ஆட்டுக்குட்டி - ஆயன்: அவரும் நானும்
பாஸ்கா காலம் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாகக் கொண்டாடுகிறோம். இந்த நாள் தான் பணிக்குருத்துவம் மற்றும் துறவற வாழ்விற்கான அழைப்பு என சிறப்பிக்கப்படுகின்றது. இறைவன் தன் மனதிற்கேற்ற நல்ல ஆண்-பெண் ஆயர்களைத் தரவேண்டுமெனவும், இந்தப் பணியை ஏற்றிருக்கும் அனைவரும் இயேசுவை தனிப்பெரும் தலைவராகக் கொண்டு செயல்படவும், இன்றைய நாளில் சிறப்பாகச் செபிப்போம்.
இன்றைய வாசகங்களை இணைக்கும் வார்த்தைகள் மூன்று: அ. அறிந்திருத்தல், ஆ. செவிமடுத்தல், இ. பின்பற்றுதல்.
இன்றைய நற்செய்தி வாசகம் யோவான் நற்செய்தி பிரிவு 10 இன் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆட்டுக்கொட்டில் (10:1-1-6), ஆயன் (10:1-18) என உருவகங்கள் வழியாக இயேசு பேச, அது யூதர்களின் காதுகளுக்கு எட்டிக்காயாகக் கசக்கின்றது. இந்தக் காதுகள் யாவே இறைவனை அல்லது ஆண்டவரை மட்டுமே ஆயன் என்று கேட்டு (காண். திபா 23) பழக்கப்பட்ட காதுகள். இந்த நெருடலால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் (10:19-21). இருந்தாலும், ஒருவேளை இவர்தான் மெசியாவாக இருப்பாரோ? என்ற கேள்வியும் சிலருக்கு எழுகின்றது (10:22-26). இந்தக் கேள்வியின் பின்புலத்தில் ‘நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை’ (10:26) என்று அவர்களைச் சாடிவிட்டு, தன் மந்தையைச் சார்ந்த ஆடுகள் என்ன செய்வார்கள் என்று சொல்கின்றார் இயேசு (10:27-30).
முதலில், ‘அறிதல்’ அல்லது ‘அறிந்திருத்தல்’ என்பதன் பொருளைப் பார்ப்போம். ‘நான் அறிகிறேன்’ (கினோஸ்கோ) என்ற கிரேக்க வார்த்தையை (தன்மை ஒருமை நிகழ்காலம்) இரண்டாம் ஏற்பாட்டில் ஏழு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. யோவான் நற்செய்தியாளர் இந்த வார்த்தையை 3 முறை பயன்படுத்துகின்றார். இந்த 3 முறையும் இயேசுவை நல்லாயனாக உருவகிக்கும் 10 ஆம் பிரிவில்தான் பயன்படுத்துகின்றார் (10:14, 15, 25). லூக்கா இரண்டு முறை - ஒருமுறை நற்செய்தியிலும் (1:34), ஒருமுறை திருத்தூதர்பணிகளிலும் (19:15), பவுல் இரண்டு முறை - உரோ 7:15, 1 கொரி 13:12 பயன்படுத்துகின்றனர்.
இந்த வார்த்தைப் பயன்பாட்டை வைத்து ‘அறிதல்’ என்பது மூன்று அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது என்று நாம் அறிகிறோம்(!):
1. ‘அறிதல்’ என்றால் ‘திருமண உறவு கொள்ளுதல்.’ ‘நான் கணவனை அறியேனே’ (லூக்கா 1:34) என்று மரியா வானதூதரிடம் சொல்லும்போதும், ‘ஆதாம் ஏவாளை அறிந்தான்’ (தொநூ 4:1) என்ற இடத்திலும், ‘அறிதல்’ என்பது ‘திருமண உறவு அல்லது உடலுறவு கொள்ளுதலை’ குறிக்கின்றது.
2. ‘அறிதல்’ என்றால் ‘புரிந்து கொள்ளுதல்.’ ‘நான் செய்வது இன்னதென்று நானே அறிவதில்லை’ (உரோ 7:15) என்று புலம்பும் பவுல், இங்கே ‘நான் செய்வது இன்னதென்று எனக்கே புரியவில்லை’ என்று சொல்கின்றார். இதே அர்த்தத்தில்தான் 1 கொரி 13:12, ‘இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன் - புரிந்து கொள்கிறேன்’ என எழுதுகின்றார்.
3. ‘அறிதல்’ என்றால் ‘அறிமுகமாயிருத்தல்’ அல்லது ‘அருகிருத்தல்’ அல்லது ‘அந்நியோன்யமாய் இருத்தல்’. இந்த அர்த்தத்தில்தான் யோவான் இயேசுவின் அறிதலை முன்வைக்கின்றார். தான் ஆடுகளை அறிந்திருத்தலைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம், இயேசு தான் தந்தையை அறிந்திருத்தலையும் சொல்கின்றார். இங்கே ‘திருமண உறவு’ என்ற அர்த்தம் அறவே இல்லை. ‘புரிந்து கொள்ளுதல்’ என்ற அர்த்தம் கொஞ்சமாக இருக்கிறது. இவை இரண்டிற்கும் மேலாக, ‘அருகிருத்தல்’ அல்லது ‘நெருக்கமாக இருத்தல்’ என்ற அர்த்தம்தான் இங்கே மேலோங்கி நிற்கின்றது. ஆங்கிலத்தில் ‘டு நோ’ என்ற வினைச்சொல்லை ஒட்டுமொத்தமாக ‘அறிதல்’ என மொழிபெயர்க்கின்றோம். இத்தாலியன் மொழியில் இதற்கு இரண்டு வினைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஒன்று: ‘சபேரே’ (‘மூளை சார்ந்த அறிவு’). உதாரணத்திற்கு இசைக்கருவிகள் மீட்டும் அறிவு, மொழி அறிவு, பொது அறிவு, பீட்சாவுக்கு எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் என்ற அறிவு. இரண்டு: ‘கொனோஸரே’ (‘மனம் சார்ந்த அறிவு’). நண்பர்களை அறிவது, புதியவர்களுக்கு அறிமுகம் ஆவது போன்றவை.
இந்த அறிதலை, ‘பயன்’ மற்றும் ‘உணர்வு’ என்ற அடிப்படையில் இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். முதலில் பயன்: காம்பியா நாடு எங்கே இருக்கிறது என்ற அறிவினாலோ, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை யார் முறியடித்தார் என்ற அறிவினாலோ, பத்ம பூஷன் விருது ஒருவருக்கு ஏன் வழங்கப்பட்டது என்ற அறிவினாலோ நமக்கு பயன் ஏதும் இருக்கிறதா? (ஒருவேளை பொது அறிவு தேர்வுக்குப் பயன்படலாம்!) இல்லை. இந்த அறிவு நம் வாழ்வின்மேல் எந்தவொரு தாக்கத்தையும் நேரிடையாக ஏற்படுத்துவதில்லை. ஆனால், அழுது கொண்டிருக்கின்ற ஒரு குழந்தைக்கு அல்லது பசியால் வாடும் ஒரு குழந்தைக்கு அம்மா எங்கே இருக்கிறாள் என்ற அறிவு முக்கியமானது. அந்த அறிவு உடனடியாகக் குழந்தையைப் பாதிக்கிறது. அவள் நெருக்கமாய் இருக்கிறாள் என்ற அறிவு குழந்தைக்கு ஆறுதலாகவும், அவள் தூரமாக இருக்கிறாள் என்ற அறிவு பதற்றமாகவும் இருக்கிறது. இரண்டாவது உணர்வு: உணர்வு என்பது மூளை சார்ந்ததே என்றாலும், நாம் உணர்வை இதயம் சார்ந்ததாகவே பார்க்கிறோம். அந்த வகையில், முதல் வகை அறிவு மூளை சார்ந்தது. இரண்டாம் வகை அறிவு இதயம் சார்ந்தது. முதல் வகை அறிவால் நம் உணர்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால், இரண்டாம் வகை அறிவில் நம் உணர்வு அதிகமாகவே பாதிக்கப்படுகிறது.
மற்றொரு வார்த்தையில் சொன்னால், ‘ஒன்றை அறிவது’ அல்லது ‘ஒன்றைப் பற்றி அறிவது’ என்று சொல்லலாம். சோனி மியூசிக் ப்ளேயரில் பாட்டு கேட்டால் நன்றாக இருக்கும் என்று, நண்பன் சொல்லிக் கேட்பது என்பது, ‘சோனி மியூசிக் ப்ளேயர் பற்றி அறிவது’. நானாகவே பாடலைக் கேட்டு இரசித்தல் என்பது, ‘சோனி மியூசிக் ப்ளேயரை அறிவது.’
மொத்தத்தில் இயேசு என்னும் ஆயனின் அறிதல் என்பது ஒரு தாய், தன் குழந்தையை அறிதலைப் போன்றது.
இரண்டாவதாக: செவிமடுத்தல். “இஸ்ரயேலே, செவிகொடு. நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே...” (இச 6:4) என்ற முதன்மைக் கட்டளையின் பின்புலத்தில் பார்த்தால், ‘செவிகொடுத்தல்’ என்பதற்கு, ‘கேட்டல்’ என்றும், ‘கீழ்ப்படிதல்’ என்றும், இரண்டு பொருள் கொள்ளலாம். இந்த இரண்டு பொருளிலும் யோவான் நற்செய்தியாளர் ‘அகூவோ’ என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்: “அவர்கள் அப்பெண்ணிடம், ‘இப்போது உன் பேச்சைக் கேட்டு (‘காதால் கேட்டு’) நாங்கள் நம்பவில்லை. நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம்’ என்றார்கள்” (4:42). “என் வார்த்தையைக் கேட்டு (‘கீழ்ப்படிந்து’) என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்” (5:24). இயேசுவின் உருமாற்ற நிகழ்வின்போது, கேட்கின்ற தந்தையின் குரல், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” (மத் 17:5). இங்கே ‘செவிசாயுங்கள்’ என்ற வினைச்சொல்லில், ‘கேளுங்கள்,’ ‘கீழ்ப்படியுங்கள்,’ ‘பின்பற்றுங்கள்’ என்ற மூன்று பொருள்கள் மறைந்திருக்கின்றன.
நம் மூளைக்குள் செல்லும் தகவல்கள் அதிகமாக நம் பார்வை மற்றும் கேட்டல் வழியாகச் செல்கின்றன. கண்களை இமைகளைக் கொண்டு மூடுவதன் வழியாக நாம் பார்வையைக் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், காதுகளை
மூடுவதற்கு நம் முழு முயற்சி தேவை. காதுகளை மூடுவதற்கு நாம் நம் மனத்தை மூட வேண்டும். அதாவது, எதைக் கேட்க வேண்டும், எதைக் கேட்கக் கூடாது என்று நம் மனத்திற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆக, செவிமடுத்தலில் காதுகளைவிட, நம் மூளைக்குத்தான் அதிக வேலை இருக்கிறது. நம்
மூளை கேட்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். கேட்டதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். கேட்டதை செயல்படுத்த வேண்டும்.
ஆடுகள் செய்ய வேண்டிய வேலை இதுதான் ‘செவிமடுத்தல்.’ ஆடுகளைப் பற்றி கூகுள் செய்து பார்த்ததில், ஆடுகள் தாங்கள் பார்ப்பதை வைத்து அறிவதைவிட, கேட்பதை வைத்துத்தான் அதிகம் அறிகின்றன என்று கண்டேன். மேலும், தூரம் அதிகமாகும்போது பார்த்தலைவிட, கேட்டலே சாத்தியமாகிறது.
மூன்றாவதாக: ‘பின்பற்றுதல்’ யோவான் நற்செய்தியில் ‘பின்பற்றுதல்’ (அகோலுதுவோ) என்பது மிக முக்கியமான வார்த்தை. முதற்சீடர்கள் செய்த முதல் வேலையும் இதுதான் (1:40). இறுதியாக, பேதுருவிடம் பேசும் வார்த்தையும் இதுதான் (21:19). ‘பின்பற்றுதல்’ என்பது, இயேசுவின் சீடராக இருப்பதை அல்லது இயேசுவுக்கு ஒத்திருப்பதைக் குறிக்கிறது.
அறிந்திருத்தல் - செவிமடுத்தல் - பின்பற்றுதல் என்னும் மூன்று வார்த்தைகளில், ஆயனின் வேலை அறிந்திருத்தல். ஆடுகளின் வேலை செவிமடுத்தலும், பின்பற்றுதலும்.
இப்படி ஆடுகள் செவிகொடுப்பதாலும், பின்பற்றுவதாலும் என்ன நடக்கிறது?
அ. ஆடுகள் நிலைவாழ்வைப் பெறுகின்றன - அவை என்றுமே அழியா
ஆ. அவற்றை யாரும் எனது கையிலிருந்து பறித்துக் கொள்ள முடியாது
‘நிலைவாழ்வு’ என்பது இங்கே ‘நிறைவாழ்வு’ அல்லது ‘இறைவாழ்வு’ என்ற பொருளில்தான் எடுக்கப்பட வேண்டும். இறப்பிற்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய புரிதல், இது எழுதப்பட்ட காலத்தில் இன்னும் முழுமையாக வளரவில்லை. ‘அவை என்றுமே அழியா’. ‘அவைகளை யாருமே பறித்துக்கொள்ள முடியாது’ - ஆக, தங்களாலும் அவர்களுக்கு அழிவில்லை, பிறராலும் அழிவில்லை. அவர்களுக்கு நிறைய உணவு கிடைக்கும். நோய் நீங்கி இருப்பார்கள். எதிரிகள் மற்றும் திருடர்களின் தொந்தரவும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆக, உணவு, உடல்நலம், பாதுகாப்பு என்ற மூன்று தேவைகளை உறுதி செய்கிறார் இயேசு.
இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்திலும் பார்க்கின்றோம். மானிட மகன் என்னும் ஆட்டுக்குட்டியைக் காட்சியில் காண்கின்றார் யோவான். யாரெல்லாம் தங்கள் ஆடைகளை இந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் நனைத்துக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் ஆட்டுக்குட்டி தரும் பாதுகாப்பைப் பெறுகின்றனர். பசியிலிருந்தும், இறப்பிலிருந்தும் காப்பாற்றப்படுகின்றனர்.
தொடர்ந்து, “என் தந்தையின் கையிலிருந்து அவற்றை பறித்துக்கொள்ள முடியாது” என்கிறார். ஆக இரட்டிப்பு பாதுகாப்பு. இயேசுவின் கையில் இருக்கும் ஆட்டை, தந்தையும் அரவணைத்துக்கொள்கிறார்.
இறுதியாக, “நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” - இந்த ஒன்றாய் இருத்தல் “ஆயனும், ஆடுகளும் ஒன்றாய் இருப்பதற்கான” அழைப்பாக இருக்கின்றது. ‘ஒன்றாய் இருத்தல்’ என்பது ‘ஒன்றுபோல இருத்தல்’ அல்ல; மாறாக, இரண்டும் ஒன்றென ஆவது. ‘போல’ இருப்பது என்பதிலிருந்துதான், ‘போலியாக’ இருப்பது உருவாகிறது. ஆனால், ஒன்றென இருத்தலில் போலிக்கு இடமில்லை. இயேசுவைப் போல நாம் இருக்கத் தேவையில்லை. அவ்வளவு ஏன், நாம் யாரைப்போலவும் இருக்கத் தேவையில்லை. ஆனால், இயேசுவும் நானும் ஒன்றென வாழ்தல் சால்பு.
இவ்வாறாக, இயேசு ஆட்டுக்குட்டியும், ஆயனுமாக இருக்கின்றார்.
1. ஆயனின் குரலுக்கு நாம் செவிகொடுக்க மறுத்தால், ஆயன் வேறு மந்தையைத் தேடிப் போய்விடுவான். தன் குரலுக்குச் செவிகொடுக்கும் ஆடுகளைத் தேடிச் செல்வான். இதைத்தான் திருத்தூதர்கள் பவுலும், பர்னபாவும் செய்கின்றனர். யூதர்கள் இயேசு என்னும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்’ என்ற எண்ணம் அவர்களின் கோப்பையை நிறைத்திருந்ததால், புதிய தண்ணீரை அவர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்கள் மறுத்ததால் நற்செய்தி புறவினத்தார் நோக்கிச் செல்கின்றது. ஆக, ஆட்டுக்குட்டிகளாகிய நாம், நம் ஆயனின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லையென்றால், அவரைப் பின்பற்றவில்லையென்றால், நம் ஆயனையே இழந்துவிடும் அபாயம் இருக்கின்றது.
2. இன்று ‘அறிதல் - செவிமடுத்தல் - பின்பற்றுதல்’ என்பது ‘ஃபேஸ்புக் - வாட்ஸ்ஆப் - டுவிட்டர்’ என மாறிவிட்டது. நம் நண்பர்களை, நண்பர்களின் நண்பர்களை ப்ரொஃபைல் கொண்டு அறிகிறோம். அவர்களின் குரலை வாட்ஸ்ஆப்பில் கேட்கின்றோம். அவர்களை நாம் டுவிட்டரில் பின்பற்றுகிறோம். பொருளைச் சுருக்கியதுபோல, நம் உள்ளங்களையும் சுருக்கிவிட்டோம். எனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவில் இந்த மூன்று வார்த்தைகள் எப்படி இருக்கின்றன? இறைவனைப் பற்றிய எனது அறிதல் சிறுவயது மறைக்கல்வியோடு முடிந்துவிட்டதா? அல்லது அவரை நான் திருநூலிலும், வாழ்க்கை அனுபவங்களிலும் இன்னும் அறிகின்றேனா? அவருக்கு நான் செவிமடுப்பது எதற்காக? அவரை நான் எப்போது, ஏன் பின்பற்றுகிறேன்? எல்லா நாட்களிலுமா? அல்லது என் பயணம் கஷ்டமாக இருக்கும் நாட்களில் மட்டுமா? அவரின் குரலை மற்ற குரல்களிலிருந்து என்னால் வேறுபடுத்த முடிகிறதா?
3. இயேசு என்னும் ஆயன் தான்கொடுக்கும் ‘உணவு - உடல்நலம் - பாதுகாப்பு’ என்னும் வாக்குறுதிகளை நிறைவு செய்கின்றார். இன்று இந்த வாக்குறுதிகளை நம் குடும்பத்திலும்,
சமூகத்திலும் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கின்றோம். ஆனால், அவற்றை நிறைவு செய்கின்றோமா? ஆயன் என்ற பொறுப்பை குடும்பத்தில் நாம் எப்படி நிறைவேற்றுகிறோம்? இன்று ஓட்டுக்களைக் கேட்டு நம் தெருக்களில் வரும் ஆயன்களில், எந்த ஆயன் நம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்? அவரை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது? ‘நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்’ என்று இயேசு சொன்னது போல, இந்த வேட்பாளர்கள் நம்மைப் பார்த்துச் சொல்ல முடியுமா? அவர்கள் மேலே இருக்கிறார்கள் - நாம் கீழே இருக்கிறோம் - ஒன்றாக என்றுமே இருந்ததில்லையே!
4. ‘என் ஆடுகள் நிலைவாழ்வைப் பெறும்’ என்று இயேசு சொல்கின்றாரே. இந்த நிலைவாழ்வை அல்லது நிறைவாழ்வை நாம் எப்படி மதிப்பிடுவது? ‘மகிழ்ச்சி’ என்ற அளவுகோலால்தான் மதிப்பிட முடியும். இன்றைய முதல் வாசகத்தில், பவுல் மற்றும் பர்னபா அறிவித்த வார்த்தைகளைக் கேட்டவுடன் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதாவது, இவ்வளவு நாள்கள் அவர்கள் எவ்வளவோ போதனையைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுதான் மகிழ்ச்சி தரும் போதனையைக் கேட்கிறார்கள். ஆக, இன்று நம்மை நோக்கி வரும் ஆயனின் குரல்கள் பல இருக்கலாம். ஆனால், எது நமக்கு மகிழ்ச்சி தருகிறதோ அதுவே நல்லாயனின் குரல். சில குரல்கள் நம்மைக் கண்டிக்கும். சில குரல்கள் நம் மனத்தைக் குத்தும். சில குரல்கள் ஏன்டா கேட்டோம் என்று சொல்வது போல இருக்கும். ஆனால், வெகுசில குரல்களோ அல்லது நல்லாயனின் ஒரு குரல் மட்டுமே நம் ஆன்மாவைப் பண்படுத்தி, அங்கே மகிழ்வை விதைக்கும்.
5. அருள்பணி மற்றும் துறவற வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் நாளில், ‘செவிகொடுத்தலும், பின்பற்றுதலும்’ இன்று அருள்பணி இனியவர்களுக்கு இன்னும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இறையழைத்தல் முகாம் சென்ற முதல் நாள் கேட்ட இறைவனின் குரல், படிப்படியாக மறைந்து போகும் அபாயமும் அல்லது இறைவனின் குரலைக் கேட்கவிடாமல் நம் கவனத்தைத் திசைதிருப்பும் குரல்களும் எந்நேரமும் நம்மைச் சுற்றிக் கேட்கும். யாரின் கவனம் திசைதிரும்புகிறதோ, அவர் அல்லது அந்த ஆடு முன்னேறிச் செல்லமுடியாமல் தேக்க நிலையை அடைந்துவிடுகிறது. ‘வந்தவரைக்கும் போதும்!’ என்று, ஓய்ந்திடத் துணிகிறது. இதற்கு மாற்றாக பவுல், “விடாமுயற்சியோடும், ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்” (உரோ 12:11) என்கிறார். மேலும், ஏதோ ஒரு வாழ்க்கைச் சூழல் காரணமாக ஆயனின் குரலுக்குச் செவிமடுத்து, தொடர்ந்து பின்பற்ற முடியாமல் அல்லது பயணத்தில் சோர்வுற்ற ஆயன்களை (ஆடுகளை) நாம் கனிவோடும், பரிவோடும் பார்த்தல் வேண்டும்.