சிகள் கனவாகிப் போகும்; வார்த்தைகள் காற்றோடு போகும்; எழுத்து மட்டும்தான் நிலைத்து நிற்கும் என்பதை வரலாறு உணர்த்தி இருக்கிறது. இனியும் உணர்த்தும்!

எழுத்துகள் நம்மை எழுப்பட்டும்! ‘நம் வாழ்வுஅதற்கு என்றும் துணை நிற்கட்டும்!