Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் பாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறு (திப 13:14, 43-52, திவெ 7:9, 14-17, யோவா 10:27-30)
Wednesday, 04 May 2022 07:01 am

Namvazhvu

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் 4 ஆம் ஞாயிறானது நம் அனைவரையும் ஆண்டவரின் குரலுக்கு செவிமடுத்து அவரின் மக்களாக வாழ அழைப்புவிடுக்கின்றது. எனது ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கின்றன என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இவ்வாறு கூறுவதன் வழியாக இரண்டு உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறார். ஒன்று, எனது ஆடுகள் மட்டுமே என் குரலுக்கு செவிசாய்க்கும், இரண்டாவது, என் குரலுக்கு செவிசாய்க்காதவை எனது ஆடுகளாக இருக்கமுடியாது. இதுதான் உண்மையெனில், எதற்காக அந்த நல்ல ஆயன் தனது குரலுக்கு செவிமடுத்த தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, தனது குரலுக்கு செவிமடுக்காத தொலைந்துபோன அந்த ஒரு ஆட்டைத் தேடி ஓட வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக நம்மில் எழும். தனது குரலுக்கு செவிமடுக்காமல் தொலைந்துகொண்டே இருக்கும் ஆடுகளையும் கூட இறைவன் தேடித் தேடி கண்டுபிடித்து அவற்றை மீண்டும் தன் மந்தையில் சேர்க்கிறார். இவ்வாறு இறுதிவரை தன் குரலுக்குச் செவிமடுக்காத ஆடுகளுக்கும் இறைவன் தனது மந்தையில்  இடம் தருகிறார். இவ்வாறு இறுதித் தீர்வை வரை அந்த நல்லாயன் தனது குரலை உணர்ந்து கொள்ளாத ஆடுகளுக்கு வாய்ப்பை கொடுத்துகொண்டே இருக்கிறார்.

இறுதி தீர்வையின்போது தனது குரலுக்கு செவிமடுத்த செம்மறியாடுகள், தனது குரலுக்கு செவிமடுக்கா வெள்ளாடுகள் என பிரித்து, தன் மந்தைக்கு முடிவில்லா இன்பம் தரக்கூடிய நிலைவாழ்வையும், தனக்கு செவிமடுக்கா அலகையின் மந்தைக்கு முடிவில்லா சாவையும் தருகிறார். இன்று நாம் எந்த மந்தையில் இருக்கிறோம்? ஆண்டவரின் குரலைக் கேட்டு நிலைவாழ்வை பெறப்போகிற நல்லாயனின் மந்தையில் இருக்கிறோமா? அல்லது முடிவில்லா சாவைப் பெறப்போகிற அலகையின் மந்தையில் இருக்கிறோமா? என்று சிந்தித்தவர்களாய் இத்திருப்பலியில் இறைவனை மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

பவுலும் பர்னபாவும், முதலில் யூதர்களுக்கு தான் இறைவார்த்தையை அறிவிக்க விரும்பினார்கள். அம்மக்கள் இறைவார்த்தைக்கு செவிமடுக்க விரும்பாததால் அது பிற இனத்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது எனக்கூறும் இம் முதல் வாசகத்தைக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மீட்பிற்காக தன்னையே கையளித்த அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்தெடுத்த வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள் மட்டுமே இறைவனின் அரியணைக்கு முன்பாக நிற்க தகுதி பெற்றவர்கள் எனக்கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்துலகோரின் கடவுளே! உம் திரு அவையானது மொழி, இனம், சாதி, மதம் கடந்து, எல்லா மக்களுக்கும் உமது வார்த்தையை அறிவித்து, உமது இறையாட்சியை நோக்கி வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞாலத்தை காப்பவரே! எம் நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மொழி மற்றும் மதவெறுப்பு வாக்குவாதங்கள் குறைந்து அனைவரும் சகோதர உள்ளத்தோடு பழகவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.வாழ்வை வழங்குபவரே! எங்கள் பங்குத்தந்தை வழியாகவும், பெரியவர்கள் வழியாகவும் நீர் எங்களுக்கு அளிக்கும் அறிவுரைகளுக்கு நாங்கள் கவனமுடன் செவிமடுத்து உமக்கு உகந்த மக்களாக வாழவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் விண்ணகத் தந்தையே! எமது வீட்டிலும், பங்கிலும் இருக்கும் எம் இளையோர்கள், உமது வார்த்தையை வாசித்து, அதற்கேற்றவாறு தங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இறைவா மன்றாடுகிறோம்.

5. எங்கள் பரம தந்தையே! இன்றும், உமது திருமகனிலும், அவரது வார்த்தையிலும் நம்பிக்கை இல்லாமல் உம்மை விட்டு பிரிந்து வாழும் மக்களுக்கு, நீர் உறுதியான மனதிடன் தந்து, உமது மந்தையில் சேர்த்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.